டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் மன் கீ பாத் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்று கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதமர் ‘Atmanirbhar Bharat App Innovation Challenge’ திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட பல்வேறு செயலிகளை பாராட்டி பேசினார். மோடி உரை நிறைவுற்றதும் கூகுள் பிளே ஸ்டோரில் சில இந்திய செயலிகள்(App) முன்னணி இடத்திற்கு முன்னேறின,
செயலிகள் பிரிவில் ஸ்னாக் வீடியோ, பிக்யு, ஜோஷ், ஷேர்சாட் மற்றும் மோஜெ உள்ளிட்டவை டாப் 10 பட்டியலில் இடம்பிடித்தன. இதேபோன்று கூகுள் மீட், ஸ்னாப்சாட் மற்றும் ஜூம் கிளவுட் மீட்டிங் உள்ளிட்டவை பிரபல செயலிகள் பட்டியலில் இடம்பிடித்து இருந்தன.
சமூக பிரிவில் ஜோஷ், ஷேர்சாட், மோஜெ, ரோபோசோ, சிங்காரி உள்ளிட்டவை முன்னணி இடத்திற்கு முன்னேறின. இந்திய செயலிகளில் ஷார்ட் வீடியோ எடிட்டிங் மற்றும் போஸ்டிங் அதிக பிரபலமாக இருக்கிறது.
இந்திய செயலிகள் பற்றிய உரையின் போது பிரதமர், பல்வேறு செயலிகளை எடுத்துக்காட்டினார். இத்துடன் இன்றைய ஸ்டார்ட்அப்கள் நாளை உலகளவில் பெரும் நிறுவனமாக உருவெடுக்கும் என்றும் இது மேக் இன் இந்தியா திட்டத்திற்கு மைல்கல் போன்று அமையும் என அவர் தெரிவித்தார்.