டெல்லி: குறைந்தது 69 சதவிகித இந்தியர்கள் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி போட்டுக்கொள்ள தாயாராக இல்லை என்று சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மக்களிடையே நிலவும் தவறான கருத்துக்கள் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது
உலகையே அச்சுறுத்த கூடிய கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசி கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தயாராகிவிட்டது. இந்தியாவில் செயல்படும் சீரம் நிறுவனமும் அடுத்தாண்டு இறுதிக்குள் 300 மில்லியன்க்கு மேற்பட்ட டோஸ்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு ஏற்கனவே பிரிட்டன், சவுதி அரேபியா உள்ளிட்ட பல நாடுகளும் அனுமதி வழங்கிவிட்டன. இந்தியாவிலும் பாரத் பயோடெக் உள்ளிட்ட சில தடுப்பூசி நிறுவனங்கள் அவசர ஒப்புதலுக்கு அரசாங்கத்திடம் விண்ணப்பித்துள்ளன. அரசு ஒப்புதல் கிடைத்தவுடன் தடுப்பூசி விநியோகமும் தொடங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
ஒரு பக்கம் தடுப்பூசி நிறுவனங்கள் அதிகப்படியான உற்பத்தி, மற்றும் ஒப்புதலுக்காக தயாராகிக்கொண்டிருக்கும் நிலையில் மறுபக்கம் அரசாங்கமும் விநியோகத்திற்காக மும்முரமாக தயாராகி வருகிறது. எல்லா மாநிலங்களில் இருந்தும் பட்டியல் மத்திய அரசிடம் கொடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தடுப்பூசியை வைக்க கூடிய இடங்கள், மக்களுக்கு செலுத்தக்கூடிய இடங்கள், முன்னுரிமை பெறுபவர்கள் யார் என்கிற விவரங்களும் தயார் செய்யப்பட்டு வருகின்றன.
இன்னும் சில வாரங்களில் தடுப்பூசி தயாராகிவிடும் என்று ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடியும் கூறியிருந்தார். அடுத்தாண்டு தொடக்கத்திற்குள் எப்படியும் இந்தியாவிலும் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள விருப்பம் தெரிவிக்கவில்லை என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
லோக்கல் சர்க்கிள் என்கிற சமூக வலைத்தளம் மூலம் நாடு முழுவதும் 242 மாவட்டங்களில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் இது தெரிய வந்துள்ளது. இந்த சர்வேயில் கலந்துகொண்டவர்களில் 34 சதவிகிதம் பேர் பெண்கள் 66 சதவிகிதம் பேர் ஆண்கள் உள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் சொல்லப்பட்டதை விட இப்போது தடுப்பூசி போட்டுக்கொள்ள விருப்பம் இல்லை என கூறியவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 15 முதல் 20 வரை நடத்தப்பட்ட சர்வேயில் 61 சதவிகிதம் பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ள பெரிய அளவில் விருப்பம் காட்டவில்லை. ஆனால் இப்போது மறுபடியும் டிசம்பர் 10 முதல் 15 வரை எடுக்கப்பட்ட சர்வேயில் 69 சதவிகிதம் பேர் விருப்பம் இல்லை என கூறியுள்ளனர்.
இதுகுறித்து கூறியுள்ள லோக்கல் சர்க்கிள் நிறுவனர் சச்சின் தபாரியா, தடுப்பூசி போட்டுக்கொள்வதில் மக்களிடம் இருக்கும் இந்த தயக்கங்களுக்கு பல காரணங்களை குறிப்பிட்டுள்ளார். பக்க விளைவுகள், செயல்திறன் நிலைகள், மற்றும் தங்களிடம் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக தங்களுக்கு பரவாது போன்ற நம்பிக்கைகளால் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை என குறிப்பிட்டுள்ளார். மேலும் வாட்ஸ் அப்பில் வெளியாகும் பல்வேறு வதந்திகளும் மக்களை தவறான திசையில் வழி நடத்துகிறது. இந்தியாவில் நவம்பர் மத்தியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேஸ்கள் தினசரி பதிவாகியிருந்த நிலையில் தற்போது டிசம்பர் மத்தியில் அந்த எண்ணிக்கை 25 ஆயிரமாக குறைந்துள்ளது. இதுவும் கூட மக்களின் விருப்பமின்மைக்கு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.
தடுப்பூசிகள் குறித்த போலி செய்திகளை அரசாங்கம் காற்றுப்படுத்த வேண்டும், மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துவதில் போலி செய்தகளுக்கு பெரும்பங்கு உண்டு. ஒவ்வொரு தடுப்பூசி பரிசோதனைகளின் முடிவுகள், சாதக பாதகங்களை வெளிப்படையாக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். சரியான நேரங்களில் வெளியாகும் மக்களிடையே முக்கியமானவை என்றும் தபாரியா தெரிவித்துள்ளார்.
இது இல்லாமல் சுகாதார நிபுணர்கள் தனியாக நடத்திய சர்வேயில் 45 சதவிகிதம் மக்கள் அரசாங்க ஒப்புதல் பெற்றவுடன் தடுப்பூசி எடுத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். 55 சதவிகிதம் மக்கள் தடுப்பூசியை எடுத்துக்கொள்வதை தள்ளி வைப்பதில் அல்லது அதுகுறித்து இன்னமும் முடிவெடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். கொரோனா தடுப்பூசி குறித்த சுகாதார ஊழியர்களின் அணுகுமுறைகளைப் புரிந்துகொள்ள டாக்டர் அப்துல் கஃபூர் ஒருங்கிணைத்த இந்த ஆய்வுக்கு 1,424 பேர் பதிலளித்துள்ளனர். இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் குறிப்பிடத்தக்க கவலைகளை வெளிப்படுத்துகின்றன மற்றும் சாத்தியமான தீர்வுகளையும் பரிந்துரைக்கின்றன என்று டாக்டர் கஃபூர் கூறினார்.