மும்பை : இந்திய கடற்படைக்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக ஸ்கார்பீன் ரக ஐந்தாவது நீர்மூழ்கி கப்பல் வாகிர் இன்று கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத்துறை இணையமைச்சர் ஸ்ரீபத் நாயக் அரபிக் கடல் பகுதியில் இருக்கும் மசாகோன் கப்பல் கட்டும் தளத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் கடற்படையிடம் ஒப்படைத்தார்.
இந்தியா சமீப காலமாக ராணுவத்தை சக்திவாய்ந்ததாக மாற்றி வருகிறது. அடுத்தடுத்த நவீன ஆயுதங்களின் வெற்றிகரமான சோதனைகள், பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வாங்கப்படும் போர் தளவாடங்கள் மூலம் இந்திய ராணுவத்தின் வலிமை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. அதன் அடுத்தகட்டமாக இந்திய கடற்படைக்கு கூடுதல் வலிமை சேர்க்கும் விதமாக 6 ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பல்களை கட்டும் பொறுப்பு பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனமான மசாகோன் கப்பல் கட்டும் நிறுவனத்திடம் வழங்கப்பட்டது. அதில் ஐந்தாவது நீர்மூழ்கி கப்பல் வாகிர் இன்று கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது.
அதில் முதலாவது ஐ.என்.எஸ் கல்வாரி 2015 இல் தயாரிக்கப்பட்டு 2017 இன் பிற்பகுதியில் கடற்படையில் ஈடுபடுத்தப்பட்டது. ஐ.என்.எஸ் கல்வாரிக்கு பிறகு, காந்தேரி, கரஞ்ச் மற்றும் வேலா ஆகிய நீர்மூழ்கி கப்பல்களும் இணைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் இந்திய கடற்படையின் புராஜெக்ட் 75 இன் ஒரு பகுதியாக தயாரிக்கப்பட்டு வருகின்றன.
ஐ.என்.எஸ் வாகிர் அறிமுகம் குறித்து கருத்து தெரிவித்த மேற்கு கடற்படையின் வைஸ் அட்மிரல் ஆர் பி பண்டிட், ஒரு வருட காலத்திற்குள் இந்த நீர்மூழ்கி கப்பல் இயக்கப்படும் என்று தான் எதிர்பார்ப்பதாகக் கூறினார். கடற்படையில் ஏற்கனவே செயல்பட்டு வரும் இரண்டு கல்வாரி வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல்கள் எங்களிடம் உள்ளன. மீதமுள்ள நான்கை மிக விரைவாக பெறுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைவோம், என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கிக்கப்பல் பொதுவாக எந்தவொரு நவீன நீர்மூழ்கிக் கப்பலினாலும் மேற்கொள்ளப்படும் பலதரப்பட்ட பணிகளை மேற்கொள்ள முடியும். இதனால் மேற்பரப்பு தாக்குதல் மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு தாக்குதல் நடத்தும் நவீன ஆயுதங்களை ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கிக்கப்பல்கள் பெற்று இருக்கும். ஆறாவது ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல் ‘வாக்ஷீர் கட்டுமான பணியும் முடிவடையும் நிலையில் உள்ளது.