Tuesday, March 28, 2023
Homeசெய்திகள்உலகம்தாக்குதலுக்கு முன் இந்தியாவுக்கு வந்த பயங்கரவாதி.. நியூ. மசூதி தாக்குதல் குறித்து வெளியான பரபரப்பு தகவல்

தாக்குதலுக்கு முன் இந்தியாவுக்கு வந்த பயங்கரவாதி.. நியூ. மசூதி தாக்குதல் குறித்து வெளியான பரபரப்பு தகவல்

ஆக்லாந்து: நியூசிலாந்தின் கிரைஸ்ட்சர்ச்சில் கடந்த 2019 ஆம் ஆண்டு மசூதியில் நடைபெற்ற தாக்குதல் குறித்த முழு தகவலையும் நியூசிலாந்து அரசு வெளியிட்டுள்ளது. அதில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி நியூசிலாந்துக்கு குடியேறுவதற்கு முன்பு உலகம் முழுவதிலும் பயணம் செய்திருக்கிறார். முக்கியமாக இந்தியாவில் 3 மாதங்கள் தங்கி இருந்துவிட்டு அதன் பின்னரே நியூசிலாந்தில் குடியேறி இருக்கிறார் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 15-ந்தேதி நியூசிலாந்தில் இருக்கும் கிரைஸ்ட்சர்ச்சில் உள்ள ஒரு மசூதிக்குள் நுழைந்த மர்ம நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கிசூடு நடத்தினார். மேலும் அந்த துப்பாக்கிசூட்டை பேஸ்புக் பக்கத்தில் நேரலை செய்தார். இந்த தாக்குதலில் ஐந்து இந்தியர்கள் உட்பட 51 பேர் பலியாகினர். அமைதி நாடு என பெயரெடுத்த நியூசிலாந்தில் நடைபெற்ற இந்த கொடூர சம்பவம் உலகம் முழுவதிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பின்னர் தான் இந்த தாக்குதலில் ஈடுபட்டது ஆஸ்திரேலியாவை சேர்ந்த 29 வயதான பிரெண்டன் டாரண்ட் என்பது தெரிய வந்தது.

பின்னர் அவர் கைதுசெய்யப்பட்டு அவர் மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அவர் மீது சுமத்தப்பட்ட கொலை, கொலை முயற்சி, பயங்கரவாத நடவடிக்கைகள் உள்ளிட்ட 92 வழக்குகளில் தன்மீதான குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவருக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. இடையில் பரோலுக்கான வாய்ப்பும் மறுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தான், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை நியூசிலாந்து அரசு வெளியிட்டுள்ளது.இந்த அறிக்கையை முழுதாக கோர்த்து முடிக்க 18 மாதங்கள் ஆனதும் குறிப்பிடத்தக்கது. மொத்தம் 792 பக்கம் உள்ள இந்த ஆவணத்தில் பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக குற்றவாளி பிரெண்டன் நியூசிலாந்துக்கு வருவதற்கு முன்பு பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு இருக்கிறார்.

