Monday, March 27, 2023
Homeசெய்திகள்உலகம்நைஜீரியாவில் கொழுந்துவிட்டு எரியும் மக்கள் போராட்டம்.. என்ன நடந்தது ? முழு தகவல்

நைஜீரியாவில் கொழுந்துவிட்டு எரியும் மக்கள் போராட்டம்.. என்ன நடந்தது ? முழு தகவல்

லாகோஸ் : பசி, மோசமான பொருளாதாரநிலை, தீவிரவாத அச்சுறுத்தல், இவற்றுக்கு மத்தியில் அரசு பொறுப்பில் இருப்பவர்களும் அதிகாரத்தை கையில் எடுத்ததன் விளைவை இப்போது நைஜீரியா பார்த்துக்கொண்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனா எனும் கொடிய வைரஸையும் மறந்து அதிகாரத்தில் இருக்கும் வைரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர். லாகோஸ் நகரை மையமாக வைத்து போராட்டம் நடைபெற்றாலும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் காவல்துறையில் இருந்து தனியாக சிறப்பு கொள்ளை தடுப்பு பிரிவு (SARS) 1992 ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த பிரிவிற்கு உச்ச அதிகாரங்கள் வழங்கப்பட்டதை தொடர்ந்து நாளடைவில் அந்த சிறப்பு பிரிவில் இருக்கும் காவலர்கள் தங்களுடைய அதிகாரங்களை தவறாக பயன்படுத்த தொடங்கியதாகவும், குற்றங்களை தடுப்பதாக கூறி அப்பாவி பொதுமக்களை கொலை செய்வதாகவும் நீண்ட நாட்களாக நைஜீரிய மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்த நிலையில் தான் இந்த குற்றச்சாட்டுகளை மேலும் வலுசேர்க்கும் விதமாக அமைந்தது ஒரு வீடியோ ஆதாரம்.

இரண்டு வாரங்கள் முன்பு சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலானது. அதில் ஒரு சிறப்பு கொள்ளை தடுப்பு பிரிவு அதிகாரி தெற்கு டெல்டா பகுதியை சேர்ந்த ஒரு நபரை சுட்டு கொலை செய்கிறார். இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து இளைஞர்கள் வீதிகளில் குவிந்தனர்.

#EndSARS

இந்த சிறப்பு படையை உடனடியாக தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் அரசாங்கம் இதில் மாற்றங்களை கொண்டுவருவதாக வாக்குறுதிகள் கொடுத்து வந்தாலும், இப்போது நிரந்தரமான ஒரு மாற்றம் வராமல் நாங்கள் பின்வாங்க போவதில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். சமூக வலைத்தளங்கள் மூலம் இந்த போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்படுகிறது. #EndSARS எனும் ஹேஷ்டேக்குடன் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

What is Nigeria's #EndSARS protest ? all u need to know

நைஜீரியா இன மற்றும் மத அடிப்படையில் மிகவும் துண்டு துண்டாக பிளவுபட்டுள்ளது. போகோ ஹராம் தலைமையிலான இஸ்லாமிய கிளர்ச்சி ஏற்பட்ட வடகிழக்கு பகுதியில் மக்களின் வாழ்க்கைக்கும் வாழ்வாதாரத்திற்கும் பெரும் சவாலான சூழல் ஏற்பட்டுள்ளது, அந்த பகுதிகளில் உள்ள மக்களின் கருத்துக்களோ வேறுமாதிரி உள்ளன.

சிறப்பு கொள்ளை தடுப்பு பிரிவு கலைக்கப்பட்டால், இப்பகுதியில் பாதுகாப்பின்மை இன்னும் மோசமாகிவிடும் என்று அங்குள்ள மக்கள் கவலைப்படுகிறார்கள். இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் SARS ஐ ஆதரிக்கும் போராட்டத்தை ஏற்பாடு செய்ய முயன்றனர், ஆனால் அதிகாரிகள் போகோ ஹராமின் பிறப்பிடமான மைதுகுரியில் அனைத்து விதமான ஆர்ப்பாட்டங்களையும் தடை செய்துள்ளனர்.

Also Read: சீனாவால் ஏற்பட்ட உள்நாட்டு குழப்பம்.. கம்போடியாவிலும் வெடித்த போராட்டம்

இதற்கிடையே அதிகாரிகளோ SARS பிரிவை களைத்து புதிய SWAT பிரிவு உருவாக்கப்படும் என கூறியிருக்கின்றனர். மேலும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தாமல் இருக்க இந்த SWAT பிரிவு அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சிகளும் கொடுக்கப்பட உள்ளதாக காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் முகமது ஆதாமு கூறியுள்ளார். இருப்பினும் இந்த SWAT வெறும் பழைய கொள்ளை தடுப்பு பிரிவின் மற்றொரு வடிவம் தானே தவிர வேறு எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை என போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர். காவல்துறை அராஜகத்தால் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் வரையும், அதிகாரங்களை தவறாக பயன்படுத்துவதை நிறுத்தும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதற்கிடையே லெக்கி டோல் பிளாசா பகுதியில் அக்டோபர் 20ம் தேதி போராட்டம் தொடங்கப்படுவதற்கு முன்பே அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இதனால் கவர்னர் பாபாஜித் சான்வோ அமைதி வழியில் போராடும் மக்களும், அப்பகுதியினரும் ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு கொடுத்து வீடுகளிலேயே இருக்குமாறு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

ஊரடங்கு அமலில் இருந்ததால் போராட்டக்காரர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதனால் பாதுகாப்பு படையினர் திடீரென எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். மனித உரிமை அமைப்புகளும், ஐநாவும் அந்த நிகழ்வின் போது குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டிருக்கலாம், பலர் படுகாயம் அடைந்திருக்கலாம் என கூறியுள்ளது. கவர்னர் பாபாஜித் சான்வோ இந்த படைகள் தன்னுடைய அதிகாரத்தின் கீழ் வராது என்று கைவிரித்துள்ளார்.

இந்த நிகழ்விற்கு பிறகு மக்கள் கோபம் மேலும் அதிகரித்துள்ளது. அன்றைய தினம் கருப்பு செவ்வாய் என பதிவிட்டு தங்களுடைய கண்டனங்களையும் கூறிவருகின்றனர். இதனால் அணைத்து மாகாணங்களில் இருக்கும் கல்வி நிறுவனங்களும் அடுத்த 3 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிசூடு நிகழ்விற்கு சர்வதேச சமூகம் தங்களுடைய கண்டனங்களை பதிவு செய்துள்ளது. ஐரோப்பிய யூனியன், மற்றும் ஐக்கிய நாடுகள் சபையும் காவல்துறை அராஜகத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸ் “பாதுகாப்புப் படைகள் எல்லா நேரங்களிலும் அதிகபட்ச கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் அவர் போராட்டக்காரர்களையும் அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்யவும் வன்முறையிலிருந்து விலகி இருக்கவும் அழைப்பு விடுத்தார். இந்த நிலையில் லாகோஸ் மாநில ஆளுநர் லெக்கி டோல் பிளாசா பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிசூடு குறித்து முறையான விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்துள்ளார்.