Home செய்திகள் உலக செய்திகள்

போராட்டக்காரர்களுக்காக வீட்டை திறந்து வைத்தார்.. மீட்பர் என புகழப்பட்டார்.. டைம் இதழில் ஹீரோவான இந்தியர்

TIME magazine honored indian american who gave shelter to protesters

வாஷிங்டன்: அமெரிக்காவில் நடைபெற்ற கறுப்பினத்தவர்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது, போராட்டக்காரர்கள் தங்குவதற்கு தன்னுடைய வீட்டை வழங்கிய இந்திய அமெரிக்கரை 2020ம் ஆண்டின் ஹீரோக்கள் பட்டியலில் சேர்த்துள்ளது டைம் பத்திரிக்கை.

ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் அந்த ஆண்டுக்கான சிறந்த மனிதர்கள் பட்டியலை டைம் இதழ் வெளியிடும். உலகம் முழுவதிலும் இருந்து ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த மனிதர்கள் தேர்வு செய்யப்பட்டு கவுரவிக்கப்படுவார்கள். அதன்படி இந்தாண்டுக்கான பட்டியல் வெளியாகியுள்ளது. இயற்கை பேரழிவுகளிலிருந்து தங்கள் நாடுகளைப் பாதுகாத்த தன்னார்வலர்கள் முதல் உணவு மற்றும் தங்குமிடம் வழங்கும் குடிமக்கள் வரை, இந்த 2020 ஆம் ஆண்டில் ஹீரோக்கள் பட்டியலில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக டைம் இதழ் கூறியுள்ளது.

2020ம் ஆண்டு ஹீரோக்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் தீயணைப்பு வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்தாண்டு தொடக்கத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய தீவிபத்தில் இருந்து தங்கள் நாட்டை பாதுகாப்பாக வைத்திருக்க எல்லாவற்றையும் பணயம் வைத்தார்கள். மற்றும் சிங்கப்பூரில் உள்ள உணவு-கடை உரிமையாளர்கள் ஜேசன் சுவா மற்றும் ஹங் ஜென் லாங் ஆகியோர் கொரோனா லாக்டவுன் சமயத்தில் மக்கள் யாரும் பட்டினியோடு இருக்காமல் இருக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்தார்கள் அவர்களும், தான் தினசரி செய்தித்தாள் போடும் பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அவர்கள் வீடு தேடியே வாங்கி வந்து கொடுத்து சுமார் 1000 வீடுகளுக்கு உதவி செய்த கிரெக் டெய்லி என்பவரும் இந்தாண்டுக்கான ஹீரோக்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவர்களுடைய இந்த பட்டியலில் இப்போது அமெரிக்க வாழ் இந்தியரான ராகுல் துபேவும் இடம்பெற்றுள்ளார். இவரை டைம் இதழ் தேவை உள்ளவர்களுக்கு தங்குமிடம் வழங்கியவர் என்று விவரித்துள்ளது. அமெரிக்காவில் இந்தாண்டு கறுப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாயிடு போலீசாரால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது. இதை கண்டித்து நாடு முழுவதும் கடும் போராட்டங்கள் நடந்தன. இந்த போராட்டங்களை ஒடுக்க டிரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. அப்போதுதான் ஜூன் 1ம் தேதி வாஷிங்டன் டீஸியில் உள்ள தெருக்களில் போராட்டக்காரர்கள் திரண்டனர். இந்த போராட்டம் நடைபெறும் இடத்தில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் தான் வெள்ளை மாளிகை இருந்தது. போராட்டம் நடைபெற்ற அதே பகுதியில் தான் ராகுல் துபேவின் வீடும் இருந்தது.

கொரோனா வைரஸ் ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக இரவு 7 மணிக்கு மேல் மக்கள் யாரும் வெளியே செல்ல கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இதனால் போராட்டக்காரர்களை சிக்க வைக்க போலீசார் திடீர் தடுப்பு வேலிகளை ஏற்படுத்தி வைத்திருந்தனர். மேலும் அங்கிருந்தவர்கள் மீது பேப்பர் ஸ்ப்ரே தெளிக்க தொடங்கினர். இதை கவனித்த துபே உடனே நடவடிக்கை எடுக்க முடிவு செய்தார். உடனே தன்னுடைய வீட்டின் கதவை திறந்து வைத்து அனைவரையும் உள்ளே செல்லுங்கள் என்று கூற தொடங்கிவிட்டார் என்று டைம் இதழ் இந்த நிகழ்வை விவரித்துள்ளது. ராகுல் துபே அங்கு சுகாதார பணியாளராக வேலை பார்க்கிறார்.

இதுகுறித்து ராகுல் துபே கூறும் பொழுது போராட்டக்காரர்களை ஊரடங்கு உத்தரவு மீறல் நடவடிக்கையில் இருந்து காப்பாற்ற என்னுடைய வீட்டிற்குள் அடைக்கலம் கொடுத்தேன். சுமார் 70 பேர் அப்போது அங்கிருந்தனர். அந்த ஒரு இரவு முழுவதும் அவர்கள் அங்கு தங்கினர். அவர்களில் பலர் அழுகையும், இருமலும், தகவல்களை பரிமாறிக்கொண்டும், ஜாமீன் பத்திரங்களுக்கான எண்களை எழுதிக்கொண்டும் இருந்தனர். இதுதான் உண்மையான சகோதரத்துவம் என்றும் அவர் கூறினார். மேலும் அன்று இரவு போலீசார் வீட்டிற்குள் நுழைய நிறைய முயற்சிகளை மேற்கொண்டனர் என்றும், வீட்டில் உள்ளவர்களுக்காக ஆர்டர் செய்த பீட்ஸாவை இடைமறிக்க முயன்றனர் என்றும் அவர் கூறியதாக டைம் இதழ் தெரிவித்துள்ளது.

இதன் பிறகு துபே ஒரு மீட்பர் என்று புகழப்பட்டார். பிளாக் லிவ்ஸ் மேட்டர் போராட்டக்காரர்கள் பலரும் இதுகுறித்து டிவிட்டரில் எழுத தொடங்கினர். அவர்களுக்கு இடம் கொடுத்தது வெறும் தேர்வு மட்டும் கிடையாது, என் கண்களுக்கு முன்னால் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் பார்த்தல் வேறு வழி இல்லை என்று தான் சொல்ல தோன்றும். மக்களை கடுமையாக தாக்கிக்கொண்டும், அவர்கள் மீது பேப்பர் ஸ்ப்ரே தெளித்துக்கொண்டும் இருந்தனர் என்று ராகுல் துபே கூறினார். இப்போது அவருடைய இந்த நடவடிக்கையால் 2020ம் ஆண்டிற்கான டைம் இதழின் ஹீரோக்கள் பட்டியலில் தேர்வு செய்யப்பட்டு கவுரவிக்கப்பட்டு இருக்கிறார்.

Exit mobile version