Tuesday, March 28, 2023
Homeசெய்திகள்உலகம்சீனாவால் ஏற்பட்ட உள்நாட்டு குழப்பம்.. கம்போடியாவிலும் வெடித்த போராட்டம்

சீனாவால் ஏற்பட்ட உள்நாட்டு குழப்பம்.. கம்போடியாவிலும் வெடித்த போராட்டம்

நோம் பென்: கம்போடியாவில் சீனாவின் ராணுவ இருப்பை அதிகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள சீன தூதரகம் முன்பு திடீரென சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் போராட்டம் பெரிதாகும் முன்பே போலீஸார் விரைந்து சென்று போராட்டக்காரர்களை கைது செய்தனர்.

சீனா தன்னுடைய பொருளாதார மற்றும் ராணுவ பலத்தை அதிகரிப்பதன் ஒரு பகுதியாக பல்வேறு நாடுகளிலும் ராணுவ தளத்தை ஏற்படுத்தி வருகிறது. பொருளாதார பாதிப்பில் சிக்கியிருக்கும் சிறிய நாடுகளுக்கு கடன் கொடுப்பது போல் கொடுத்து, புதிய திட்டங்களை செயல்படுத்தி பின்னர் அந்த கடனுக்கான வட்டியை கட்ட முடியாத சூழலில் அந்த நாடுகள் சிக்கி தவிக்கும் பொழுது தந்திரமாக தன்னுடைய கட்டுப்பாட்டில் அந்த நாடுகளை சீனா கொண்டுவரும். அங்கு ராணுவ தளங்களையும் ஏற்படுத்தி வருகிறது.

இலங்கை, பாகிஸ்தான், திபெத் உள்ளிட்ட நாடுகளிலும் சீனா ராணுவத்தளங்களை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் சீனாவுக்கு எதிரான போராட்டத்தில் குதித்தனர். சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் கனவு திட்டமான பெல்ட் அண்ட் ரோடு இனிஷியேடிவ் திட்டம் மூலம் பாகிஸ்தானில் சீனாவின் அதிகாரம் ஓங்கியிருப்பதாகவும், மேலும் அந்த பகுதிகளில் சீனா செயல்படுத்தும் திட்டங்களால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் பலுசிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருக்கும் மக்கள் போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் தான் கம்போடியாவிலும் சீனாவின் ராணுவ குவிப்பை எதிர்த்து சிலர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். “கம்போடியாவில் சீன ராணுவத்தின் இருப்பை நாங்கள் நிராகரிக்கிறோம் என்று போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் முழக்கமிட்டார். மேலும் கம்போடிய தேசிய கொடியுடன் சீன தூதரகம் முன்பு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக ரியாம் கடற்படை தளத்தை சீனாவுக்கு கொடுப்பது தொடர்பாக கம்போடிய அரசாங்கம் ரகசிய உடன்படிக்கை மேற்கொண்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை அந்நாட்டு அரசாங்கம் மறுத்துள்ளது. மற்ற நாடுகளின் படைகளுக்கு இம்மண்ணில் அனுமதி கொடுப்பது கம்போடிய அரசியலமைப்பிற்கு எதிரானது என்றும் கூறியுள்ளது. முறையான அனுமதி பெறாமல் போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தை படம்பிடித்த பத்திரிகையாளர்களிடம் புகைப்படம் மற்றும் வீடியோக்களை டெலிட் செய்ய கூறி போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

ஆசியாவின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான கம்போடியா, கடந்த சில ஆண்டுகளாக சீனாவின் ஒரு முக்கியமான நட்பு நாடாக மாறி வருகிறது. அதுமட்டுமல்ல சீனாவின் பொருளாதார உதவிகளுக்கு மாற்றாக கம்போடியாவில் சீனா ஆதிக்கம் செலுத்த அனுமதி கொடுத்ததாகவும் எதிர்கட்சிகளால் தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த போராட்டங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து சீனா இதுவரை எந்த கருத்தும் கூறவில்லை.