பிரேசில்: பிரேசிலில் ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்ட்ராஸெனகா இணைந்து உருவாக்கிய கொரோனா வைரஸ் தடுப்பூசியின் பரிசோதனையின் போது ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பரிசோதனை தொடர்ந்து நடைபெறும் என்று அஸ்ட்ராஸெனகா அறிவித்துள்ளது.
கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்க உலக நாடுகள் அனைத்தும் மிக தீவிரமாக முயன்று வருகின்றன. ரஷ்யா முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியை பதிவு செய்துள்ளது. அந்நாடு தயாரித்த ஸ்புட்னிக் வி எனும் தடுப்பூசி பரிசோதனைகளின் போது நல்ல முடிவை கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இரண்டாம் கட்ட மனித பரிசோதனையின் போதே இந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது இதனால் உலக நாடுகள் ரஷ்யாவின் தடுப்பூசியை வாங்க தயங்குகின்றனர். இது தவிர சீனாவின் சிநோவாக் நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசியும், இந்தியாவின் கோவாக்சின் உள்ளிட்ட தடுப்பூசிகளும் இறுதிக்கட்ட பரிசோதனைகளில் உள்ளன.
பல நாடுகளும் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான ரேஸில் இருந்தாலும் ஆக்ஸ்போர்டு தயாரிக்கும் தடுப்பூசி தான் நம்பிக்கை கொடுப்பதாக இருந்தது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஸெனகா நிறுவனம் இணைந்து உருவாக்கும் இந்த தடுப்பூசியின் முடிவுகளுக்காக தான் உலகம் முழுவதும் மக்கள் காத்திருக்கின்றனர். இந்த தடுப்பூசி இரண்டு கட்ட மனித பரிசோதனைகளை முடித்து தற்போது மூன்றாம் கட்ட மனித பரிசோதனையில் உள்ளது. உலகின் பல நாடுகளிலும் இந்த தடுப்பூசி பரிசோதனை நடைபெறுகிறது.
இந்த நிலையில் தான் பிரேசிலில் பரிசோதனையில் பங்கேற்ற இளம் மருத்துவர் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இருப்பினும் பரிசோதனையில் பங்கேற்ற அந்த நபருக்கு உண்மையான தடுப்பூசி வழங்கப்படவில்லை என்றும் பரிசோதனையின் முதல் பகுதியாக போலி தடுப்பூசி மட்டுமே போடப்பட்டதாகவும் அஸ்ட்ராஸெனகா நிறுவனம் கூறியுள்ளது. இது தொடர்பாக உடனே கருத்து கூறியுள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தடுப்பூசியை கவனமாக மதிப்பிட்ட பிறகு மருத்துவ பரிசோதனையின் பாதுகாப்பு குறித்து எந்த கவலையும் இல்லை என்றும் பரிசோதனை தொடர்ந்து நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அஸ்ட்ராஸெனகா நிறுவனத்தின் பங்குகள் 1.7 சதவிகிதம் குறைந்துள்ளது.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் பிரேசில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அங்கு 5.3 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்கா மற்றும் இந்தியா முதல் இரண்டு இடங்களில் உள்ளன. ஆனால் இந்தியாவை விட பிரேசிலில் தான் அதிக மக்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேரும் இந்தியாவில் 1 லட்சத்து 17 ஆயிரம் பேரும் உயிரிழந்துள்ளனர்.