Saturday, March 25, 2023
Homeசெய்திகள்உலகம்மக்கள் சோர்ந்து போகலாம்.. வைரஸ் அப்படியே தான் உள்ளது.. ஹூ தலைவர் எச்சரிக்கை

மக்கள் சோர்ந்து போகலாம்.. வைரஸ் அப்படியே தான் உள்ளது.. ஹூ தலைவர் எச்சரிக்கை

பாரிஸ் : கொரோனா வைரஸ் தொற்றினால் மக்கள் சோர்வடைந்துள்ளனர், ஆனால் வைரஸ் இன்னும் விழிப்புடன் தான் உள்ளது. உலகம் தடுப்பூசிக்காக காத்திருக்கும் நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தொடர வேண்டும் என்றும் உலக சுகாதார மையத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறியுள்ளார்.

முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆக போகிறது. இதுவரை 5 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 லட்சம் பேர் வரை உயிரிழந்துள்ளனர். இதற்கு எதிராக போராடுவதற்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் வேளையில் உலகம் முழுவதிலும் பல நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. ஆனால் அதற்குள் பெரும்பாலான இடங்களில் மக்கள் கொரோனவுடன் வாழ பழகிவிட்டனர்.

 

வைரஸ் பரவலின் ஆரம்பத்தில் இருந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இப்போது மக்களிடம் இருப்பதில்லை. இந்த நிலையில் தான் இதுகுறித்து கூறியுள்ள உலக சுகாதார மையத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கொரோனா வைரஸினால் மக்கள் சோர்வடைந்துள்ளனர், ஆனால் வைரஸ் இன்னும் விழிப்புடன் தான் உள்ளது என்று கூறினார்.

பாரிசில் நடைபெற்ற அமைதி கருத்தரங்கில் உரையாற்றிய அவர் இதனை தெரிவித்தார். இப்போதுவரை ஐரோப்பிய நாடுகள் கொரோனாவுடன் தீவிரமாக போராடி வருகின்றன. அதைத் தடுப்பதற்கான முழுமையான நடவடிக்கைகளும் இல்லை. சமீபத்தில் ஏற்பட்ட இரண்டாம் அலை பல நாடுகளில் அவர்களின் சுகாதாரத்தை பாதுகாக்கவும், நோய் பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ளவும் புதிய லாக்டவுன் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

“ஒரு தடுப்பூசி அவசரமாக தேவைப்படுகிறது, ஆனால் அதற்காக நாங்கள் காத்துகொண்டு மட்டும் இருக்க முடியாது என்று கூறிய டெட்ரோஸ் அதானோம் எந்த கொரோனவைரஸ் தடுப்பூசி கண்டுபிடித்தாலும் அதை ஏழை நாடுகளுடன் நியாயமான முறையில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.

கொரோனா வைரஸ் தடுப்பூசி:

முன்னதாக அமெரிக்காவின் Pfizer நிறுவனம் தயாரித்திருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி மூன்றாம்கட்ட மனித பரிசோதனையில் 90 சதவிகிதம் வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் ஆக்ஸ்போர்டு மற்றும் ஆஸ்ட்ராசெனகா நிறுவனம் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசி 4 கோடி டோஸ்களை தயாரித்து இருப்பதாக இந்தியாவின் சீரம் நிறுவனம் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.