நியூயார்க் : அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெறுவது இந்தியாவுக்கு நல்லதல்ல என ஜுனியர் டிரம்ப் கூறியிருக்கிறார். அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றும் பொழுது அவர் இதை தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ம் தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பாக அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பாக ஜோ பிடன் போட்டியிடுகிறார். தேர்தல் நெருங்கி வர அங்கு பிரச்சாரங்களும் சூடு பிடித்துள்ளது. இந்த முறை அதிபர் தேர்தலில் அமெரிக்க வாழ் இந்தியர்களின் ஓட்டு முக்கிய பங்கு வகிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது . இதனால் இரண்டு அதிபர் வேட்பாளர்களும் போட்டி போட்டுகொண்டு இந்தியர்களின் வாக்குகளை கவர திட்டமிட்டுள்ளனர்.
ஜோ பிடன் துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸை தேர்வு செய்துள்ளார். இது இந்தியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு எதிர் நடவடிக்கையாக அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடியின் நட்பை முன்னிறுத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் குடியரசு கட்சியினர் . டிரம்புக்கு ஆதரவாக அவருடைய மகன் ஜுனியர் டிரம்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று நியூயார்க்கில் இந்திய- அமெரிக்க சங்கத்தின் உறுப்பினர்கள் மத்தியில் ஜூனியர் டிரம்ப் உரையாடினார் .
அப்போது அவர் நாம் சீனாவின் அச்சுறுத்தல் குறித்து புரிந்துகொள்ள வேண்டும், இந்த விஷயத்தில் இந்திய அமெரிக்கர்களை தவிர யாராலும் தெளிவாக புரிந்துகொள்ள முடியாது என்றார். தன்னுடைய லிபரல் பிரிவிலேஜ் எனும் புத்தகத்தில் ஜோ பிடனின் ஊழல்கள் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளதாக கூறியுள்ள அவர், தன்னுடைய புத்தகத்தில் ஜோ பிடனின் மகன் ஹண்டர் பிடனுக்கு சீனா எப்படி 1.5 பில்லியன் டாலர் நிதி வழங்கியது என்பது குறித்து கூறப்பட்டுள்ளது. ஏனெனில் ஹண்டர் பிடன் ஒரு தொழிலதிபர் அல்லது ஜோ பிடனை விலைக்கு வாங்க முடியும் என அவர்களுக்கு தெரியும் என்றார்.
ஒருவேளை ஜோ பிடன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் சீனாவுடன் மென்மையான போக்கை கடைபிடிப்பார். ஜோ பிடன் அதிபராக வருவது இந்தியாவுக்கு நல்லதல்ல என்றும் எச்சரித்தார். இந்திய அமெரிக்கர்கள் குறித்து அவர் கூறும்பொழுது , அவர்கள் என் மனதிற்கு நெருக்கமானவர்கள், இந்த சமூகத்தை நான் நன்கு அறிவேன், இந்திய அமெரிக்கர்கள் கடின உழைப்பாளர்கள், அவர்கள் குடும்பம் மற்றும் படிப்பு சார்ந்து இயங்க கூடியவர்கள் என்றார்.
மேலும் இந்தாண்டின் தொடக்கத்தில் டிரம்பின் இந்திய வருகையை நினைவு கூர்ந்த ஜுனியர் டிரம்ப், பிரதமர் மோடியுடன் தன்னுடைய தந்தை இருந்த போது மக்களிடையே பெரும் உற்சாகம் காணப்பட்டதாகவும் கூறினார் .
அதிபர் தேர்தலின் தொடக்கத்தில் டிரம்புக்கு அதிக ஆதரவு இருந்தது, ஆனால் கொரோனா வைரஸ் பரவல், ஜார்ஜ் பிளாயிடு படுகொலையை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தை கையாண்ட விதம் உள்ளிட்ட காரணங்களால் டிரம்ப்க்கு எதிரான மனநிலை அங்கு அதிகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.