வாஷிங்டன் : உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. குடியரசு கட்சியின் வேட்பாளராக அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சியின் வேட்பாளராக ஜோ பிடன் போட்டியிடுகிறார். தேர்தல் பிரச்சாரங்கள் ஓய்ந்த நிலையில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
அமெரிக்காவில் 1845 லிருந்து நவம்பர் மாதத்தின் முதல் திங்கள்கிழமைக்கு அடுத்த தினமே அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு முன்கூட்டியே வாக்களிக்கும் உரிமை அமெரிக்காவில் இருப்பதால் அதிபர் டிரம்ப் உட்பட ஏராளமானோர் முன்கூட்டியே வாக்களித்துவிட்டார்கள். இந்த தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்கும் நேரமும் முடிவடையும் நேரமும் மாகாணத்திற்கு மாகாணம் மாறுபடும். பெரும்பாலும் நியூயார்க் மற்றும் வடக்கு டகோட்டாவில் செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு தொடங்கும் வாக்குப் பதிவு இரவு 9 மணிக்கு முடிவடையும். சில பகுதிகளில் காலை 5 மணிக்கெல்லாம் வாக்குப் பதிவு நடைபெறும்.
கடந்த முறை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் தான், அமெரிக்க வரலாற்றில் மிக அதிக வயதில் முதல்முறை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அப்போது டிரம்புக்கு 70 வயது. மிக குறைந்த வயதில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஜான் எப் கென்னடி. 43 வயதில் இவர் அதிபராக தேர்வானார். வளர்ந்த நாடுகளில் அமேரிக்கா தான் மிக குறைந்த வாக்குப்பதிவு விகிதங்களை கொண்டுள்ளது. சராசரியாக 60 சதவிகித மக்கள் வாக்களிப்பர். ஆனால் இந்த முறை அதில் மாற்றம் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவை பொறுத்தவரை மக்கள் வாக்குகளை அதிகம் பெற்று முன்னிலை பெறுவதை விட எலக்ட்டோரல் காலேஜ் வாக்குகளை அதிகம் பெறுபவர்தான் வெற்றிபெறுவர். மொத்தம் இருக்கும் 538 எலக்டோரல் வாக்குகளில் யார் அதிகம் பெருகிறாரோ அவர் தான் வெற்றியாளர். கடந்த முறை ஹிலாரி கிளிண்டன் 48.2 சதவிகிதம் மக்கள் ஓட்டுக்களை பெற்றார். ஆனால் டிரம்ப் 46.1 சதவிகித வாக்குகள் தான் கிடைத்தது. இருப்பினும் டிரம்ப் 306 எலக்டோரல் வாக்குகள் பெற்றார். ஹிலாரி கிளிண்டனுக்கு 232 வாக்குகள் தான் கிடைத்தன. இதனால் டிரம்ப் அந்த தேர்தலில் வெற்றி பெற்றார். இதுவரை அமெரிக்க தேர்தல் வரலாற்றில் 5 முறை இப்படி மக்கள் ஓட்டுக்கள் அதிகம் பெற்ற வேட்பாளர்கள் எலக்டோரல் வாக்குகள் குறைவாக பெற்று தோல்வியை சந்தித்துள்ளனர்.
ஹிலாரி கிளிண்டன் மட்டும் முதல் பெண் அதிபர் வேட்பாளர் கிடையாது. கிட்டத்தட்ட 200 பெண்கள் அதிபர் தேர்தலுக்காக போட்டியிட்டுள்ளனர் ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் சிறிய கட்சிகளால் முன்னிறுத்தப்பட்டவர்கள். இதுவரை 13 அமெரிக்க அதிபர்கள் மட்டுமே இரண்டுமுறை தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு முறையும் அதிபராக பணியாற்றியுள்ளனர். அமெரிக்க தேர்தல்களில் முட்டாள்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் வாக்குப்பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது, ஆனால் ஒரு நபர் ஒரு நீதிபதியால் வாக்களிக்க தகுதியுடையவர் என்று தீர்ப்பளிக்கப்பட்டால் அவர் வாக்களிக்கலாம்.
விண்வெளி வீரர்களையும் விண்வெளியில் இருந்து வாக்களிக்க அமெரிக்கா அனுமதிக்கிறது. விண்வெளி வீரர்கள் குழு உறுப்பினர்-குறிப்பிட்ட பாதுகாக்கப்பட்ட மின்னஞ்சல் மூலம் வாக்குச்சீட்டைப் பெறுவார்கள். விண்வெளி வீரர்களுக்கும் வாக்களிக்கும் முறை முதன்முதலில் 1997 இல் பயன்படுத்தப்பட்டது. வடக்கு கரோலினா, புளோரிடா, மிக்சிகன், விஸ்கான்சின், அரிசோனா ஆகிய மாகாணங்களின் தேர்தல் முடிவுகளே இந்த ஆண்டு தேர்தலில் முக்கிய இடம்பெறும்.