Tuesday, March 28, 2023
Homeசெய்திகள்உலகம்அமெரிக்க தேர்தலில் வேலையை காட்டும் ஈரான் ஹேக்கர்கள்.. பேஸ்புக் வெளியிட்ட தகவல்

அமெரிக்க தேர்தலில் வேலையை காட்டும் ஈரான் ஹேக்கர்கள்.. பேஸ்புக் வெளியிட்ட தகவல்

அமெரிக்க அதிபர் தேர்தலில் குளறுபடியை உருவாக்கு எண்ணத்தில் ஈரான் நாட்டு ஹேக்கர்கள் தவறான தகவல்கள் மற்றும் மிரட்டல் இமெயில் அனுப்பி வருவதாக பேஸ்புக் நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பிற நாட்டு தலையீடு இருக்க வாய்ப்பிருப்பதாக நீண்ட நாட்களாகவே குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வந்தது. கடந்த முறை ரஷ்யா டிரம்ப் வெற்றி பெற சில வேலைகள் செய்ததாகவும் சொல்லப்பட்டது. மேலும் பிரச்சாரத்திற்காக கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்திடம் பேஸ்புக் நிறுவனம் பயனாளர்களின் தகவல்களை அவர்களது அனுமதியின்றி கொடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. இதனால் இந்த தேர்தலின் போது பேஸ்புக் நிறுவனம் மிக கவனமாக செயல்பட்டு வருகிறது.

பிற நாட்டு தலையீடு இருக்க கூடாது என்று அமெரிக்க அதிகாரிகளும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். ரஷ்யா டிரம்ப்புக்கு சாதகமாகவும், ஈரான், சீனா உள்ளிட்ட நாடுகள் டிரம்புக்கு எதிரான வகையிலும் செயல்பட வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது. டிரம்புடனான விவாதத்தின் போது ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் அமெரிக்க தேர்தலில் வேறு எந்த நாட்டின் தலையீடும் இருந்தாலும் அவர்கள் அதற்குரிய விலையை கொடுக்க நேரிடும் என்று எச்சரித்திருந்தார். இந்த நிலையில் தான் பேஸ்புக் இப்படியான ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்த வாரம் ஹேக்கர்கள் சில அச்சுறுத்தும் இமெயில்கள் மற்றும் வாக்காளர்களின் ரிஜிஸ்டர் சிஸ்டத்திற்குள் ஹேக்கர்கள் நுழைவது போன்று காண்பிக்கப்படும் ஆன்லைன் விடியோவிற்கும் அமெரிக்க அதிகாரிகள் ஈரானை குற்றம்சாட்டியிருந்தார். ஆனால் அதற்கு ஈரான் மறுப்பு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தான் பேஸ்புக் இதுகுறித்து கூறுகையில் அந்த வீடியோவை பேஸ்புக்கில் பகிர முயற்சி செய்த ஒரு போலி கணக்கை முடக்கியுள்ளதாக கூறியது. அந்த ஒரு கணக்கு மூலம் மேலும் 20 பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போலி கணக்குகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கின் இணைய பாதுகாப்புக் கொள்கையின் தலைவரான நதானியல் க்ளீச்சர் இதுபற்றி கூறுகையில், புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கணக்குகள் பெரும்பாலும் செயலற்றவையாக உள்ளன. ஆனால் முன்பு நிறைய தவறான தகவல்களை பரப்ப முயற்சித்துள்ளன என்றார்.கடந்த செவ்வாய் அன்று இவருடைய குழு ஏப்ரல் மாதம் முடக்கப்பட்ட போலி செய்திகளை பரப்பும் நெட்வொர்க்கின் சிறிய தொழில்நுட்ப தொடர்பை கண்டறிந்துள்ளனர். அந்த தொடர்பில் உள்ளவர்கள் ஈரான் அரசாங்கத்துடன் தனிப்பட்ட வகையில் தொடர்புடைய நபர்களாக இருந்தனர் என்றும் கூறியுள்ளார்.

மேலும் மெக்ஸிகோ மற்றும் வெனிசுலாவைச் சேர்ந்தவர்கள் நடத்தும் இரண்டு பேஸ்புக் பக்கங்கள் மற்றும் 22 இன்ஸ்டாகிராம் கணக்குகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாகவும் பேஸ்புக் கூறியுள்ளது. இந்த கணக்குகளில் போலியான அடையாளங்கள் மூலம் அமெரிக்காவின் அரசியல் நிகழ்வுகள் குறித்து பதிவுகள் வெளியிடப்பட்டு வந்துள்ளது. அதில் சில கணக்குகள் அமெரிக்கர்கள் போன்று காட்டிக்கொண்டு நிறவெறி, பெண்ணியம் சுற்றுசூழல் உள்ளிட்ட தலைப்புகளில் பதிவிட்டு வந்துள்ளனர். FBI உதவியுடன் இவர்கள் குறித்த விவரங்களை கண்டுபித்துள்ளதாகவும் பேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது.

அமெரிக்க அரசியலில் டிஜிட்டல் பிரச்சாரம் என்பது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த முறை தேர்தலின் போதே டிரம்ப் டிஜிட்டல் பிரச்சாரத்திற்காகவே பெருமளவில் செலவிட்டார். இந்த டிஜிட்டல் பிரச்சாரங்களில் மிக எளிதாக பிற நாடுகளின் ஆதிக்கத்தை கொண்டுவர முடியும். அதில் மிக முக்கியமானது போலி செய்திகள். அதனால் தான் இம்முறை பேஸ்புக் நிறுவனம் மிக தீவிரமாக இந்த போலி செய்திகளுக்கு எதிராக களமிறங்கியுள்ளது. இதற்கிடையே அதிபர் டிரம்ப்பின் பிரச்சாரத்திற்கான இணையதளம் பக்கம் இன்று ஹேக்கர்களால் முடக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.