Saturday, March 25, 2023
Homeசெய்திகள்உலகம்ஒபாமாவின் அரசாங்கத்தில் பணியாற்றியவர்.. பிடனுக்கு ஆலோசனை வழங்கும் குழுவில் இடம்பிடித்த இந்தியர்

ஒபாமாவின் அரசாங்கத்தில் பணியாற்றியவர்.. பிடனுக்கு ஆலோசனை வழங்கும் குழுவில் இடம்பிடித்த இந்தியர்

வாஷிங்டன்: அமெரிக்காவில் பொறுப்பேற்க இருக்கும் புதிய அரசாங்கத்திற்கு கொரோனா வைரஸ் குறித்து வழிகாட்ட அமைக்கப்பட்டுள்ள ஆலோசனைக்குழுவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் விவேக் மூர்த்தி இணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்குதலில் உலகிலேயே அமெரிக்கா தான் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 10 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 237,000 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் கொரோனா பாதிப்பு முக்கிய பங்கு வகித்தது. கொரோனா வைரஸ் குறித்த டிரம்பின் புரிதலை எதிர்கட்சியினர் மிக மோசமாக விமர்சித்து வந்தனர். தான் அதிபர் பதவிக்கு வந்தால் முதல் வேலையாக கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் கூறியிருந்தார்.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் ஜோ பிடன் பெரும்பான்மையான வாக்குகள் பெற்று வெற்றி பெற்று இருந்தார். கமலா ஹாரிஸ் துணை அதிபராக தேர்வானர். இதைதொடர்ந்து இப்போது கொரோனாவுக்கு எதிரான முதல் நடவடிக்கையாக புதிதாக அமைய இருக்கும் அரசாங்கத்திற்கு கொரோனா குறித்த அறிவுரை வழங்கும் வழிகாட்டி குழு ஒன்றை அமைத்துள்ளனர்.

இந்த குழுவில் இந்திய வம்சாவளி மருத்துவரான விவேக் மூர்த்தி இணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 43 வயதாகும் மருத்துவர் விவேக் மூர்த்தியின் பெற்றோர் கர்நாடக மாநிலத்தில் இருந்து இடம்பெயர்ந்து அமெரிக்காவில் குடியேறியவர்கள். 2014 ஆம் ஆண்டில் அப்போதைய அதிபர் பராக் ஒபாமாவின் கீழ் அமெரிக்காவின் 19 வது சர்ஜன் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். தனது 37 வயதில் இந்த பதவியை பெற்ற இவர் இளம் வயதிலேயே அந்த பொறுப்புக்கு வந்தவர் ஆவார். பின்னர் டிரம்ப் நிர்வாகத்தால் பதவி விலகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். இப்போது மீண்டும் பிடன் அரசில் இவருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஜோ பிடன் ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில், கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கையாள்வது எங்கள் நிர்வாகம் எதிர்கொள்ளும் மிக முக்கியமான போர்களில் ஒன்றாகும். அறிஞர்களாலும், நிபுணர்களாலும் குழு அமைக்கப்பட்டு எனக்கு அதுகுறித்து தகவல் தெரிவிக்கப்படும். தொற்றுநோய் பரவலை நிர்வகிப்பதற்கான எனது அணுகுமுறையை வடிவமைக்க இந்த ஆலோசனைக் குழு உதவும். தடுப்பூசி பாதுகாப்பானவையாக இருக்கின்றனவா? சமமாக மற்றும் இலவசமாக விணியோகிக்கப் படுகின்றனவா என்று இதன்மூலம் உறுதி படுத்த முடியும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனை குழுவில் இடம் பெற்றுள்ள மற்ற உறுப்பினர்கள்..

டாக்டர் லூசியானா போரியோ
டாக்டர் ரிக் பிரைட்
டாக்டர் எசேக்கியேல் இமானுவேல்
டாக்டர் அதுல் கவாண்டே
டாக்டர் செலின் கவுண்டர்
டாக்டர் ஜூலி மோரிடா
டாக்டர் மைக்கேல் ஓஸ்டர்ஹோம்
செல்வி லாய்ஸ் பேஸ்
டாக்டர் ராபர்ட் ரோட்ரிக்ஸ்
டாக்டர் எரிக் கூஸ்பி