நியூயார்க் : சூடான் நாடும் ஐக்கிய அரபு அமீரகம், மற்றும் பஹ்ரேனை பின்பற்றி இஸ்ரேலுடன் ராஜாங்க உறவை மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். சமீபத்தில் மத்திய கிழக்கில் நான்காவது நாடாக ஐக்கிய அரபு அமீரகம் இஸ்ரேலை அங்கீகரித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
1948 ஆம் ஆண்டு பாலஸ்தீனத்தில் இருந்து பிரித்து இஸ்ரேல் உருவாக்கப்பட்டது. இதற்கு மத்திய கிழக்கில் உள்ள அணைத்து அரபு நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இஸ்ரேலை அங்கீகரிக்க மறுத்து அந்த நாட்டுடன் எந்த ஒரு ராஜாங்க உறவும் வைத்துக்கொள்ள முடியாது என்றும் அறிவித்தன. இஸ்ரேலுக்கு எதிராக ஈராக், ஜோர்டான், சிரியா, எகிப்து உள்ளிட்ட நாடுகளும் போரில் ஈடுபட்டன. அந்த போரில் இஸ்ரேல் வெற்றி பெற்றது. பின்னர் 1979 முதல் எகிப்து மத்திய கிழக்கில் முதல் நாடாக இஸ்ரேலை அங்கீகரிக்க தொடங்கியது. அதன்பின்னர் 15 ஆண்டுகள் கழித்து ஜோர்டான் நாடும் இஸ்ரேலை அங்கீகரித்து அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
அதன் பின்னர் எந்த மத்திய கிழக்கு நாடுகளும் இஸ்ரேலை அங்கீகரிக்கவில்லை. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முயற்சியால் சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் நாடுகளும் இஸ்ரேலை அங்கீகரித்து அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதை தொடர்ந்து தூதரக உறவுகளையும், போக்குவரத்து தொடர்பும் இரு நாடுகளுக்கும் இடையே தொடங்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்திற்கு மறைமுக ஆதரவை தெரிவிக்கும் விதமாக சவுதியும் இஸ்ரேல் செல்லும் விமானங்கள் தங்கள் வான் எல்லையில் பறந்து செல்ல அனுமதி வழங்கியது. ஆனால் இந்த ஒப்பந்தத்திற்கு பாலஸ்தீனம் கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இது முதுகில் குத்தும் செயல் என்றும் கூறியிருந்தது.
இந்த நிலையில் தான் ஐக்கிய அரபு அமீரகம், மற்றும் பஹ்ரேனை பின்பற்றி சூடான் நாடும் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். சூடான் இஸ்ரேலுடன் சாதாரண உறவை மேற்கொள்ள வேண்டும், இதன்மூலம் அமெரிக்கவின் கோரிக்கையை ஏற்று இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட போகும் மூன்றாவது நாடாக சூடான் இருக்கும் என்றார்.
இந்த உறவு மேற்கு நாடுகளுடனான சூடானின் உறவை பலப்படுத்தும். மேலும் தீவிரவாத தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட அமெரிக்கர்களுக்கு இழப்பீடு வழங்கினால் சூடானை பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்றும் டிரம்ப்பின் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. ஒருவேளை இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால் தேர்தல் சமயத்தில் டிரம்பின் வெளியுறவு கொள்கையில் மற்றொரு சாதனையாக பார்க்கப்படும்.
ஒவ்வொருமுறையும் இஸ்ரேல் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் பொழுதும் பாலஸ்தீனத்தில் தன்னுடைய ஆக்கிரமிப்பை நிறுத்துவதாக வாக்குறுதி கொடுக்கும் ஆனால் அது சில காலம் மட்டுமே நீடிக்கும் மீண்டும் இஸ்ரேல் தன்னுடைய வேலையை தொடங்கிவிடும் என்பது பாலஸ்தீனத்தின் குற்றச்சாட்டு. இப்போது ஐக்கிய அரபு நாடுகள் உடனான ஒப்பந்தத்தின் போதும் இஸ்ரேல் தன்னுடைய ஆக்கிரமிப்பு நடவடிக்கையை நிறுத்துவதாக கூறியிருக்கிறது. ஆனால் எத்தனை நாட்கள் என்பதுதான் கேள்வியே .