அண்டார்டிகாவில் இருந்து மிகப்பெரிய ஐஸ்கட்டி பாறையான A68 நகர்ந்து வருவது பென்குயின் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்கள் சிலவற்றுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதிகரிக்கும் புவி வெப்பமயமாதலால் உலகம் முழுவதிலும் பல்வேறு பிரச்சனைகளும் கால நிலை மாற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன. கடந்த 100 ஆண்டுகளில் மட்டும் பூமியின் வெப்பநிலை 1.5 செல்சியல்ஸ் அளவிற்கு அதிகரித்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 2050 ஆம் ஆண்டிற்குள் இது 2 டிகிரி செல்ஸியல்சாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்படி உயரும் வெப்பநிலை காரணமாக அண்டார்டிகா பகுதிகளில் பனிப்பாறைகள் உடைந்து கடலில் கலந்து வருகின்றன. இதன் காரணமாக கடல் மட்டம் அதிகரிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தான் கடந்த 2017 ஆம் ஆண்டில் இருந்து சுமார் 5,800 சதுர கிமீ பரப்பளவு கொண்ட மிகப்பெரிய பனிப்பாறை ஒன்று அண்டார்டிகா பகுதியில் பெயர்ந்து நகர தொடங்கியது. இந்த பனிப்பாறைக்கு தான் ஆய்வாளர்கள் A68 என பெயரிட்டுள்ளனர். இந்த ஆண்டு கடல் நீரோட்டம் காரணமாக, இந்த A68 பனிப்பாறை தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் நகர்ந்து அதன் பின்னர் அது தெற்கு ஜார்ஜியாவின் தொலைதூர துணை அண்டார்டிக் தீவை நோக்கி நகர்ந்து செல்வதாக கணிக்கப்பட்டுள்ளது, இந்த பனிப்பாறை அங்கிருக்கும் தீவின் ஏராளமான வனவிலங்குகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது குறித்த அச்சத்தைத் தூண்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பனிப்பாறைகள் தற்போது கடல் நீரோட்டங்களுடன் பயணிக்கின்றன, பின்னர் அது ஆழமற்ற பகுதியில் சிக்கிக்கொள்ளலாம் அல்லது அதுவாகவே சென்று கரை ஒதுங்கலாம்.
A68a என்றால் என்ன, அது எங்கு செல்கிறது?
அமெரிக்காவின் ஒரு மாகாணத்தின் அளவுள்ள பனிப்பாறை தான் A68a. 2017 ஆம் ஆண்டு ஜூலையில் அண்டார்டிகாவின் லார்சன் சி பகுதியில் இருந்து பிரிந்து சென்றது. அப்போது இருந்தே இது தொலைதூர தீவான தெற்கு ஜார்ஜியாவை நோக்கி நகர்கிறது, இது பிரிட்டிஷ் சர்வதேச கடல் பிராந்தியத்தில் உள்ள பகுதியாகும். அந்த பனிப்பாறையின் பயணத்தின் போது பல பகுதிகள் சிறு சிறு பாறைகளாக பிரிந்து சென்றுள்ளன. முன்பு சொன்ன A68 பனிப்பாறையின் மிகப்பெரிய பகுதி தான் A68a என அழைக்கப்படுகிறது. இது மட்டுமே 2,600 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது.
கடந்த வாரம், அமெரிக்காவின் தேசிய பனி மையம் (யு.எஸ்.என்.ஐ.சி) (பனிப்பாறைகள் பெயரிடுவதற்கு இந்த யு.எஸ்.என்.ஐ.சி அமைப்பு தான் பொறுப்பாகும், அவை அண்டார்டிக் பகுதியின் பனிப்பாறைகள் கண்டறியப்படும் பகுதிகளை வைத்து பெயரிட்டு வருகின்றன.) இப்போது A68a இலிருந்து இரண்டு புதிய பனிப்பாறைகள் உடைந்து சென்றுள்ளன என்பதையும் அவை பெயரிடப்பட்டு கண்காணிக்க போதுமானவை என்றும் கூறியுள்ளது . அந்த உடைந்த பனிப்பாறைகளுக்கு A68E மற்றும் A68F என பெயரிட்டு அழைக்கப்படுகின்றன.
இப்போது அச்சப்பட வேண்டியது என்னவென்றால், பனிப்பாறை தீவுக்கு அருகில் கரை ஒதுக்கினால் அது உள்ளூர் வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தும். அடுத்த மாதம் சுற்றுச்சூழல் அமைப்பில் A68a பனிப்பாறையின் தாக்கத்தை ஆய்வு செய்வதற்கான ஒரு ஆராய்ச்சி பணியைத் தொடங்கவுள்ள பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே (BAS) இன் சூழலியல் வல்லுநர்களின் தகவலின் படி, பனிப்பாறை தீவின் அருகே சிக்கிக்கொண்டால், பென்குவின்கள் மற்றும் சீல்ஸ் போன்ற உயிரினங்கள் உணவு தேடி அதிக தூரங்கள் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்படும். சில நேரங்களில் அதன் சந்ததியினர் பட்டினியில் கிடப்பதை தடுக்க சரியான நேரத்தில் திரும்பி வர முடியாத நிலை கூட ஏற்படலாம் என்று கூறியுள்ளனர்.
பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே அமைப்பின் கூற்றுபடி, பனிப்பாறையின் பிளவு ஒரு இயற்கையான நிகழ்வு என்று கருதப்படுகிறது, ஆனால் அது காலநிலை மாற்றத்தின் விளைவாக ஏற்படவில்லை. இருப்பினும் அண்டார்டிகா பகுதியில் ஏற்படும் வெப்பமயமாதல் எதிர்காலத்தில் அதிகப்படியான பனிப்பாறை பிளவுகள் மற்றும் பனிப்பாறைகள் கரைந்து கடலில் கலக்கும் நிகழ்வுகளை குறிக்கும் என்றும் சில சோதனை மாதிரிகள் கணித்துள்ளன.
இதற்கிடையே புவி வெப்பமயமாதல் நிகழ்வை தடுக்கும் பொருட்டு உலகின் வல்லரசு நாடுகள் எல்லாம் ஒன்றிணைந்து பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தை ஏற்படுத்தின. ஆனால் டிரம்ப் ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு அந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியிருந்தார். இப்போது ஜோ பிடன் அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க இருக்கும் நிலையில் மீண்டும் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்காவை இணைக்கும் நடவடிக்கை தொடங்கும் என உறுதி அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.