வாஷிங்டன்: அமெரிக்காவில் புதிதாக அமைய இருக்கும் ஜோ பிடன் அரசாங்கத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நீரா டாண்டன் என்பவருக்கு முக்கிய பதவியை கொடுக்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலாண்மை மற்றும் பட்ஜெட் அலுவலக இயக்குநராக நியமிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இவர் குறித்த செய்திகள் வெளியானதுமே இவர் என்கிற தகவல்களை இணையதளத்தில் நெட்டிசன்கள் தேட தொடங்கியுள்ளனர். ஆனால் இவர் இதற்கு முன்பே அமெரிக்க அரசாங்கத்தில் பில் கிளிண்டன் மற்றும் ஒபாமா நிர்வாகத்தில் பணியாற்றிய அனுபவமிக்கவர். 50 வயதாகும் டாண்டன் தற்போது அமெரிக்க முன்னேற்றத்திற்கான மையத்தின் தலைமை நிர்வாகியாக பணியாற்றி வருகிறார். மேலும் முன்னாள் அதிபர் ஒபாமா மற்றும் ஹிலாரி கிளிண்டனின் தேர்தல் பிரச்சாரங்களிலும் முக்கிய பங்கு வகித்தவர்.
அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த மாதம் தொடக்கத்தில் நடைபெற்றது. அதன் பின்னர் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை நீண்ட இழுபறிக்கு பிறகு ஜோ பிடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கபட்டது. வெற்றி பெறுவதற்கு தேவையான 272 எலக்ட்டோரல் வாக்குகளுக்கு மேல் வெற்றி பெற்றதால் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பிடன் அடுத்த அதிபராக இருக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சியின் வேட்பாளர் டிரம்ப் தோல்வியை சந்தித்துள்ளார். இருப்பினும் டிரம்ப் தன்னுடைய தோல்வியை ஏற்றுக்கொள்ள மறுத்து வருகிறார். அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற மாட்டேன் என்றும் கூறியுள்ளார். ஆனால் மறுபக்கம் பிடன் ஆட்சியமைப்பதற்கான எல்லா வேலைகளும் செய்து வருகிறார்.
Have You Read This: ஒபாமாவின் அரசாங்கத்தில் பணியாற்றியவர்.. பிடனுக்கு ஆலோசனை வழங்கும் குழுவில் இடம்பிடித்த இந்தியர்
இந்த முறை தான் அமெரிக்க அரசாங்கத்தில் நிறைய இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் அதிகம் பணியாற்ற உள்ளனர். முக்கியமாக அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் அதிபருக்கு கொரோனா வைரஸ் பிரச்சனையை கையாள ஆலோசனை வழங்கும் நிபுணர்கள் குழுவிலும் இரண்டு இந்திய வம்சாவளியினருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதில் ஒரு பெண் தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர்.
இந்த நிலையில் தான் தற்போது மற்றொரு இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணான நீரா டாண்டன், பட்ஜெட் மற்றும் மேலாண்மை அலுவலக இயக்குநராக நியமிக்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே அமெரிக்க சுகாதார மற்றும் மனித சேவைகள் துறையின் சீர்திருத்தத்திற்கான மூத்த ஆலோசகராகவும் பணியாற்றியிருக்கிறார். மேலும் அங்கு பிரபலமான ஒபாமா கேர் என்கிற பராமரிப்பு சட்டத்தை கட்டமைப்பதிலும் முக்கிய பங்காற்றி இருக்கிறார். அதே போல 2016 ஆம் ஆண்டு தேர்தலின் போது ஹிலாரி கிளிண்டனின் விவாதத்திற்கான உரையை தயாரிக்கும் குழுவிலும் இடம்பெற்றவர்.
யார் இந்த டாண்டன் ?
நீரா டாண்டனின் பெற்றோர் இந்தியா வம்சாவளியை சேர்ந்தவர்கள். அவருடைய 5 வயதில் டாண்டனின் பெற்றோர் விவாகரத்து செய்துகொண்டனர். இதன் காரணமாக அவருடைய தாயார், 2 குழந்தைகளை வளர்ப்பதற்கு அரசாங்கத்தின் நலத்திட்டங்களை சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் அல்லது இந்தியாவுக்கு திரும்ப வேண்டிய சூழல் உருவானது. இப்படியான ஒரு நேரத்தில் ஒரு உயர்தர பொதுப் பள்ளியில் தன்னால் பள்ளிப்படிப்பைத் தொடர முடிந்தது அதிர்ஷ்டம் என்று கூறியிருக்கிறார். நீரா பள்ளியில் படிக்கும் போதே விவாதம், அறிவியல் கிளப், நாடகக் கழகம் மற்றும் குடியுரிமைக் குழு உள்ளிட்ட பாடநெறி நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
டாண்டனுக்கு 11 வயதாக இருந்தபோது, அவரது தாயாருக்கு முதலில் ஒரு பயண முகவராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது, அதை தொடர்ந்து ஒரு பாதுகாப்பு நிறுவனத்திற்கான ஒப்பந்த நிர்வாகியாக பதவியைப் பெற்றார், இங்கு சேர்ந்த பிறகு தான் அவர்கள் குடும்பத்திற்கு முதல் வீட்டை வாங்க முடிந்தது. டாண்டன் தன்னுடைய தாய் சொந்த காலில் நிற்கும் வரை அவருக்கு பெரிய உதவியாக இருந்த அரசாங்கதின் நலத்திட்ட கொள்கைகளில் சேவையாற்ற விரும்பினார். 1988ல் அவர் பட்டம் பெற்ற போதே அரசியலில் தனக்கான திட்டங்களை வகுத்து விட்டார். அதில் அமெரிக்காவின் செக்ரெட்டரி ஆப் ஸ்டேட்ஸ் பொறுப்புக்கு வர வேண்டும் என்பது தன்னுடைய இலக்குகளில் ஒன்றாக நியமித்ததாக சொல்லப்படுகிறது.
யேல் சட்ட கல்லூரியில் பட்டம் பெறுவதற்கு முன்னர் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றதாக அமெரிக்க முன்னேற்ற மையத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. டாண்டன் பிறகு முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் நிர்வாகத்தில் உள்நாட்டுக் கொள்கைக்கான இணை இயக்குநராகவும், அப்போதைய முதல் பெண்மணி ஹிலாரி கிளிண்டனின் மூத்த கொள்கை ஆலோசகராகவும் வாழ்க்கையை தொடங்கினார்.
ஒருவேளை டாண்டன் ஜோ பிடனின் மேலாண்மை மற்றும் பட்ஜெட் அலுவலக இயக்குநருக்கான தேர்வாக இருந்தால், கமலா ஹாரிஸை போல எல்லைகளை கடந்து பட்ஜெட் அலுவலகத்துக்கு தலைமை தாங்க போகும் முதல் பெண்ணாக இவர் இருப்பார். எல்லே பத்திரிகையின் வாஷிங்க்டனில் இருக்கும் சக்தி வாய்ந்த பெண்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். மற்றும் பொலிடிகோ பத்திரிகையின் ‘பாலிடிகோ 50’ – அமெரிக்க அரசியலில் உயர்ந்த சிந்தனையாளர்கள் மற்றும் தொலைநோக்கு பார்வையாளர்களின் வருடாந்திர பட்டியல் ஆகியவற்றிலும் அவர் பெயர் இடம் பெற்றுள்ளது. நேஷனல் ஜர்னல் பத்திரிகையும் அவரை வாஷிங்டனின் மிகவும் செல்வாக்கு மிக்க பெண்கள் பட்டியலில் சேர்த்துள்ளது.