லண்டன் : லண்டனில் இருக்கும் முக்கிய மருத்துவமனை ஒன்றில் ஆக்ஸ்போர்டு தயாரிக்கும் கொரோனா தடுப்பூசிக்கு தயாராக இருக்குமாறு கூறியதாக மருத்துவமனை ஊழியர் ஒருவர் கூறியுள்ளார். அதேநேரம் இளைஞர்கள் மற்றும் முதியவர்களிடம் எதிர்ப்பு சக்தியை தூண்டியுள்ளதாக அஸ்ட்ராஜெனகா நிறுவனம் அறிவித்துள்ளது.
உலகம் முழுவதையும் ஒற்றை கொடிய வைரஸ் முடக்கி போட்டுள்ளது. உலகம் முழுவதிலும் இதுவரை 4 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 2 கோடி பேர் வரை குணமடைந்துள்ளனர். 12 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதிலும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.
பல்வேறு வகையில் ஒவ்வொரு நாடுகளிலும் மக்கள் குணப்படுத்தப்பட்டு வந்தாலும். இதுவரை கொரோனா வைரசுக்கு எதிராக நம்பகமான அதிகாரபூர்வமான தடுப்பூசி கண்டறியப்படவில்லை. இதனால் கொரோனாவின் பாதிப்பை முடிவுக்கு கொண்டுவர முடியாமல் உலகின் பல நாடுகள் திணறுகின்றன. அமெரிக்க மற்றும் ஐரோப்பாவின் சில நாடுகளிலும் கொரோனாவின் இரண்டாம் அலை தாக்க தொடங்கிவிட்டது. இந்த நிலையில் தான் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல மருந்து நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன.
இதில் ரஷ்யா கடந்த மாதம் முதல் கொரோனா தடுப்பூசியை அறிமுகம் செய்தது. ஆனால் அதை வாங்க உலக நாடுகள் பலவும் தயக்கம் காட்டுகின்றன. அதன் பரிசோதனை முறை மற்றும் அதன் மீதான நம்பகத்தன்மை இதற்கு முக்கிய காரணம். இதனால் உலகின் பல நாடுகளும் எதிர்பார்த்து காத்திருக்க கூடிய முக்கியமான கொரோனா தடுப்பூசியாக மாறியுள்ளது ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கும் கொரோனா தடுப்பூசி.
Also Read: கொரோனா வைரஸ் ரூபாய் நோட்டுக்கள், மொபைல் ஸ்கிரீனில் 28 நாட்கள் வரை உயிர் வாழும்.. ஆய்வில் தகவல்!
ChAdOx1 nCoV-19 என பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசியை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனகா நிறுவனம் இணைந்து உருவாக்கி வருகிறது. இரண்டு கட்ட மனித பரிசோதனையை வெற்றிகரமாக முடித்துவிட்டு இப்போது மூன்றாம் கட்ட மனித பரிசோதனையில் இந்த தடுப்பூசி உள்ளது. இதனால் எப்போது வேண்டுமானாலும் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் நம்பகமான, சரியான நடைமுறைகளுடன் வெளிவரும் முக்கியமான தடுப்பூசியாக இது உள்ளது.
இந்த நிலையில் தான் லண்டனில் இருக்கும் ஒரு முக்கிய மருத்துவமனையில் முதல்கட்ட கொரோனா தடுப்பூசிக்கு தயாராக இருக்குமாறு கூறியதாக மருத்துவமனை ஊழியர் ஒருவர் கூறியுள்ளார். நவம்பர் இரண்டாவது வாரங்களில் இதற்கான ஆயத்த பணிகளில் தயாராக இருக்குமாறு கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அஸ்ட்ராஜெனகா நிறுவனம் இளைஞர்கள் மற்றும் முதியவர்களிடம் இந்த தடுப்பூசியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது. அதிலும் முதியவர்களை காட்டிலும் இளைஞர்களிடம் மேலும் அதிக அளவில் னாய் எதிர்ப்பு சக்தியை தூண்டுவதாகவும் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே உலகம் முழுவதிலும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தடுப்பூசி பரிசோதனை நடைபெற்று வருகிறது. இதில் பிரேசிலில் நடைபெற்ற பரிசோதனையின் போது ஒருவர் உயிரிழந்துவிட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் அவருக்கு பரிசோதனையின் ஒரு கட்டமாக சாதாரண ஊசி மட்டுமே போடப்பட்டதாகவும் அதனால் பரிசோதனை தொடர்ந்து நடைபெறும் என்று அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஒருவேளை இந்த தடுப்பூசி அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு வந்தால் இந்தியாவிலும் அதன் உற்பத்தி தொடங்கும். ஏற்கனவே இந்திய நிறுவனமான சீரம் நிறுவனம் இது தொடர்பாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.