ஆக்லாந்து: நியூசிலாந்து நாட்டில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன் அமைச்சராக தேர்வுசெய்யபட்டுள்ளார். நியூசிலாந்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் அமைச்சராவது இதுவே முதல் முறை.
நியூசிலாந்து நாட்டில் கொரோனா பாதிப்புக்கு இடையே கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பிரதமர் ஜெசிகா ஆர்டெர்ன் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். நியூசிலாந்து மசூதியில் நடைபெற்ற தாக்குதல், கொரோனா வைரஸ் உள்ளிட்ட பிரச்சனைகளை சிறப்பாக கையாண்டது போன்ற காரணங்களால் இந்த முறையும் மக்கள் அவருக்கே பெருமளவில் வாக்களித்தனர்.
இந்த நிலையில் தான் ஜெசிகா ஆர்டெர்ன் நேற்று தன்னுடைய அமைச்சரவையில் புதிதாக 5 அமைச்சர்களுக்கு வாய்ப்பு வழங்கினார். அதில் ஒருவர் தான் இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன்.
கல்வி தகுதி
41 வயதாகும் பிரியங்கா ராதாகிருஷ்ணன் கேரளாவின் எர்ணாகுளத்தை பூர்விகமாக கொண்டவர். தன்னுடைய ஆரம்ப கல்வியை வடக்கு பேராவூரில் கற்று இருந்தாலும் பின்னர் உயர்கல்விக்கு சிங்கப்பூர் சென்றார். அங்கிருந்து நியூசிலாந்துக்கு சென்றவர் அங்குள்ள வெலிங்டன் பல்கலைக்கழகத்தில் மேம்பாட்டு ஆய்வுகளில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
தன்னுடைய படிப்பை முடித்த பின் நியூசிலாந்தில் இருக்கும் இந்திய மக்களுக்காக சமூக ஆர்வலராக பணியாற்ற தொடங்கினார். அதையடுத்து 2006 ஆம் ஆண்டில் நியூசிலாந்தின் இடதுசாரிகளின் தொழிலாளர் கட்சியில் இணைந்தார். தொடர்ந்து 14 ஆண்டுகள் தொழிலாளர் கட்சியில் பணியாற்றிய பிரியங்கா ராதாகிருஷ்ணன் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜெசிகா ஆர்டெர்ன் அரசாங்கத்தில் எம்.பியாக தேர்வானார்.
2019 ஆம் ஆண்டில், அவர் இன சமூகங்களுக்கான அமைச்சரின் நாடாளுமன்ற தனியார் செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்த முறை அவருக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. இவருடைய தாய் வழி தாத்தா கேரளாவின் இடதுசாரிகள் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்தவர் என்று கூறப்படுகிறது.
அமைச்சரவை பொறுப்பு
பிரியங்கா ராதாகிருஷ்ணன் பிரதமர் ஜெசிகா ஆர்டெர்ன் அமைச்சரவையில் பன்முகத்தன்மை, உள்ளடக்கம் மற்றும் இன சமூகங்களுக்கான அமைச்சராகவும், சமூகம் மற்றும் தன்னார்வத் துறை அமைச்சராகவும், சமூக மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு இணை அமைச்சராகவும் பதவியேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பிரியங்கா அவருடைய கணவருடன் தற்போது ஆக்லாந்தில் வசித்து வருகிறார். அவருடைய கணவரும் சமீபத்தில் தான் தொழிலாளர் கட்சியில் இணைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து கூறியுள்ள பிரதமர் ஜெசிகா ஆர்டெர்ன் சில புதிய திறமையாளர்களை கொண்டுவருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், அவர்கள் பணிபுரியும் பகுதிகளில் அவர்களுக்கு முதல் அனுபவமும் கூட. இந்த அமைச்சரவை தகுதியை அடிப்படையாக கொண்டது அதேசமயம் முற்றிலும் வேறுபட்டது. புதிய அமைச்சர்கள் வெள்ளிக்கிழமை பதவியேற்ப்பார்கள். அதைத்தொடர்ந்து அமைச்சரவை கூட்டமும் நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.