2015 ஆம் ஆண்டு முதல் பிரதமர் நரேந்திர மோடி இதுவரை 58 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இவரது பயண செலவு மட்டும் சுமார் 517 கோடி ரூபாய்என மத்திய அரசு தெரிவித்து உள்ளது. பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வியில் இந்த விவரம் அளிக்கப்பட்டு இருக்கிறது.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தை சேர்ந்த வி முரளீதரன், தனது வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் பிரதமர் மோடி அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு அதிக முறை சென்றுள்ளார் என தெரிவித்து இருக்கிறார். இருநாடுகளுக்கும் பிரதமர் மோடி ஐந்து முறை சென்று இருக்கிறார்.
சீனாவுக்கும் பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டு இருக்கிறார். இதுதவிர சிங்கப்பூர், ஜெர்மனி, ஃபிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கும் பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டு இருக்கிறார் என முரளீதரன் தெரிவித்தார்.
பிரதமரின் பயண செலவு மொத்தத்தில் ரூ. 517.82 கோடி என உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பயணங்களில் பெரும்பான்மையானவை மற்ற நாட்டு ஒப்பந்தங்கள் சார்ந்தவை ஆகும். கடைசியாக பிரதமர் மோடி ப்ரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரேசில் சென்றிருந்தார்.