2012 ஆம் ஆண்டு வரை பிரெண்டன் உள்ளூர் ஜிம்மில் பயிற்சியாளராக இருந்திருக்கிறார். இடையில் ஏற்பட்ட காயத்துக்கு பிறகு அவர் எந்த ஒரு ஊதியம் பெரும் வேலையும் செய்யவில்லை. அதற்கு பதிலாக, அவர் தனது தந்தையிடமிருந்து பெற்ற பணத்திலிருந்தும், மற்றும் ஏற்கனவே முதலீடு செய்திருந்தவற்றில் இருந்து வந்த பணத்தில் இருந்தும் வாழ்ந்து வந்திருக்கிறார். இந்த பணத்தை கொண்டு உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டு இருக்கிறார். 2013 ஆம் ஆண்டில், அவர் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றுள்ளார். பின்னர் 2014 மற்றும் 2017 க்கு இடைப்பட்ட காலத்தில் அவர் உலகம் முழுவதும் பரவலாகப் பயணம் செய்தார் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 15, 2014 மற்றும் ஆகஸ்ட் 17, 2017 ஆகிய காலகட்டத்தில் பல நாடுகளுக்கும் தனியாகவே பயணம் மேற்கொண்டு இருக்கிறார். ஒருமுறை வடகொரியாவுக்கு மட்டும் சுற்றுலா பயணிகளுடன் குழுவாக சென்றுள்ளார். அவருடைய பயணத்தில் மிக நீண்ட காலம் தங்கியிருந்த நாடு இந்தியா தான். 2015 நவம்பர் 21ஆம் தேதி இந்திய வந்த பிரெண்டன் 2016 பிப்ரவரி 18 வரை கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் இந்தியாவில் இருந்திருக்கிறார்.

இந்தியாவில் இருந்த கால கட்டத்தில் அவர் என்ன செய்தார் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகவில்லை. இருந்தபோதிலும் அவர் வெளிநாடுகளில் இருந்த போது தீவிரவாதக் குழுக்களைச் சந்தித்தாகவோ அல்லது எந்தவொரு பயிற்சியையும் மேற்கொண்டார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று நியூசிலாந்து ஹெரால்ட் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்ல சீனா, ஜப்பான், ரஷ்யா, தென்கொரியா போன்ற நாடுகளுக்கும் பயணம் செய்திருக்கிறார்.

இந்த பயணங்கள் அவருடைய இனவெறியை தூண்டியதாக நம்பவில்லை என்று அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. அவருக்கு வேறு எந்த வேலைகளும் இல்லாத காரணத்தினாலே அவர் தொடர்ந்து பயணங்கள் மேற்கொண்டடிருக்கிறார் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால் ஆன்லைனில் அவர் தொடர்ந்து வலதுசாரி இணைய பக்கங்களை பார்வையிட்டு வந்துள்ளார்.

வலதுசாரி யூடியூப் சேனல்களை சாப்ஸ்க்ரைப் செய்தும், தீவிர வலதுசாரி அரசியல் கோட்பாடுகள் மற்றும் கிறிஸ்தவத்திற்கும் இஸ்லாத்திற்கும் இடையிலான வரலாற்றுப் போராட்டங்கள் ஆகியவற்றைப் பற்றி அதிகம் படித்திருக்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது. அவர் சிறுவயதில் இருந்தே தீவிர இனவெறி கருத்துக்களை வெளிப்படுத்தி வந்துள்ளார், மேலும் அதிகமான நேரத்தை இணையத்தில் செலவிடுபவராகவும் இருந்திருக்கிறார்.

2017 ஆம் ஆண்டு ஆகஸ்டில் நியூசிலாந்து செல்வதற்காக பிப்ரவரியில் அவர் விமான டிக்கெட் முன்பதிவு செய்திருக்கிறார். இதுதான் அவருடைய பயங்கரவாத சிந்தனையின் முதல் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. 17 ஆகஸ்ட் 2017 அன்று பிரெண்டன் நியூசிலாந்தில் வசிக்க வந்தபோது, அவர் மாபெரும் மாற்றுக் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையிலும், அதனுடன் தொடர்புடைய நம்பிக்கைகளின் அடிப்படையிலும் முழுமையாக வளர்ந்த பயங்கரவாத சிந்தனையுடன் இருந்திருக்கிறார் என்று நம்பப்படுகிறது.

குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் பிற நாட்டவரின் குடியேற்றம் குறிப்பாக முஸ்லிம்களின் குடியேற்றம் மேற்கத்திய கலாச்சாரத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அவர் எண்ணியிருக்கிறார். மேலும் அதற்கான எதிர் நடவடிக்கையாக வன்முறையை அவர் முழுதாக நம்பியுள்ளார் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.