Monday, March 27, 2023
Homeசெய்திகள்இந்தியாவாட்ஸ் ஆப்புக்கு மாற்று வந்தாச்சு.. உள்நாட்டிலேயே இந்திய ராணுவம் கண்டுபிடித்த புதிய ஆப்

வாட்ஸ் ஆப்புக்கு மாற்று வந்தாச்சு.. உள்நாட்டிலேயே இந்திய ராணுவம் கண்டுபிடித்த புதிய ஆப்

டெல்லி : சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இந்திய ராணுவம் வாட்ஸ் ஆப் செயலிக்கு இணையான SAI செயலியை கண்டுபிடித்துள்ளது. இதை ராணுவ வீரர்கள் இனிமேல் பயன்படுத்தவும் வாய்ப்புள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு சுயசார்பு இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி பெரும்பாலான வெளிநாட்டு பொருட்கள், உபகரணங்கள், செயலிகளுக்கு மாற்றாக உள்நாட்டிலேயே தயாரிக்க ஊக்கப்படுத்தப்பட்டு வந்தது. அதைத்தொடர்ந்து பப்ஜி, டிக்டாக் உள்ளிட்ட அப்ளிகேஷன்களுக்கு மாற்று இந்திய அப்ளிகேஷன்கள் உருவாக்கப்பட்டன. அதன் அடுத்தகட்டமாக வாட்ஸ் ஆப் செயலிக்கு மாற்றாக இந்திய ராணுவம் புதிய செயலி ஒன்றை உருவாக்கியுள்ளது.

Secure Application for the Internet (SAI) என பெயரிடப்பட்டுள்ள இந்த செயலி மூலம் அனுப்பப்படும் டெக்ஸ்ட் மெசேஜ், வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதிகள் எண்ட் டு எண்ட் என்க்ரிப்ஷன் செய்யப்பட்டு மிகவும் பாதுகாப்போடு இயங்கும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. எண்ட் டு எண்ட் என்க்ரிப்ஷன்” எனக் குறிப்பிடப்படும் இந்த வசதியால் பகிரப்படும் செய்திகள் அனைத்தும் மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும். இதன் மூலம் பகிரப்படும் தகவல்கள், படங்கள், வீடியோக்கள் போன்றவை மூன்றாம் நபர்களால் இடைமறித்து படிக்க முடியாதவையாக இருக்கின்றன.

இது வணிக ரீதியாக செயல்படும் வாட்ஸ் ஆப் , டெலிக்ராம் போன்ற செயலிகள் போன்றே ஆண்ட்ராயிடு இயங்குதளத்தில் செயல்பட கூடியது, ஐஓஎஸ் இயங்குதளத்திலும் செயல்படும் வகையிலான வேலைகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. SAI ஆப் உள்நாட்டு உற்பத்தியில் பாதுகாப்பான தொழில்நுட்பங்களை தர கூடியது. தேவைக்கேற்ப அதில் மாற்றங்களையும் கொண்டுவர முடியும் என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. ராணுவ சேவையில் பாதுகாப்பான தகவல் பரிமாற்றத்தை எளிதாக்க SAI ஆப் பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

கடந்த ஜூலை மாதம் தான் பாதுகாப்புத்துறை அமைச்சகம் நாட்டின் பாதுகாப்பு நலன் கருதி ராணுவ வீரர்கள் 89 மொபைல் அப்ளிகேஷன்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. சீன செயலிகள் மீதான தடையை தொடர்ந்து ராணுவத்துக்கு இந்த தடை விதிக்கப்பட்டாலும் இந்த பட்டியலில் பேஸ்புக் உள்ளிட்ட மற்ற நாடுகளின் அப்ளிகேஷன்களும் இடம்பெற்றன. இந்த நிலையில் தான் இப்போது ராணுவம் புதிய செயலியை கண்டுபிடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.