Wednesday, May 24, 2023
Homeசெய்திகள்என்னப்பா இது..? தனியார் பால் பாக்கெட்டுகள் விலை நாளை முதல் மீண்டும் உயர்வு - சோகத்தில்...

என்னப்பா இது..? தனியார் பால் பாக்கெட்டுகள் விலை நாளை முதல் மீண்டும் உயர்வு – சோகத்தில் மக்கள்

தமிழ்நாட்டின் அரசின் ஆவின் பால் பாக்கெட்டுகளுக்கு இணையாக தனியார் பால் பாக்கெட்டுகளும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தனியார் பால் பாக்கெட்டுகள் விலை கடந்தாண்டில் மட்டும் நான்கு முறை உயர்த்தப்பட்ட நிலையில், 2023 தொடக்கத்திலே தனியார் பால் விலை உயர்த்தப்பட்டிருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவைச் சேர்ந்த தனியார் பால் நிறுவனங்களான ஹெரிடேஜ், திருமலா, ஜெர்சி, வல்லபா மற்றும் சீனிவாசா பால் நிறுவனங்கள் தங்களது பால் விலையை ஆண்டின் தொடக்கத்திலே உயர்த்தியுள்ளன. பால் மற்றும் தயிர் ஆகியவற்றின் விலையை லிட்டருக்கு ரூபாய் 2 வரை இந்த நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பால் நிறுவனங்கள் பால் முகவர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் பால் கொள்முதல் உயர்வு மற்றும் உற்பத்தி மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தால் பால் விலை உயர்த்தப்படுவதாக தெரிவித்துள்ளன.

உயர்த்தப்பட்ட பால் விலை விவரம்:

தனியார் பால் பாக்கெட்டுகளின் விலை 3 வகைகளாக பிரித்து உயர்த்தப்பட்டுள்ளது.

• இதன்படி, சமன்படுத்தப்பட்ட பால் லிட்டருக்கு ரூபாய் 50ல் இருந்து ரூபாய் 52 ஆக உயர்த்தப்படுகிறது.
• இரு முறை சமன்படுத்தப்பட்ட பால் ரூபாய் 48ல் இருந்து ரூபாய் 50 ஆக உயர்த்தப்படுகிறது.
• நிலைப்படுத்தப்பட்ட பால் ரூபாய் 62ல் இருந்து ரூபாய் 64 ஆக உயர்த்தப்படுகிறது.
• நிறை கொழுப்பு பால் ரூபாய் 70ல் இருந்து ரூபாய் 72 ஆக அதிகரிக்கிறது.
• தயிர் பாக்கெட்டுகளின் விலை ரூபாய் 72ல் இருந்து 74 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆவினில் பால் பாக்கெட்டுகள் விலையை காட்டிலும் தனியார் பால் பாக்கெட்டுகள் விலை ரூபாய் 20 அதிகம் ஆகும். இந்த திடீர் விலை உயர்வால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தனியார் நிறுவனங்களின் இந்த பால் விலை உயர்வுக்கு பொதுமக்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு பால் முகவர் சங்கத் தலைவரும் பால் விலை உயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, உடனடியாக தமிழ்நாடு அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.