Saturday, March 25, 2023
Homeசெய்திகள்உலகம்யாருக்கும் கிடைக்காத ஓட்டு.. வரலாறு படைத்த ஜோ பிடன்.. எப்படி சாதித்தார்?

யாருக்கும் கிடைக்காத ஓட்டு.. வரலாறு படைத்த ஜோ பிடன்.. எப்படி சாதித்தார்?

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் இதுவரை இல்லாத அளவாக மிக அதிக வாக்குகள் பெற்று ஜோ பிடன் வரலாற்று சாதனை படைத்துள்ளார். நீண்ட இழுபறிக்கு பிறகு அதிபர் தேர்தல் முடிவுகள் தற்போது முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 3ம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையும் உடனே தொடங்கியது ஆனால் முடிவுகள் வருவதில் தான் தாமதம் ஆகிறது. பெரும்பாலான ஓட்டுக்கள் தபால் ஓட்டுகளாக அமைந்ததால் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. நேற்று மாலை வரை டிரம்ப், ஜோ பிடன் இருவரில் யாருக்கு வேண்டுமானாலும் வாய்ப்பு கிடைக்கும் என்கிற சூழல் இருந்தது. ஆனால் நேற்று இரவில் நிலைமை அப்படியே மாறியது. இதனால் ஜோ பிடனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமானது. இதுவரை வெளியான முடிவுகளின் படி ஜோ பிடன் 264 இடங்களை கைப்பற்றியுள்ளார். டிரம்புக்கு 214 இடங்கள் தான் கிடைத்தன.

இந்த அதிபர் தேர்தலில் ஜோ பிடனுக்கு வேறு எந்த அதிபருக்கும் கிடைக்காத அளவு மக்கள் ஓட்டு பதிவாகியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இடையே நடத்தப்பட்ட இந்த தேர்தலில் தொற்றுநோய் அச்சம் காரணமாக மக்கள் பெரும்பாலும் ஒட்டு போட வரமாட்டார்கள் என்றே கணிக்கப்பட்டது. ஆனால் கணிப்புகளை பொய்யாக்கி இந்த தேர்தலில் மொத்தம் 160 மில்லியன் வாக்குகள் பதிவாகியுள்ளன. அதில் 101 மில்லியன் வாக்குகள் தபால் ஓட்டுகள். இதில் ஜோ பிடனுக்கு மட்டும் இதுவரை 72 மில்லியன் ஓட்டுகள் கிடைத்துள்ளது. அதுமட்டுமல்ல ஒருசில மாகாணங்களில் இன்னமும் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெறுகிறது, இதனால் பிடனுக்கு கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.

How joe biden gets more votes than any other presidential candidate

இதற்கு முன்பு அதிபர் தேர்தலில் ஒருவருக்கு கிடைத்த அதிகபட்ச ஓட்டுகளாக முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு 69.4 மில்லியன் ஓட்டுகள் பதிவானதே சாதனையாக உள்ளது. ஆனால் அந்த சாதனையை இப்போது ஜோ பிடன் முறியடித்துள்ளார். இதை ஜோ பிடன் எப்படி சாத்தியமாக்கியுள்ளார் என்பதை பார்க்கலாம்.

ஜோ பிடனின் பிரச்சாரம் தொடக்கத்தில் ஜனநாயக கட்சியினரின் பாரம்பரிய வாக்காளர்களை மையப்படுத்தியே இருந்தது. அதில் முக்கியமாக, சிறுபான்மையினர், கறுப்பினத்தவர்கள், லத்தின் அமெரிக்கர்கள், ஆசிய அமெரிக்கர்கள், மற்றும் படித்த வெள்ளையின மக்கள் என அனைவரையும் உள்ளடக்கியதாக அமைந்தது. இவர்கள் அனைவரும் பெரும்பாலும் 2016 ஆம் ஆண்டு தேர்தலில் ஹிலாரி கிளிண்டனுக்கு வாக்களித்தவர்கள். குறிப்பாக கிளிண்டனுக்கு கடந்த தேர்தலில் பெண் வாக்காளர்கள் ஓட்டு அதிகம் கிடைத்தது. இந்த தகவலை வைத்து பிடன் அணியினர் அணைத்து தரப்பிலும் இருக்கும் பெண் வாக்காளர்களை வெளியே கொண்டுவந்தனர்.

