வாஷிங்டன்: அமெரிக்காவில் சுமார் 8 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை சங்கம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் கொரோன வைரஸ் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வந்தாலும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு என்றால் அது அமெரிக்கா தான். டிசம்பரில் சீனாவின் வுஹான் மாகாணத்தில் பரவ தொடங்கிய தொற்றுநோய் பிப்ரவரிக்கு பிறகு தான் அமெரிக்காவில் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கியது. அன்றிலிருந்து இன்று வரை கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பிலும் உயிரிழப்பிலும் அமெரிக்கா தான் உலகில் முன்னணி நாடாக மாறியுள்ளது. அமெரிக்காவில் இதுவரை 9,376,293 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 232,529 பேர் உயிரிழந்துள்ளனர். இப்போது அதே அமெரிக்காவில் அடுத்த அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் கடந்த வாரம் அக்டோபர் 22 முதல் 29 வரை இடைப்பட்ட காலத்தில் மட்டும் 61,447 குழந்தைகளுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை சங்கத்தின் புதிய ரிப்போர்ட் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து இதுவரை 850,000 குழந்தைகள் அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.அக்டோபர் மாதத்தில் மட்டும் சுமார் 2 லட்சம் குழந்தைகள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர் .
இதுவரை அமெரிக்காவில் பதிவாகியுள்ள கொரோனா பாதிப்புகளில் 11.1 சதவிகிதத்தினர் குழந்தைகளாக உள்ளனர். ஒட்டுமொத்தமாக 853,635 குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது 1 லட்சம் குழந்தைகளில் 1,134 குழந்தைகளுக்கு பாதிப்பு என்கிற விகிதத்தில் கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களில் 1 முதல் 3.5 சதவிகிதம் வரை குழந்தைகளாகவும், கொரோனா உயிரிழப்புகளில் 0 முதல் 0.2 சதவிகிதத்தினர் குழந்தைகளாகவும் உள்ளனர்.
இதுவரை ரெமிடெசிவர் மற்றும் குறிப்பிட்ட வைரஸ் தடுப்பு மருந்துகள் மட்டுமே அமெரிக்காவில் கொரோனவுக்கான சிகிச்சைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு கொரோனா வைரஸின் பொதுவான அறிகுறிகள் இருமல் மற்றும் காய்ச்சல் ஆகியவை . இருப்பினும், இந்த அறிகுறிகள் எப்போதும் இருக்காது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். மூச்சு திணறல், வயிற்றுப்போக்கு, சோர்வு, வாந்தி, மூக்கடைப்பு, வயிற்று வலி, சுவை உணர்வு இழப்பு மற்றும் வாசனை இழப்பு போன்றவையும் அறிகுறிகளாக கூறப்படுகின்றன.