உட்டா: அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் மனிதர்கள் யாரும் செல்லாத பாலைவன பகுதிக்கு நடுவே ஒளிரும் உலோகத்தாலான பொருள் ஒன்றை வனவிலங்கு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த மர்ம பொருள் குறித்த விவாதங்கள் இப்போது இணையத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
செவ்வாய் கிரகம் போன்று முற்றிலும் சிவப்பு நிற பாறைகளால் ஆன உட்டா மாகாணத்தின் தென்கிழக்கே இருக்கும் பாலைவன பகுதியில் பொது பாதுகாப்பு துறை மற்றும் வனவிலங்கு பிரிவு அதிகாரிகள் நவம்பர் 18ம் தேதி ஆடுகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.ஹெலிகாப்டரில் இவர்கள் பறந்து சென்று கண்காணித்து கொண்டிருந்தபோது பாலைவனத்துக்கு நடுவே ஒளிரும் உலோகத்தாலான பொருள் ஒன்றை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அவர்களின் ஒய்வு சமயத்தில் ஹெலிகாப்டரில் இருந்து கீழே இறங்கி அந்த மர்ம பொருள் அருகே சென்று பார்த்தனர். மூன்று பக்கங்களை கொண்டிருந்த இந்த மர்ம பொருள் இரண்டு ஆள் உயரத்தில் இருந்தது. அந்த சிவப்பு பாறைகளுக்கு மத்தியில் அதை யார் கொண்டு வந்து வைத்தது, எதற்காக வைத்தனர், எப்படி அதில் நிற்க வைத்தனர் என்பது குறித்து எந்த ஆதாரத்தையும் அவர்கள் கண்டுபிடிக்கவில்லை. பொது பாதுகாப்புத் துறையின் ஒரு பகுதியான உட்டா நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவின் லெப்டினன் நிக் ஸ்ட்ரீட் இதுகுறித்து கூறுகையில், இந்த பொருள் நிச்சயம் வேறு ஒரு கிரகத்தில் இருந்து வந்தது கிடையாது என்றார்.
இருப்பினும், 10 முதல் 12-அடி (3- முதல் 4 மீட்டர்) உலோக பொருளை உருவாக்கி அதை பாறையில் உட்பொதிக்க சில திட்டமிடல் மற்றும் வேலைகளை செய்துள்ளனர் என்பது தெளிவாகிறது என்றார். அந்த உலோக கல் அமைந்திருக்கும் சரியான இடம் மிகவும் தொலைதூரத்தில் உள்ளது, அதிகாரிகள் அந்த இடத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தவில்லை, ஏனெனில் மக்கள் அதை தேடி சென்று பாலைவனத்தில் தொலைந்துவிட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சிலர் இந்த ஒற்றை கல், ஸ்டான்லி குப்ரிக் இயக்கிய 2001:ஸ்பேஸ் ஒடிசி திரைப்படத்தை நினைவூட்டுவதாக கூறியுள்ளனர். இதற்கிடையே இந்த மர்ம பொருள் குறித்த விவாதங்களும் இணையத்தில் எழுந்துள்ளது. பலரும் இது ஏதாவது ஏலியன் கொண்டு வந்து வைத்துள்ள பொருளாக இருக்கலாம் என்றும் கிண்டல் செய்து வருகின்றனர்.