அரசியல் என்பது ஒரு மனிதனை உச்சத்திற்கும் கொண்டு செல்லும். அதளபாதாளத்திற்கும் கொண்டு செல்லும். புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் அரசனும் ஆண்டி ஆவான். ஆண்டியும் அரசன் ஆவான் என்ற பழமொழி அரசியல்வாதிகளுக்கு பொருந்தும். இந்த பழமொழி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கும் நன்றாகவே பொருந்தும் எனலாம்.
ஜெயலலிதா சிறைக்கு சென்றபோதேல்லாம் முதலமைச்சர் பொறுப்பை வகித்து, அவர் மீண்டும் வந்தபோது அவரிடமே அந்த பொறுப்பை ஒப்படைத்து ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசி என்று பெயரெடுத்தவர் ஓ.பன்னீர்செல்வம். அவரின் இன்றைய நிலையோ மிகவும் பரிதாபத்திற்குரியது என்றே கூறலாம்.
ஒரு மனிதனுக்கு அடிமேல் அடி விழுவதை நாம் படத்தில் பார்த்திருப்போம். உச்சநிலையில் உள்ள ஒரு மனிதனுக்கு அடிமேல் அடி விழுவதை ஓ.பன்னீர்செல்வம் விஷயத்தில் பார்க்க முடிகிறது. ஆட்சியை தி.மு.க.விடம் பறிகொடுத்த பிறகு கட்சியை எடப்பாடி பழனிசாமியிடம் பறிகொடுத்தார் ஓ.பன்னீர்செல்வம். அதற்கு எதிராக நீதிமன்றம் சென்று போராடி பெற்ற தீர்ப்பும், உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக மாறியது.
உச்சநீதிமன்றத்தில் கடந்தாண்டு ஜூலை 11-ந் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பு வந்த பிறகு எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் அவரை நிரந்தர பொதுச்செயலாளர் ஆக்குவதற்கு முனைப்பு காட்டி வருகின்றனர். ஈரோடு இடைத்தேர்தலில் தனது ஆதிக்கத்தை காட்டலாம் என்று எண்ணிய ஓ.பன்னீர்செல்வத்திற்கு பா.ஜ.க.வும் துணை நிற்காத காரணத்தால், கடைசி நேரத்தில் பின்வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது பெரும் பின்னடைவாகி போனது.
இந்த சூழலில். உச்சநீதிமன்ற தீர்ப்பும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக வந்தது அவருக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த நெருக்கடியான சூழலில். ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைந்தது அவருக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்தாண்டு ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவியார் உடல்நலக்குறைவால் காலமானார். அவர் மறைவே அவருக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்திய சூழலில், கட்சியில் ஏற்பட்ட நெருக்கடி சூழல், தாயின் மரணம் என்று அடுத்தடுத்து கலங்கி நிற்கிறார் ஓ.பன்னீர்செல்வம். அவரது இந்த பரிதாப நிலை அவரது ஆதரவாளர்களுக்கு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனக்கு சாதகமாக எந்தவொரு சூழலும் இல்லாத நிலையில், சொந்த வாழ்விலும் பெரும் துயரங்களை எதிர்கொண்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் இதையெல்லாம் எவ்வாறு கடந்து வருவார்? அ.தி.மு.க.வை காப்பாற்றுவாரா? அல்லது தீவிர அரசியலில் இருந்து ஒதுங்குவாரா? என்று பல கேள்விகள் அவர் முன்பு எழுந்து நிற்கிறது. ஓ.பன்னீர்செல்வத்தின் அடுத்தகட்ட நகர்வு என்னவென்று பொறுத்திருந்து பார்க்கலாம்.