Tuesday, March 28, 2023
Homeசெய்திகள்இந்தியாஅதிரடியாக கைது செய்யப்பட்ட அர்ணாப் கோஸ்வாமி.. இதான் காரணம்?

அதிரடியாக கைது செய்யப்பட்ட அர்ணாப் கோஸ்வாமி.. இதான் காரணம்?

மும்பை: ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியர் அர்ணாப் கோஸ்வாமி மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அர்ணாபை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்து சென்றதாக ரிபப்ளிக் தொலைக்காட்சி கூறியுள்ளது.

பிரபல செய்தி சேனலான ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியர் அர்ணாப் கோஸ்வாமி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கை மும்பை போலீசார் கையாண்ட விதம் குறித்து தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். அதை தொடர்ந்து ரிபப்ளிக் டிவி டிஆர்பி ரேட்டிங்கில் குழப்படி செய்து ஏமாற்றியதாக மும்பை போலீசாரும் குற்றம்சாட்டியிருந்தனர். இதனால் அர்னாப் மும்பை போலீசார் தன்னுடைய செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளர்கள் மீதுவன்மத்தை காட்டுகின்றனர், அவர்களுடைய கருத்தில் உண்மை இல்லையென்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தான் இன்று காலை பழைய வழக்கு ஒன்றில் அர்ணாபின் வீட்டிற்கே போலீசார் சென்று அவரை கைது செய்துள்ளனர். 2018 ஆம் ஆண்டு மும்பையை சேர்ந்த அன்வாய் நாயக் மற்றும் அவரது தாயார் குமுத் நாயக் ஆகியோர் தற்கொலை செய்துகொண்டனர். அர்ணாப் தங்களுக்குத் தர வேண்டிய ரூ. 5.40 கோடியை தராமல் ஏமாற்றி விட்டதாகவும், அதனால் தங்களுக்கு பொருளாதார ரீதியாக இழப்பு ஏற்பட்டதாகவும், அதை சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்வதாகவும் இருவரும் அவர்களுடைய தற்கொலை கடிதத்தில் எழுதி வைத்திருந்தனர். அதை தொடர்ந்து அர்ணாப் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்து வந்த ராய்காட் போலீஸார் இந்த வழக்கை மூடி விட்டனர். பின்னர் கடந்த மார்ச் மாதம் அன்வாயின் மகள் அடன்யா நாக், மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கை நேரில் சந்தித்து இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க கோரியதன் அடிப்படையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இந்த வழக்கில் தான் இன்று அர்ணாப் கைது செய்யப்பட்டுள்ளார். அர்ணாபை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்து சென்றதாக தகவலை மும்பை மாநகர போலீஸ் மறுத்துள்ளது.

இதுகுறித்து கருத்து கூறியுள்ள மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ஊடக சுதந்திரத்தின் மீதான இந்த தாக்குதலை நாங்கள் கண்டிக்கிறோம். இது எமர்ஜென்சி காலத்தை நினைவூட்டுகிறது அப்போது தான் ஊடகங்கள் இப்படி நடத்தப்பட்டது என்று கூறியுள்ளார். இந்த நிலையில் மகாராஷ்டிராவில் ஆளும் கட்சியான சிவசேனா இந்த கைதுக்கு பின்னால் எந்த உள்நோக்கமும் இல்லை என்று கூறியுள்ளது. மகாராஷ்டிராவில் சட்டம் முறையாக பின்பற்றப்படுகிறது, முறையான ஆதாரங்கள் இருந்தால் யார் மீதும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க முடியும். உத்தவ் தாக்கரே அரசாங்கம் அமைக்கப்பட்டதிலிருந்து, பழிவாங்குவதற்காகவும் யாருக்கும் எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மூத்த சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கூறினார்.