இஸ்தான்புல்: சவுதி தூதரகத்தில் வைத்து கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு நெருக்கமானவர்களால் மிரட்ட பட்டதாக கசோக்கியின் நெருங்கிய நண்பர் துருக்கி நீதிமன்றத்தில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் வாழ்ந்து வந்த சவுதியை சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி, கடந்த 2018, செப்டம்பர் 28ம் தேதி துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்திற்கு வந்துள்ளார். தன்னுடைய திருமணத்துக்கு தேவையான ஆவணங்களை பெற அவர் அங்கு சென்றார். ஆனால் அந்த தூதரகத்திற்குள் வைத்தே அவரை கொலை செய்துள்ளனர்.
ஜமால் கசோக்கி தொடர்ந்து சவூதி இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சனம் செய்து எழுதி வந்தார். இதனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது. ஜமால் கசோக்கியின் கொலைக்கு உலக நாடுகள் சவுதிக்கு எதிராக கடும் கண்டனத்தை பதிவு செய்தன. ஆனால் இந்த கொலையில் தங்களுக்கு தொடர்பு இல்லை என்றும் சவுதி அரசாங்கம் கூறியது.
இது தொடர்பாக துருக்கி மற்றும் சவுதியில் தனி தனியாக விசாரணை நடைபெற்றது. சவுதி நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் முதலில் இந்த கொலை தொடர்பாக 5 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் பின்னர் அவர்களது தண்டனையை 7 முதல் 20 ஆண்டுகளாக குறைத்தது. சவுதியின் இந்த செயலுக்கும் எதிர்ப்புகள் வலுத்தன. நீதியை பகடி செய்கின்றனர் என்று அம்னெஸ்டி உள்ளிட்ட அமைப்புகளும் கூறியிருந்தன.
அதேசமயம் மறுபக்கம் துருக்கியிலும் தீவிரமாக விசாரணை நடைபெற்றது. துருக்கி வழக்கறிஞர்கள் சவுதியின் முன்னாள் துணை புலனாய்வுத் தலைவர் அஹ்மத் அல்-அசிரி மற்றும் அரச நீதிமன்றத்தின் செய்திதொடர்பாளராக ஒருமுறை நியமிக்கப்பட்ட சவுத் அல்-கஹ்தானி ஆகியோரை கொலைக்கு திட்டமிட்டதாகவும், கொலை செய்த குழுவுக்கு நேரடி உத்தரவுகளை வழங்கியதாகவும் குற்றம் சாட்டியுள்ளன.
கசோக்கியின் கொலையில் சந்தேக நபர்களாக கருதப்படும் சக்திவாய்ந்த சவுதி முடி இளவரசரின் இரண்டு முன்னாள் உதவியாளர்கள் உட்பட சவுதியை சேர்ந்த 26 பேர் இல்லாத நிலையில் இஸ்தான்புல்லில் உள்ள பிரதான நீதிமன்றம் இரண்டாவது விசாரணையை நடத்தியது. அப்போது கசோக்கியின் நீண்டகால நண்பரான அய்மன் நவூர் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
அதில் அவர் சவுதி அரசால் நியமிக்கப்பட்ட கஹ்தானி மூலம் ஜமால் கசோக்கி தனிப்பட்ட முறையில் மிரட்டப்பட்டதாக தெரிவித்தார். கஹ்தானி மற்றும் அவரது குடும்பத்தினரால் தனக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாக ஜமால் கசோக்கி கூறினார் என்று அவருடைய நண்பர் நவூர் நீதிமன்றத்தில் கூறியதாக துருக்கி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வாஷிங்டனில் கஹ்தானியுடன் பேசிய தொலைபேசி உரையாடல் குறித்து கசோக்கி குறிப்பிட்ட பொழுது, தன்னுடைய குழந்தைகள் எங்கு வசிக்கிறார்கள் என்பது கூட எங்களுக்கு தெரியும் என்று கூறி கசோக்கியை மிரட்டியுள்ளனர். வழக்கத்திற்கு மாறாக அப்போது கசோக்கி அழுதார் என்றும் அவருடைய நண்பர் நவூர் துருக்கி நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார். ஜமால் கசோக்கியின் கொலை தொடர்பாக ஏற்கனவே சவுதி அரசாங்கத்தின் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டு வரும் நிலையில் சவுதி இளவரசருக்கு நெருக்கமானவர்களே கசோக்கியை மிரட்டியதாக அவருடைய நண்பர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.