பல்வேறு காரணங்களுக்காக கடைசி நேரத்தில் டிரம்புக்கு எதிரான அலையும் அடிப்படை காரணமாக அமைந்தது. கொரோனா பெருந்தொற்றை மோசமாக கையாண்ட விதம் மக்களுக்கு அதிரூபத்தியை ஏற்படுத்தியது. உலகிலேயே கொரோனாவால் அமெரிக்கா தான் மோசமாக பாதிக்கப்பட்டது. 2 லட்சம் மக்கள் வரை அங்கு உயிரிழந்தனர், இதற்கு டிரம்பின் தவறான புரிதல் மற்றும் அணுகுமுறையும் காரணமாக சொல்லப்பட்டது. இது பிடனுக்கு பெரிய அளவில் கை கொடுத்தது.

How joe biden gets more votes than any other presidential candidate

ஜார்ஜ் பிளாயிடு படுகொலை

அடுத்தது பிளாக் லிவ்ஸ் மேட்டர்ஸ் இயக்கம். இதுகுறித்த விவாதம் மற்றும் முன்னெடுப்புகள் 2020ல் தொடங்கவில்லை என்றாலும், ஜார்ஜ் பிளாயிடு படுகொலை தேர்தல் நேரத்தில் எரிகின்ற தீயில் எண்ணெயை ஊற்றியது போல் ஆகிவிட்டது. மின்னபோலீஸ் நகரில் வெள்ளை இன போலீஸ் அதிகாரியால் கறுப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாயிடு கொல்லப்பட்ட பிறகு நாடு முழுவதும் காறுப்பினத்தவர்கள் மீதான அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் வெடித்தது.

அப்போது ஜார்ஜ் பிளாயிடு தன்னுடைய கடைசி வார்த்தையாக கூறிய என்னால் மூச்சு விட முடியவில்லை என்கிற வார்த்தையை போராட்டத்தின் போது பெரும்பாலான மக்கள் கூறினர். ஆனால் அதிபர் டிரம்போ போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கடுமையாக விமர்சனம் செய்தார். இது டிரம்புக்கு எதிரான இனவெறி குறித்த பிரச்சாரத்தில் ஜோ பிடன் தரப்புக்கு பெருமளவில் கைகொடுத்தது.

George Floyd

2016 ஆம் ஆண்டை போலவே இந்த முறையும் கல்லூரி பட்டம் முடிக்காத வெள்ளை இன இளைஞர்கள் பெருமளவில் டிரம்புக்கு ஆதரவாக களமிறங்கியதாக சில புள்ளி விவரங்கள் கூறின. ஆனால் பேட்டில் கிரவுண்ட் என அழைக்கப்படும் பாரம்பரியமாக எந்த கட்சிக்கும் நிலையாக வாக்களிக்காத முக்கிய மாகாணங்களில் டிரம்ப் ஆதரவு தளத்தை அதிகரிக்க பிடன் தரப்பு அனுமதிக்கவில்லை. மேலும் ஜோ பிடன் ஜனநாயக கட்சி என்பது பின்தங்கியவர்கள் மற்றும் தொழிலாள வர்க்க குடும்பங்களின் கட்சி என்கிற பிம்பத்தை ஏற்படுத்தினார். பெரும் பொருளாதார நெருக்கடியும் சில பகுதிகளில் எதிரொலித்தது. இப்படியான பல காரணங்கள் தான் டிரம்புக்கு எதிரான போராட்டத்தில் ஜோ பிடனுக்கு வரலாற்று ரீதியிலான வாக்குப்பதிவை பெற்று கொடுத்தது.