டெல்லி : இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டும் பணி வரும் டிசம்பர் மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தாண்டு டிசம்பர் மாதம் தொடங்கி 2022 அக்டோபர் மாதம் அணைத்து வேலைகளும் நிறைவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போதுள்ள பாராளுமன்ற கட்டிடம் பிரிடிஷ் ஆட்சி காலத்தில் 1927 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இது எட்வின் லுடியன்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் ஆகியோரால் வடிவமைக்கப்பட்டது. பழைய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு 93 ஆண்டுகள் ஆகிவிட்டதால் புதிய நாடாளுமன்றம் கட்டிடம் கட்ட முடிவெடுக்கப்பட்டது. இப்போது இந்த புதிய கட்டிடத்திற்கான திட்டத்தை டாடா ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் கடந்த மாதம் கைப்பற்றியது. சுமார் 861.90 கோடி செலவில் சென்ட்ரல் விஸ்டா மறு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட உள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் தனி தனி அறைகள் ஒதுக்கப்பட்டிருக்கும், அதில் காகிதமற்ற அலுவலகங்கள்’ வேண்டும் என்ற நோக்கத்தின் ஒரு பகுதியாக அதிநவீன டிஜிட்டல் வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டிருக்கும் என மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. மேலும் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான ஒய்வு அறை, நூலகம், குழு அறைகள், உணவு அறைகள் இவை தவிர வாகன நிறுத்துமிடங்களும் அமைக்கப்படும்.
புதிய கட்டிட பணிகள் முடியும் வரை இப்போது இருக்கும் பழைய கட்டிடத்திலேயே நாடாளுமன்ற கூட்ட தொடர்கள், மற்றும் இதர நிகழ்வுகள் எந்த தடையும் இன்றி தொடர்ந்து நடைபெறும் என மக்களவை செயலகம் கூறியுள்ளது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நடைபெற்ற மறுஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு, புதிய கட்டிடம் கட்டும் போது காற்று மற்றும் ஒலி மாசுபாட்டைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஜனநாயக பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட உள்ளது. புதிய பாராளுமன்ற கட்டிடம் 888 உறுப்பினர்கள் அமரக்கூடிய வசதி கொண்ட மக்களவை அறையையும், 384 உறுப்பினர்கள் ஒரே நேரத்தில் மாநிலங்களவை அமரும் வசதியும் கொண்டிருக்கும். இரண்டு அவைகளிலும் எதிர்காலத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு இந்த இருக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தற்போது லோக் சபாவில் 543 உறுப்பினர்களும், ராஜ்யசபாவில் 245 உறுப்பினர்களும் உள்ளனர். இந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற உள்ள பூமி பூஜை விழாவில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.