துருக்கி, சிரியாவில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள மக்களிடமும் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
பூகம்பம் எவ்வாறு ஏற்படுகிறது என்பதை கீழே விரிவாக காணலாம். உலகில் லேசான அதிர்ச்சி முதல் கடும் நிலநடுக்கம் வரை சுமார் 10 லட்சம் நிலநடுக்கங்கள் ஆண்டுதோறும் ஏற்படுகின்றன.
பூமியில் மிக ஆழத்தில் ஏற்படும் மாற்றங்களின் வெளிவிளைவுகளே நிலநடுக்கம் ஆகும். பூமியின் மேலே தோடுபோல அமைந்துள்ள மேற்புறப் பகுதி பாறைகளைக் கொண்டுள்ளது. இது புறணி என்று அழைக்கப்படுகிறது.
இப்புறணி எல்லா இடங்களிலும் நிலையாக அமைந்திருக்காது. அவ்வாறு உறுதியாக அமைந்திராத இடங்களில் உட்புறப் பாறைகள் விரிசல் விட்டுச் சரிகையில், உட்புறத்தில் அமைந்த பெரும்பாறைகள் வேறு பெரும்பாறைகளுடன் மிகுந்த ஆற்றலுடன் உராய்கின்றன. அதனால் ஏற்படும் அதிர்வுகள் பூமியின் மேற்பரப்பை அடைவதால் பூமி அதிர்ச்சியான நிலநடுக்கம் ஏற்படுகிறது.
பூமிக்குள்ளே ஏற்படக்கூடிய இம்மாறுதல்கள் எல்லாமே வெளிப்பகுதியில் விளைவினை உண்டாக்குவதில்லை. பூமியின் மேற்புறப் பாறை அடுக்குகள் காப்பு உறை போல அமைந்துள்ளதால், சில இடங்களில் மட்டுமே பூமியின் உள்ளே ஏற்படும் மாறுதல்கள் வெளிப்பகுதியில் விளைவை ஏற்படுத்துகின்றன. அந்த நேரங்களில் பூமியில் சில இடங்களில் மட்டும் அடிக்கடி பூமி அதிர்வு ஏற்படுகிறது. இவ்வாறுதான் பூகம்பம் ஏற்படுகிறது.
பசிபிக் பெருங்கடல் பகுதி, தென் அமெரிக்காவின் மேற்கு கரைப்பகுதி, ஆசியாவின் கிழக்குக் கரைப்பகுதி, மைய நிலக் கடல் பகுதி ஆகியன உலகில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளாகும். ஜப்பானில் தான் மிக அதிக அளவில் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. ஆண்டின் ஒவ்வொரு நாளும் பூமி அதிர்வு ஏற்படுகிறது. இவற்றில் பெரும்பாலானவை மிக மிக லேசானவை. சேதம் ஏதும் ஏற்படுத்தாதவை.
பசிபிக் கடலில் உள்ள பல தீவுகள், இந்தோனேசியா, துருக்கி, கிரேக்கம், தென் அமெரிக்கச் சிலி ஆகியன நிலநடுக்கப் பகுதியில் அமைந்துள்ளன. 1883ம் ஆண்டு இந்தோனேசியாவின் கரகடோவாத் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டு அத்தீவின் சில பகுதிகள் கடலில் மூழ்கின. 1923ம் ஆண்டில் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 1 லட்சத்து 80 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
1939ல் தென் அமெரிக்காவில் உள்ள சிலி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 20,000 பேரும், அதே வருடத்தில் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 30,000 பேரும் உயிரிழந்தனர். 1993ம் ஆண்டு இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஏறத்தாழ 25,000 பேரும், 2001ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி அன்று குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 20,000 பேரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.