வாஷிங்டன் : நவம்பர் 3ம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார் என்று தான் நம்புவதாகக் குறிக்கும் வகையில், இரண்டாவது டிரம்ப் நிர்வாகத்திற்கு சுமூகமான மாற்றம் ஏற்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ கூறியுள்ளார்.
நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பிடன் 290 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று இருந்தார். அதிபர் டிரம்ப் தோல்வியடைந்தார். ஆனால் டிரம்ப் தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்து வருகிறார். வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற்று இருப்பதாகவும், ஓட்டுப்போடும் நேரம் முடிவடைந்த பின்னர் வந்த தபால் வாக்குகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், வாக்கு எணிக்கை நியாயமாக நடைபெற்று இருந்தால் நான் தான் வெற்றி பெற்று இருப்பேன் என்றும் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.
இதற்கு எதிராக நீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டு அதில் காலம் தாழ்த்தி கொண்டு வரப்பட்ட தபால் ஓட்டுகளை மட்டும் தனியாக பிரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையில் டிரம்ப் சில அதிரடி நடவடிகைகைளை மேற்கொண்டார். அதன்படி இரண்டு நாட்களுக்கு முன்பு பென்டகனின் பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக டிரம்புக்கு நெருக்கமான ஒருவரை கொண்டுவந்தார். மேலும் இரண்டு பென்டகன் அதிகாரிகள் நீக்கப்பட்டனர். அவர்களுக்கு பதில் தன்னுடைய விசுவாசிகளை டிரம்ப் கொண்டு வந்தார். அதை தொடர்ந்து டிரம்ப் நிர்வாகத்தின் அட்டர்னி ஜெனரல் வில்லியம் பார், அரசு வக்கீல்கள் அனைவரும் ஒவ்வொரு மாகாணத்திலும், தேர்தல் முறைகேடு தொடர்பான சிறு ஆதாரம் கிடைத்தாலும் கூட அதை வைத்து வழக்கு தொடர வேண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
டிரம்பின் இந்த தொடர் நடவடிக்கைகள் அவர் சுமுகமான ஆட்சி மாற்றத்துக்கு இடம் கொடுக்கமாட்டார். ராணுவ நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளவும் வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் தான் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோவிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் கூறிய பம்பியோ இரண்டாவது டிரம்ப் நிர்வாகத்திற்கு ஒரு சுமுகமான மாற்றம் இருக்கும். நாங்கள் தயார். இங்கே என்ன நடக்கிறது என்பதை உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. நாங்கள் எல்லா வாக்குகளையும் எண்ணப் போகிறோம் என்றார்.
மேலும் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் தேர்தலில் வெற்றியாளராக அமெரிக்காவின் முக்கிய ஊடக நிறுவனங்களால் அவசரப்பட்டு அறிவிக்கப்பட்டு விட்டன. வெளியுறவுத்துறை இன்று செயல்படுவதை உறுதி செய்வதற்கு தேவையான மாற்றம் குறித்து உலகிற்கு எல்லா நம்பிக்கையும் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடைபெற்று இருப்பதாக சொல்லப்படும் பரவலான குற்றச்சாட்டுக்கு பதிலளித்த பாம்பியோ, உலகம் முழுவதிலும் இருந்து தனக்கு அழைப்புகள் வந்து கொண்டிருப்பதாக கூறினார்.
இந்த மக்கள் எங்கள் தேர்தலை கவனித்து வருகின்றனர். எங்களிடம் ஒரு சட்ட செயல்முறை உள்ளது என்பதையும் அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். . இது நேரம் எடுக்கும் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். 2000 ஆம் ஆண்டு ஒரு தேர்தலில் எங்களுக்கு 37க்குமேற்பட்ட நாட்கள் பிடித்தன, அப்போது வெற்றிகரமான மாற்றத்தை நாங்கள் செயல்படுத்தினோம். ஒவ்வொரு சட்ட வாக்குகளையும் நாம் எண்ண வேண்டும் என்று நான் நம்புகிறேன். சட்டப்பூர்வமற்ற எந்தவொரு வாக்குகளும் கணக்கிடப்படக்கூடாது என்பதை நாங்கள் உறுதி செய்ய வேண்டும். அது முறையற்ற முறையில் நடந்தால் அது உங்கள் வாக்குகளையும் நீர்த்துப்போகச் செய்யும் என்று கூறினார்.