தமிழ்நாட்டில் தற்போது ஆளுங்கட்சியாக உள்ள தி.மு.க.விற்கு எப்போதுமே சவால் விடுக்கும் கட்சியாக இருப்பது அ.தி.மு.க. ஆனால். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அ.தி.மு.க.விற்கு போதாத காலம் என்றே சொல்ல வேண்டும். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு பல மோசமான சூழல் வந்தாலும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளத் தெரிந்த அ.தி.மு.க.விற்கு தேர்தல்களில் வெற்றி பெற முடியவில்லை என்பதுதான் உண்மை.
எட்டுத் தேர்தல் தோல்வி
சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஈரோடு இடைத்தேர்தலை வைத்து மட்டும் இதை கூற முடியாது. ஜெயலலிதா மறைவிற்கு அ.தி.மு.க. இதுவரை 8 தேர்தல்களை சந்தித்துள்ளது. அதில் எந்த தேர்தலிலுமே அ.தி.மு.க. வெற்றி பெறவில்லை. அதாவது, பெரும்பான்மையை பிடித்து அவர்கள்தான் வென்றார்கள் என்று கூறமுடியாது.
- ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஆர்.கே.நகரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. டெபாசிட் மட்டுமே பெற்றது. 2017ம் ஆண்டு நடைபெற்ற அந்த தேர்தலில் ஆளுங்கட்சி அ.தி.மு.க. சுயேட்சை வேட்பாளர் தினகரனிடம் தோற்றது.
- 2019ம் ஆண்டு ஆளுங்கட்சி அ.தி.மு.க. நாடாளுமன்ற தேர்தலில் 40 சீட்டுகளில் 1 சீட்டு மட்டும் வெற்றி பெற்று 39 இடங்களை தி.மு.க.விடம் தாரை வார்த்தது.
- 2019ம் ஆண்டு ஆட்சியை தீர்மானிப்பதற்கான 22 இடங்களில் ஆட்சியை தக்கவைப்பதற்கான இடங்களை மட்டும் பிடித்து பெரும்பான்மையான இடங்களை தி.மு.க.விடம் இழந்தது.
- 2021ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க.விடம் படுதோல்வி அடைந்து ஆட்சியையே இழந்தது.
- தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பான்மையை தி.மு.க.வே கைப்பற்றியது.
- 2022ம் ஆண்டு நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அத்தனை மாநகராட்சியும் தி.மு..க வசம் சென்றது
- தற்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் டெபாசிட் வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி வசம் அ.தி.மு.க. சென்ற பிறகு தோல்வி மேல் தோல்வியை அ.தி.மு.க. சந்தித்துக்கொண்டிருக்கிறது. ஓ பன்னீர்செல்வம் இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள தயாராகிக் கொண்டிருக்கிறார். மேலும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தோல்வி அவருக்கு ஏற்கனவே உள்ள நெருக்கடியை அதிகரிக்கச் செய்துள்ளது.
மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
இந்த பரபரப்பான சூழலில் எடப்பாடி பழனிசாமி வரும் 9-ந் தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். நீதிமன்ற தீர்ப்பை வைத்துக்கொண்டு கட்சியை தன்வசம் வைத்துக்கொண்டாலும், தேர்தல்களில் வெற்றி பெற்றால் மட்டுமே கட்சியை தொடர்ந்து வழிநடத்தும். கொங்கு மண்டல ஆதரவை வைத்துக்கொண்டு மட்டும் கட்சியை கட்டுப்படுத்திவிடலாம் என்று எடப்பாடியார் கணக்கு போட்டால் அது கட்சியை கட்டுப்படுத்த கைகொடுக்குமே தவிர, தேர்தல்களில் வெற்றி பெற எந்தவிதத்திலும் கைகொடுக்காது.
ஏனென்றால், கொங்கு மண்டலத்தை கைப்பற்ற தி.மு.க.வும் ஒரு முனையில் தீவிரமாக களமிறங்கி வேலை பார்த்து வருகிறது. தோல்வி மேல் தோல்வி, சசிகலா, தினகரன், ஓ.பி.எஸ் என மூன்று தரப்பு நெருக்கடி ஆகிய பிரச்சிகனைகளை எதிர்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் தனது தலைமையை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
என்ன செய்யப்போகிறார் எடப்பாடி? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ALSO READ | தமிழ்நாடு பாதுகாப்பா இருக்கு.. பயப்படாதீங்க.. பீகாரில் இருந்து வந்த டாப் புள்ளி.. பரபர பேட்டி