Tuesday, March 28, 2023
Homeசெய்திகள்உலகம்1.2 மில்லியன் டன் அணு உலை கழிவுநீரை கடலில் திறந்துவிட முடிவெடுத்த ஜப்பான்!

1.2 மில்லியன் டன் அணு உலை கழிவுநீரை கடலில் திறந்துவிட முடிவெடுத்த ஜப்பான்!

புகுஷிமா : ஜப்பான் அரசு புகுஷிமா அணு உலையில் இருக்கும் கதிரியக்க கழிவுநீரை கடலில் திறந்து விட முடிவெடுத்துள்ளது. ஜப்பானின் இந்த முடிவு பெரும் ஆபத்தை விளைவிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

2011 மார்ச் 11, மிகப்பெரிய நிலநடுக்கம் ஜப்பானை உலுக்கியது. 9.0 என்கிற ரிக்டர் அளவுகோலில் பதிவான இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து பெரும் சுனாமி ஜப்பானை தாக்கியது. இந்த சுனாமி பாதிப்பால் ஜப்பானின் புகுஷிமா டாய்ச்சி அணு உலை பெரும் சேதத்தை சந்தித்தது. அதை தொடர்ந்து அணு உலையின் செயல்படும் நிறுத்தப்பட்டது. 1986 ஆம் ஆண்டு ஏற்பட்ட செர்னோபில் அணு உலை விபத்துக்கு பிறகு உலகம் சந்திக்கும் இரண்டாவது பெரிய அணு உலை விபத்தாக இது இருந்தது. அந்த விபத்துக்கு பிறகு அணு உலையை குளிர செய்ய பயன்படுத்தப்பட்ட 1.2 மில்லியன் டன் கதிரியக்க தன்மை கொண்ட கழிவுநீர் அணு உலையை சுற்றியுள்ள பெரிய இடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இப்பொது இந்த நீரை தான் கடலில் திறந்துவிட ஜப்பான் அரசு முடிவெடுத்துள்ளது. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொட்டிகளில் இந்த நீர் சேமிக்கப்பட்டுள்ளதால் அணுசக்தி ஆலையில் சேமிப்பு இடம் முடிவடைந்துள்ளது. இதனால் இந்த நீரை அப்புறப்படுத்துவது குறித்து பல வருடங்களாக விவாதம் செய்யப்பட்டு கடந்த அக்டோபர் 16ம் தேதி முடிவெடுக்கப்பட்டது. அதன்படி 2022 தொடக்கத்தில் இந்த கதிரியக்க நீரை கடலில் திறந்து விடுவது என முடிவெடுத்துள்ளனர். இந்த நீரில் இருக்கும் கதிரியக்க தன்மை கொண்ட ட்ரிடியம், கோபால்ட் மற்றும் கார்பன் -12 போன்ற ஐசோடோப்புகள் கடல்வாழ் உயிரினங்களை பெரிய அளவில் பாதிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவற்றின் மூலம் மனிதர்களுக்கும் கேன்சர் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இந்த நீரை பயன்படுத்த நேரிடும் பட்சத்தில் மனிதர்களின் டி.என்.ஏ.வில் கூட மாற்றங்களை ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து கருத்து கூறியுள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் சுகாதார அறிவியல் இயக்குநர் ஜெனரல் ஏ.கே. சிங், இவ்வளவு அதிக அளவிலான கதிரியக்க தன்மை கொண்ட நீரை கடலில் திறந்து விடுவது இதுவே முதல்முறை. இது மோசமான முன்னுதாரணமாக மாறிவிடும் என்று எச்சரித்துள்ளார். சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான கவலைகள் மனித இனத்தின் இருப்புக்கு முக்கியமானவை. உலகம் இதற்கு மாற்று வழி குறித்து நிச்சயம் விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ஆபத்தை குறைத்து மதிப்பிட கூடாது :

அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் மயக்க மருந்து மற்றும் அவசர பிரிவு உதவி பேராசிரியர் யுத்யாவீர் சிங் கூறுகையில், இதன் அபாயங்கள் என்பது அணு கழிவுநீரில் உள்ள அசுத்தங்களின் அளவு மற்றும் அவற்றின் தன்மை ஆகியவற்றைப் பொறுத்தது என்றார். பொதுவாக சீசியம், கோபால்ட், கார்பன் -14 மற்றும் ட்ரிடியம் ஆகியவற்றை உள்ளடக்கிய கதிரியக்க ஐசோடோப்புகளே இந்த அணு கழிவு நீரில் இருக்கும் அசுத்தங்கள். இதில் சீசியத்தின் அரை ஆயுள் 30 ஆண்டுகள் ஆகும், இது பாதி சிதைவதற்கு 30 ஆண்டுகள் ஆகும். ட்ரிட்டியத்தின் அரை ஆயுள் 12 ஆண்டுகள் ஆகும் என்றார்.

மேலும் அனைத்து கதிரியக்க ஐசோடோப்புகளும் புற்றுநோயை ஏற்படுத்தும், மற்றும் அவை நீண்டகால வெளிப்பாட்டில் கூட பாதிப்பை கொடுக்கும். செர்னோபில் விபத்து ஏற்பட்டு 20 ஆண்டுகளுக்கு பிறகு தைராயிடு புற்றுநோய் அதிகரித்ததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடலுக்குள் நீர் வெளியேற்றப்பட்டதும், கடல் உணவை முற்றிலுமாகத் தவிர்த்து, இப்பகுதியில் உள்ள மக்கள் கரையோரப் பகுதியிலிருந்து விலகிச் செல்வது நல்லது என்று யுத்யாவீர் சிங் கூறியிருக்கிறார். கடந்த காலங்களில், பிரான்சில் அப்புறப்படுத்தப்பட்ட கதிரியக்க நீர் வடக்கு அட்லாண்டிக் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்களுக்குச் சென்று ஆமைகளின் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் செத்து கரை ஒதுங்கின, இப்போது தென்கிழக்கு ஆசிய நாடுகள் அதிக ஆபத்தில் இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சில ஜப்பானிய அதிகாரிகள் தண்ணீரை விடுவிப்பதற்கு முன்பு அதை நீர்த்துப்போகச் செய்வார்கள் என்றும் அதில் ட்ரிடியம் மட்டுமே இருக்கும் என்றும் கூறியுள்ளனர். இதன்மூலம் 40 மடங்காக அதன் தாக்கம் குறையும் டிரிடியம் மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு குறைவான ஆபத்தையே விளைவிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். அதேசமயம் பிரச்சினையை கண்காணித்து வரும் மற்ற சுகாதார வல்லுநர்கள், இதில் ஏற்படும் ஆபத்தை ஒருபோதும் குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடாது என்று எச்சரித்துள்ளனர். ஜப்பானின் இந்த முடிவுக்கு சுற்றுசூழல் ஆர்வலர்கள் மற்றும் மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.