Tuesday, March 28, 2023
Homeசெய்திகள்உலகம்மொத்தமாக ரிவர்ஸ் கியர் போட்ட ஈரான்.. சர்வதேச அரசியலில் நடக்கும் திருப்பம்.. மாற்றம் வருமா?

மொத்தமாக ரிவர்ஸ் கியர் போட்ட ஈரான்.. சர்வதேச அரசியலில் நடக்கும் திருப்பம்.. மாற்றம் வருமா?

தெஹ்ரான்: புதிதாக அமையவுள்ள அமெரிக்க அரசாங்கம் விருப்பம் காட்டினால் பேச்சுவார்த்தையின் மூலம் டிரம்ப் நிர்வாகத்திற்கு முந்தைய ஈரான் அமெரிக்கா உறவை மீட்டெடுக்கலாம் என்று ஈரான் அதிபர் ஹசன் ரவுஹானி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

டிரம்ப் நிர்வாகத்தில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்குமான உறவு அவ்வளவு சிறப்பானதாக அமையவில்லை. ஈரானுக்கு எதிரான பொருளாதார தடை உள்ளிட்ட காரணங்களால் ஈரான் அமெரிக்கா இடையே போர் பதற்றம் ஏற்படும் அளவுக்கு நிலைமை மோசமானது. அமெரிக்காவின் தடையை மீறி ஈரானுடன் வர்த்தக உறவு கொண்டிருந்த காரணத்தினால் சீனாவின் ஹுவாவே நிறுவனத்துக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மோசமாக இருந்தது. இதற்கிடையே தான் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்றார். வரும் ஜனவரி மாதம் ஜோ பிடன் அதிபராக பதவியேற்க இருக்கிறார்.

இந்த நிலையில் ஈரான் அதிபர் ஹசன் ரவுஹானி, புதிதாக அமையவுள்ள அமெரிக்க அரசாங்கம் விருப்பம் காட்டினால் பேச்சுவார்த்தையின் மூலம் ஈரான் அமெரிக்கா உறவை மீட்டெடுக்கலாம் என்று கூறியுள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைமைக்கு திரும்ப முடிவு செய்து 2017 ஜனவரி 20 ஆம் தேதிக்கு முந்தைய உறவுக்குத் திரும்பலாம் என்றும் அவர் பரிந்துரைத்தார். இது டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக பதவியேற்ற தேதி என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இஸ்லாமிய குடியரசின் திட்டங்கள் மற்ற நாடுகளின் முன்னேற்றங்களால் தீர்மானிக்கப்படுகின்றன என்பதை மறுக்கும் அதே வேளையில், ஈரானியர்களின் வாழ்க்கை வெள்ளை மாளிகையின் மனிதாபிமானமற்ற அழுத்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அமெரிக்கா தனது கடமைகளுக்கு மீண்டும் திரும்பினால், ஈரானும் தன்னை மாற்றிக்கொள்ளும் என்றார். புதிய அமெரிக்க அரசாங்கம் பதவியேற்க இருக்கும் இந்த வேளையில் ஈரான் அதிபரின் இந்த கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. இதனால் ஈரான் அமெரிக்க மோதல் இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முதலில் ஜோ பிடன் ஈரானின் கோரிக்கையை ஏற்க வேண்டும்.

முற்றிலும் டிரம்பின் பாதைக்கு எதிர் திசையில் ஜோ பிடன் பயணிக்க இருக்கிறார் என்பது அவர் வெற்றி பெற்ற சில நாட்களிலேயே தெரிந்துவிட்டது. இவ்வளவு நாட்கள் அவருடைய வெற்றியை அங்கீகரிக்காத சீனாவும் நேற்று ஜோ பிடனுக்கு வாழ்த்து கூறியிருந்தது, இப்போது ஈரானும் தாமாகவே முன்வந்து அமெரிக்காவுடனான உறவை மீண்டும் புதுப்பிக்க கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.