பியாங்காங்: உலகளாவிய கொரோனா வைரஸ் பெருந்தொற்றை கருத்தில் கொண்டு வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் கொரோனா வைரசுக்கு எதிரான மருத்துவ அவசரநிலையை இன்னும் கடுமையாக்க உத்தரவிட்டுள்ளார்.
உலகம் முழுவதிலும் அச்சுறுத்தி வரும் கொரோன வைரஸ் பாதிப்பு வடகொரியாவையும் விட்டு வைக்கவில்லை. கடந்த மாதங்களில் சில பாதிப்புகள் ஏற்பட்டவுடன் அந்நாட்டு அரசாங்கம் மிக கடுமையான உத்தரவுகளை பிறப்பித்து இருந்தது. இதற்கிடையே வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் அடிக்கடி மயமாகி இருந்தார்.
முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் அதிபர் கிம் 27 நாட்களுக்கும் மேலாக காணாமல் போயிருந்தார். இதனால் பலரும் அவர் இறந்துவிட்டதாக கூட அப்போது வதந்திகளை பரப்பினர். பின்னர் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கிம் அதன் பின்னர் மீண்டும் மாயமானார். இப்படி வருவதும் போவதுமாக இருந்த வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் கடந்த 25 நாட்களாக மீண்டும் காணவில்லை என்று கூறப்பட்டது.
கிம் இப்படி காணாமல் போகும் சமயங்களில் எல்லாம் அவருடைய சகோதரி கிம் யோ ஜங் அரசு பொறுப்புகளை கவனித்து வந்தார். இந்த நிலையில் 25 நாட்களுக்கு பிறகு கிம் மீண்டும் மக்கள் முன் தோன்றினார். வடகொரியாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோவின் கூட்டத்தில் கிம் பங்கேற்று உரையாற்றினார். அதில் உலகளாவிய கொரோனா வைரஸ் பெருந்தொற்றை கருத்தில் கொண்டு வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் கொரோனா வைரசுக்கு எதிரான மருத்துவ அவசரநிலையை இன்னும் கடுமையாக்க உத்தரவிட்டுள்ளார். கொரோன வைரஸினால் உலகம் முழுவதிலும் ஏற்பட்ட பொருளாதார மற்றும் அரசியல் நிலையற்ற தன்மைக்கு மத்தியில் இந்த கூட்டம் நடைபெற்றது.
ஏற்கனவே சர்வதேச நாடுகளின் பொருளாதார தடைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் வடகொரியா கொரோனா வைரஸ் வருகைக்கு பிறகு மேலும் மோசமான பாதிப்பை கண்டது. இதனால் இந்த கூட்டம் முக்கியத்துவம் பெற்றது. அதில் கலந்துகொண்ட கிம் இப்படியான இந்த பெருந்தொற்று சூழலில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார் என்று வடகொரிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உலக சுகாதார மையத்தின் அறிக்கையின் படி வட கொரியா இம்மாத தொடக்கத்தில் 12,000 பேரை பரிசோதித்தது அதில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகவில்லை என்று கூறியுள்ளது. மொத்தம் 6,173 பேர், அதில் 8 பேர் வெளிநாட்டினர், சந்தேகத்திற்கிடமான கேஸ்கள் என கண்டறியப்பட்டு அக்டோபர் கடைசி வாரத்தில் அவர்களில் 174 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
வரும் ஜனவரி மாதம் புதிய ஐந்தாண்டு திட்டத்தை முடிவு செய்யும் முன் வடகொரியாவின் ஒவ்வொரு துறையிலும் அதன் இலக்கை அடைய 80 நாள் பிரச்சாரத்தை மேற்கொள்ளவும் கிம் ஜோங் உன் அழைப்பு விடுத்துள்ளார். இந்த நிலையில் வடகொரியா பிரதமர் கிம் டோக் ஹுன், பியோங்யாங்கின் தென்கிழக்கில் ஒரு கனரக இயந்திர தொழிற்சாலை மற்றும் ஒரு நோட்புக் தொழிற்சாலைக்குச் சென்று இலக்குகளை அடைவதற்கான முயற்சிகள் குறித்து விவாதித்தார் . இந்த 80 நாள் பிரச்சாரத்திற்கு முன்னதாக தியான் கனரக இயந்திரங்கள் தொழிற்சாலையில் தனியாக கட்டமைக்கப்படும் உபகரணங்களை தயாரிக்க கடுமையாக உழைப்பது குறித்தும் சிறு உரை நிகழ்த்தினார் என்றும் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.