வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் நீண்ட இழுபறிக்கு பிறகு ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார்.
அமெரிக்க அதிபருக்கான தேர்தல் கடந்த மூன்றாம் தேதி நடைபெற்றது. இதில் குடியரசு கட்சி சார்பாக அதிபர் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பாக ஜோ பிடனும் போட்டியிட்டனர். இந்த தேர்தலின் ஆரம்பம் முதலே பல திருப்பங்களுடன் நடைபெற்றது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் பெரும்பாலும் ஓட்டு போட வரமாட்டார்கள் என்று கருதிய நிலையில் இந்த முறை தான் அதிக அளவில் வாக்குகள் பதிவானது. தபால் வாக்குகளும் அதிக அளவில் பதிவானது.
இந்த நிலையில் தான் 3ம் தேதி வாக்குப்பதிவு முடிந்த உடனே வாக்கு எண்ணிக்கையும் தொடங்கியது. ஆரம்பத்தில் டிரம்ப் முன்னிலையில் இருந்தாலும் அதன் பின்னர் ஜோ பிடன் கை ஓங்க தொடங்கியது. ஒரு கட்டத்தில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதையே கணிக்க முடியாத சூழல் உருவானது. ஆனால் பிடனுக்கு கிடைத்த வரலாறு படைத்த வாக்குகள் ஜனநாயக கட்சியினருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது.
அமெரிக்காவில் மொத்தம் இருக்கும் 538 வாக்குகளில் வெற்றி பெற 270 வாக்குகள் பெற வேண்டும். இந்த நிலையில் தான் பென்சில்வேனியா உள்ளிட்ட சில மாகாணங்களில் முடிவுகள் வர தாமதம் ஆனதால் வெற்றியாளரை அறிவிப்பதிலும் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையே டிரம்ப் வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடைபெற்றுள்ளதாகவும் வாக்கு எண்ணிக்கையை உடனே நிறுத்த வேண்டும் எனவும் கூறி வந்தார். டிரம்புக்கு ஆதரவாக அவருடைய ஆதரவாளர்களும் போராட்டத்தில் குதித்தனர்.
இதற்கிடையே 20 ஓட்டுகளை கொண்ட பென்சில்வேனியா மாகாணத்தில் ஜோ பிடன் வெற்றி பெற்றதாக சற்று முன்பு அறிவிப்பு வெளியானது. இதையடுத்து 290 ஓட்டுகளை பெற்று ஜோ பிடன் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பிடன் பொறுப்பேற்க இருக்கிறார். ஜோ பிடன் வெற்றி அடைந்துள்ளதால் அமெரிக்க வரலாற்றில் முதல் ஆப்பிரிக்க அமெரிக்க வம்சாவளி பெண் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்க இருக்கிறார். இவருடைய தாய் தமிழகத்தின் மன்னார்குடியை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.