தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை மிகச்சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எந்த ஆட்சி இருந்தாலும் மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் பரிசுடன் ரொக்கத்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.
இதன்படி, நடப்பாண்டிற்கான பொங்கல் பரிசுத்தொகுப்பிற்கான(Pongal Parisu Thoguppu) டோக்கன் பொதுமக்களுக்கு ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜனவரி 9-ந் தேதி பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைப்பார் என்ற அறிவிப்பின்படி, நாளை பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசுத்தொகுப்பு நியாய விலைக்கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் 2.19 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது. சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். மேலும், நாளையே மாநிலம் முழுவதும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
தமிழக அரசின் பொங்கல் பரிசுத்தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ரூபாய் 1000 ரொக்கத்தொகை ஆகியவை இடம்பெற்றுள்ளன. மக்களுக்கு கரும்புகளை வழங்குவதற்காக ஏற்கனவே மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கரும்புகள் கொள்முதல் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பொங்கல் பரிசுத்தொகுப்பை மக்கள் வரும் 13-ந் தேதி வரை நியாய விலைக்கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பரிசுத்தொகுப்பை வாங்க இயலாத குடும்ப அட்டைதாரர்கள் வரும் 16-ந் தேதி தங்களுக்கான பொங்கல் பரிசுத்தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பு இடம்பெறாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதும், பின்னர் கரும்பு இடம்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.