ஆணோ, பெண்ணோ மனிதனாக பிறந்துவிட்டால் பல இன்னல்களை கடந்தாக வேண்டிய கட்டாயம் இருந்து கொண்டே இருக்கும். ஆண்கள், பெண்களை காட்டிலும் திருநங்கைகள் எதிர்கொள்ளும் துயரம் வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு அதிகளவில் இருக்கும். இதன் காரணமாகவே இன்றளவும் உலகளவில் திருநங்கைகளின் வளர்ச்சி மிகவும் கவலைக்குரிய வகையிலே உள்ளது.
நாஸ் ஜோஷி
குறிப்பாக, இந்தியாவில் சமீபகாலத்தில்தான் திருநங்கைகள் பாலியல் தொழிலாளிகளாக இல்லாமல் மற்ற துறைகளில் சாதிக்கும் திறமையாளர்களாக உருவெடுக்கத் தொடங்கியுள்ளனர். அந்த வரிசையில் மற்ற திருநங்கைகளுக்கு முன்னுதாரணமாக இருப்பவர் நாஸ் ஜோஷி.
சர்வதேச திருநங்கை அழகி பட்டத்தை கைப்பற்றி, சமூக ஆர்வலராக பல சாதனைகளை தன்வசம் வைத்திருக்கும் நாஸ் ஷோசி கடந்துவந்த பாதை மிகவும் கடினமாகவே அமைந்துள்ளது.
பாலியல் வன்கொடுமை
டெல்லியில் பிறந்த ஜோஷி, வளர வளர தான் ஒரு திருநங்கை என்பதை உணரத் தொடங்கியுள்ளார். இன்றும் திருநங்கைகளுக்கு குடும்பங்கள் ஆதரவு தராமல் ஒதுக்கி வருகின்றன. ஜோஷி குடும்பம் மட்டும் ஆதரவு அளித்திருக்குமா..? எல்லா குடும்பத்தை போலவும் ஜோஷி குடும்பத்திலும் நடந்தது.
ஜோஷி திருநங்கை என தெரிந்ததும் பெற்றோர்கள் அவரை ஜோஷி மாமா பொறுப்பில் விட்டுவிட்டனர். 10 வயதில் அவருடைய சொந்த மாமாவே நண்பர்களோடு சேர்ந்து ஜோஷியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் கடும் காயங்களுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குதான் மற்றொரு திருநங்கையை சந்தித்து உதவி பெற்றுள்ளார்.
பிச்சை டூ பேஷன் டிசைனிங்
அதன் பிறகு ஜோஷி தன் சொந்த அடையாளத்துடன் வாழ்க்கையை தொடங்கினார். பிழைப்புக்காக தெருக்களில் பிச்சை எடுக்கவும் நேரிட்டது. மசாஜ் சென்டர், பார்களிலும் வேலை கிடைத்தது. கிடைத்த பணத்தை வெறும் உணவுக்காக மட்டும் பயன்படுத்தாமல் தன்னுடைய கல்விக்காக செலவு செய்தார். கடும் சிரமங்களுக்கும், இன்னல்களுக்கும் மத்தியில் பேஷன் டிசைனிங் படிப்பை படித்து முடித்தார். படிப்பை முடித்த பின்னர் ஜோஷி பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகே மாடலிங் துறைக்குள் எட்டு வைத்தார். ஜோஷிக்கு தன் திறமை மீது நம்பிக்கை இருந்தது. அவர் டெல்லி தெருக்களில் சற்றும் தயங்காமல் பெண்களைப் போல ஆடை உடுத்தி போட்டோஷூட் செய்தார். இந்த முயற்சிகள் அவருக்கு ஒரு பிரபல பத்திரிகையின் அட்டைப்படத்தில் இடத்தை பிடித்து கொடுத்தது. இதன் பின்னர் தான் உலக அளவில் நடந்த திருநங்கை அழகி போட்டியில் கலந்து கொண்டு ஜோஷி வென்றார்.
ரோல் மாடல் ஜோஷி
3 முறை தொடர்ந்து உலக அழகி போட்டியில் இவர் பட்டத்தை வென்றுள்ளார். இது தவிர 8 அழகிப் போட்டிகளில் ஜோஷி வெற்றி வாகை சூட்டியுள்ளார். சர்வதேச அளவில் இத்தனை முறை அழகி பட்டம் வென்ற முதல் திருநங்கை நாஸ் ஜோஷிதான். வாழ்க்கையில் பிறந்தது முதல் பல்வேறு இன்னல்களை கடந்து மிகப்பெரிய சாதனைகளை அடைந்து புகழின் வெளிச்சத்தில் மட்டுமில்லாமல், பலருக்கு உத்வேகமாக இருக்கும் ஜோஷி திருநங்கைகள் மட்டுமின்றி ஆண்கள், பெண்களுக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறார்.