Monday, May 29, 2023
Homeசெய்திகள்உலகம்கோலாகலமாக கொண்டாடப்படும் ஈஸ்டர்..! முட்டைகள், முயல்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

கோலாகலமாக கொண்டாடப்படும் ஈஸ்டர்..! முட்டைகள், முயல்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

உலகெங்கும் இன்று கிறிஸ்தவர்களால் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஈஸ்டர் பண்டிகையின் போது முட்டை கொடுக்கும் பழக்கம் வழக்கம். இந்த ஈஸ்டர் முட்டை பழக்கம் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக இருந்து வருகிறது.
ஜெர்மனியில், வண்ணமயமான முட்டைகள் கிறிஸ்துமஸ் பந்துகளைப் போல மரக்கிளைகளில் தொங்கவிடப்படுகின்றன. ரஷ்யாவில், இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், முட்டைகள் கல்லறைகளில் வைக்கப்படுகின்றன.

இத்தாலியில், இரவு உணவு மேஜைகள் வண்ணமயமான முட்டைகளால் அலங்கரிக்கப்படுகின்றன.

முயலுக்கு என்ன தொடர்பு?

ஈஸ்டர் பண்டிகைக்கும் முயலுக்கு என்ன சம்பந்தம் என்று பலரும் சிந்திக்கலாம். பண்டைய எகிப்து காலத்திலிருந்தே அழகான இந்த முயல்கள் கருவுறுதலின் அடையாளமாக பார்க்கப்பட்டன. ஒரு முயல், ஆண்டுக்கு 4 முதல் 8 முறை கருத்தரிக்கும். ஒவ்வொரு முறையும் இவை 8 முதல் 10 குட்டிகள் வரை போடும். இதனால், காலப்போக்கில் முயல் மறுபிறப்பின் சின்னமாக மாறியது. குளிர்காலத்திற்குப் பிறகு வசந்தகாலம் தொடங்கும் முன் குகையிலிருந்து வெளியே வரும் முதல் விலங்கு முயல்கள் ஆகும்.

முயல் ஏற்கனவே கிறிஸ்துவ கருத்தியலில் இயேசுவுடன் தொடர்பு கொண்டிருக்கிறது. கடவுள் கூறும் வார்த்தைகளை கேட்கும் வகையில் பெரிய காதுகளை அவை கொண்டிருந்தன என்று ஆராய்ச்சியாளர் எவரிஸ்டோ டி மிராண்டா கூறுகிறார்.
முயலுக்கும், ஈஸ்டர் முட்டைகளுக்குமான தொடர்பு எப்போது தோன்றியது என மிகச்சரியாக குறிப்பிட முடியாது. இது குறித்து பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. அவை அனைத்தும் வெவ்வேறு இன மக்கள், கலாசாரத்துடன் தொடர்பை கொண்டிருந்தன. அந்த கருத்துகள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்துருவுடனும் இருந்தன என்று பிரேசிலின் சாவ் பாலோவில் உள்ள கேம்பினாஸ் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை முனைவர் பட்ட மாணவர் ஜெபர்சன் ரமால்ஹோ தெளிவுபடுத்தினார்.

பாஸ்கல் மெழுகுவர்த்தி:

கத்தோலிக்க திருச்சபையைப் பொறுத்தவரை, ஈஸ்டரின் உண்மையான சின்னம் ‘பாஸ்கல் மெழுகுவர்த்தி’ ஆகும். இது இயேசுவின் உயிர்த்தெழுதலைக் குறிக்கும் ஒரு பெரிய வெள்ளை மெழுகுவர்த்தி. அதில் கிரேக்க எழுத்துக்களின் முதல் மற்றும் கடைசி எழுத்துக்களான ஆல்பா, ஒமேகா ஆகிய எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இது இயேசுவே தொடக்கமும், முடிவும் என்பதைக் குறிக்கிறது.

ஈஸ்டர் பண்டிகைக்கு முட்டை, மெழுகுவர்த்தி, முயல் என்று எந்தவிதத்தில் கொண்டாடினாலும் அன்பே உயர்ந்தது ஒற்றுமையுடன் வாழ்வதே சிறந்தது என்று இயேசுபிரான் போதித்ததையே அனைத்து வடிவங்களும் நினைவூட்டுகின்றன.

ALSO READ | ஆண்களே… உங்களுக்கு எங்கெல்லாம் மச்சம் இருக்கு..? அதோட பலன்கள் என்ன தெரியுமா..?