இஸ்லாமாபாத்: பெரும்பான்மையான பாகிஸ்தானியர்கள் அந்நாட்டு அரசு தவறான பாதையில் சென்றுகொண்டு இருப்பதாக நினைக்கிறார்கள் என்று புதிய சர்வே ஒன்று தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவியேற்றத்தில் இருந்தே பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறார். ஆரம்பத்தில் ராணுவத்தின் கைப்பாவையாக இவர் செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் சீனாவுடன் இம்ரான் கானின் நெருக்கம் காரணமாக விமர்சிக்கப்பட்டார். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் தொடர்ந்து மறுத்து வந்த பாகிஸ்தான்-சீனா பொருளாதார காரிடர் திட்டத்திற்கும் பதவிக்கு வந்த உடனே ஒப்புதல் வழங்கினார்.
இதன் காரணமாக சீனாவின் ஆதிக்கம் பாகிஸ்தானில் அதிகரிக்க தொடங்கியது. மேலும் சீனாவின் நீர்மின் நிலையம் திட்டத்திற்கு எதிராக அந்நாட்டு மக்களே போராட்டத்தில் குதித்தனர். அதை தொடர்ந்து மோசமான பொருளாதார நிலை, வேலைவாய்ப்பின்மை காரணமாக எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்து பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் என்கிற பெயரில் ஆரம்பித்து அரசுக்கு எதிரான தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தான் IPSOS நிறுவனம் பாகிஸ்தான் மக்களிடம் நடத்திய ஒரு சர்வேயில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட பாகிஸ்தானின் எல்லா மாகாணங்களிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட இந்த சர்வேயில் ஒவ்வொரு ஐந்து பேரில் நான்கு பேர் நாடு தவறான திசையில் பயணிப்பதாக கருதுகின்றனர். நேற்று வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் 23 சதவிகிதம் பேர் மட்டுமே நாடு சரியான திசையில் பயணிப்பதாக எண்ணியுள்ளனர். 77 சதவிகிதம் பேர் இம்ரான் கான் ஆட்சியின் கீழ் நாடு வேறு திசையில் பயணிப்பதாக எண்ணுகின்றனர்.
டிசம்பர் 1 முதல் 6 வரை இந்த சர்வே நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஆண்டு, நான்காம் காலாண்டில், 21 சதவீதம் பேர் நாடு சரியான பாதையில் செல்வதாக நம்பினர், அதே நேரத்தில் 79 சதவீதம் பேர் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தனர் என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி பார்க்கையில் இம்ரான் கான் மீதான மதிப்பு 2 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தாண்டு மேற்கொள்ளப்பட்ட சர்வேயில் 36 சதவிகிதம் பேர் அவர்களுடைய நிதி நிலைமை பலவீனமாக இருப்பதாக கருதுகின்றனர். அதே நேரத்தில் 13 சதவிகிதம் பேர் வலிமையாக உள்ளது என்றும், 51 சதவிகிதம் பேர் வலிமையாகவோ அல்லது பலவீனமானதாகவோ இல்லை என்று கூறியுள்ளனர். பாகிஸ்தானில் கிட்டத்தட்ட எல்லா மாகாணங்களிலும் நிதி நிலைமை மோசமாக இருப்பதாக இந்த சர்வேயில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சிந்த் பகுதியில் சுமார் 20 சதவிகித மக்கள் வேலைவாய்ப்பின்மையை முக்கிய பிரச்சனையாக தெரிவித்துள்ளனர். கைபர் பக்துன்க்வாவில் சுமார் 18 சதவீதம் பேர் வேலையின்மையும், 12 சதவீதம் பேர் கொரோனா வைரஸ் மற்றும் 8 சதவீதம் பேர் வறுமையும் மாகாணத்தின் நிதி நிலைமைக்கு காரணம் என்று நம்புகின்றனர். பலூசிஸ்தானில் சுமார் 25 சதவீதம் பேர் வேலைவாய்ப்பின்மை என்று குற்றம் சாட்டினர், மேலும் 25 சதவீதம் பேர் வறுமை அந்த மாகாணத்தின் முக்கிய பிரச்சனையாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இம்ரான் கான் மற்றும் இராணுவ விரிவாக்கத்திற்கு எதிராக பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் (பி.டி.எம்) நடத்திய தொடர் போராட்டத்தின் விளைவாக பாகிஸ்தான் மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேரணியில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் உரையாற்றியபோது, நாட்டின் அரசியல் விஷயத்தில் ராணுவம் தலையிடுவதை கடுமையாக கண்டித்தார். அரசு நிர்வாகத்தை வடிவமைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ராணுவத்துக்கு எச்சரிக்கை விடுத்தார். ஒட்டுமொத்தமாக இந்த சர்வே இம்ரான் கானுக்கு எதிராக உள்ளதாக கருதப்படுகிறது.