தைபேய் : சீனாவுக்கு அடுத்தகட்டமாக ஷாக் கொடுக்கும் விதமாக தைவான் உள்நாட்டிலேயே நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது. இதற்கிடையே தைவான் அதிபர் சாய் இங்-வென் அமெரிக்க ஆதரவுடன் உள்நாட்டிலேயே கட்டமைக்கப்படும் நீர்மூழ்கி கப்பல்களுடன் புதிய கடற்படையின் வலிமையை கொண்டு ஜனநாயக தீவின் இறையாண்மையை பாதுக்கப்பதாக உறுதியேற்றார்.
சீனா தன்னுடைய நிலப்பகுதி என நீண்ட நாட்களாக உரிமை கொண்டாடி வரும் தைவான் சீனாவை எதிர்கொள்ள தன்னை வலுப்படுத்தும் வேலைகளில் இறங்கியுள்ளது. 2016 ஆம் ஆண்டு புதிய அதிபராக சாய் இங்-வென் பதவியேற்றத்தில் இருந்து சீனா தைவான் மீது ராணுவம் மற்றும் ராஜாங்க ரீதியாக அழுத்தம் கொடுத்து வருகிறது. அதற்கு காரணம் சாய் இங்-வென் தொடர்ந்து சீனாவின் உரிமையை நிராகரித்து வருகிறார்.
மேலும் தைவான் தன்னாட்சி பெற்ற ஜனநாயக நாடு என்பதையும் அழுத்தமாக வலியுறுத்தி வருகிறார். பல நேரங்களில் சீனாவை எதிர்த்தும் இருக்கிறார். தைவானின் பிரகடனத்திற்கு வலு சேர்க்கும் விதமாக அமெரிக்காவும் அந்நாட்டுக்கு தொடர்ந்து உதவி செய்து வருகிறது. சமீபத்தில் தைவானுக்கு 1.8 பில்லியன் டாலர் மதிப்பில் ஆயுத விற்பனைக்கு ஒப்புதல் வழங்கியிருந்தது.
Also Read: யாரும் செல்ல முடியாத இருள் சூழ்ந்த இடம்.. உலகின் ஆழமான பகுதிக்குள் கப்பலை அனுப்பிய சீனா
புதிய நீர்மூழ்கிக் கப்பல்
இப்போது அடுத்த கட்டமாக தன்னுடைய கடற்படையையும் வலுப்படுத்த தொடங்கியுள்ளது. தைவானிடம் இப்போது இரண்டாம் உலக போருக்கு முந்தைய காலத்து பழைய நீர்மூழ்கி கப்பல்கள் தான் உள்ளன. சீனாவின் அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல் முன்னால் இவை ஒன்றுமில்லாமல் போய்விடும். இதனால் இவற்றை உள்நாட்டிலேயே மறுசீரமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தெற்கு துறைமுக நகரமான கவுசியுங்கில் புதிய நீர்மூழ்கிக் கப்பல் கட்டுமானத்தின் தொடக்க விழா நடைபெற்றது. அதில் உரையாற்றிய சாய் இங்-வென், பல்வேறு சவால்கள், சந்தேகங்களையும் கடந்து தைவானின் திறமைக்கு இது ஒரு வரலாற்று மைல்கல் என்று குறிப்பிட்டார். இந்த விழாவில் தைவானில் உள்ள அமெரிக்க தூதர் ப்ரெண்ட் கிறிஸ்டென்சன் கலந்து கொண்டார்.
இந்த நீர்மூழ்கி கப்பல்கள் தைவானின் கடற்படையின் போர் திறன்களை மேம்படுத்துவதற்கும், தைவானை சுற்றி வளைப்பதில் இருந்து எதிரி கப்பல்களைத் தடுப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கும். 2018 ஆம் ஆண்டு அமெரிக்க அரசாங்கம் அந்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு இந்தத் திட்டத்தில் பங்கேற்க அனுமதி வழங்கியது, இருப்பினும் எந்த அமெரிக்க நிறுவனம் இதில் ஈடுபட்டுள்ளன என்பது வெளிப்படையாக தெரியவில்லை. 2025 ஆம் ஆண்டிற்குள் முதல் தொகுப்பாக 8 நீர்மூழ்கி கப்பல்கள் வழங்கப்படும் என்று அரசு ஆதரவு பெற்ற சிஎஸ்பிசி கார்ப்பரேஷன் தைவான் நிறுவனம் கூறியுள்ளது.
Also Read: அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர் கப்பல்.. விரட்டி சென்ற ரஷ்ய கப்பல்.. நடுக்கடலில் நடந்த சம்பவம்
தைவானின் ஆயுதப் படைகள் பெரும்பாலும் அமெரிக்காவால் பொருத்தப்பட்டவை, ஆனால் அதிபர் சாய் நவீன ஆயுதங்களின் உற்பத்திக்கு உள்நாட்டு நிறுவனங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அது இராணுவத்தில் நவீனமயமாக்கல் மற்றும் தன்னிறைவு திட்டத்திற்கு ஒரு பெரிய ஊக்கத்தை வழங்குகிறது.
கடந்த ஜூன் மதம் தான் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட மேம்பட்ட ஜெட் வகையின் முதல் சோதனை விமானத்தை அதிபர் சாய் மேற்பார்வையிட்டார். சீனப் படைகள் தைவானுக்கு அருகே தங்கள் இராணுவ நடவடிக்கைகளை அதிகப்படுத்தியுள்ள இந்த சூழலில் தைவான் தொடர்ந்து தன்னுடைய ராணுவத்தையும் அமெரிக்கா உடனான ராஜாங்க உறவையும் பலப்படுத்தி வருவது சீனாவுக்கு விடுக்கப்படும் சவாலாகவே பார்க்கப்படுகிறது.