அமெரிக்காவில் கிட்டத்தட்ட 1.5 சதவிகிதம் இந்திய அமெரிக்கர்கள் வசித்து வருகிறார்கள். ஆனால் இந்த முறை நடைபெற்ற அதிபர் தேர்தலில் இவர்களுடைய வாக்குகள் தான் முக்கிய பங்கு வகித்தது. இப்போது புதிய அதிபராக பதவியேற்க இருக்கும் ஜோ பிடன் நிர்வாகத்திலும் இந்திய அமெரிக்கர்களுக்கு முக்கிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது. புதியதாக அமைய இருக்கும் அமெரிக்க அரசாங்கத்தில் இடம்பெற போகும் இந்திய அமெரிக்கர்களின் விவரங்களை இப்போது பார்க்கலாம்.
கமலா ஹாரிஸ்:
தமிழகத்தை பூர்விகமாக கொண்ட இவர் ஜோ பிடனின் துணை அதிபருக்கான தேர்வாக இருந்தார். அதுமட்டுமல்ல இவர்தான் முதல் பெண் துணை அதிபர் மற்றும் முதல் ஆசிய, இந்திய அமெரிக்கர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருடைய அறிவிப்பு வெளியானதுமே ஜனநாயக கட்சிக்கு கண்டிப்பாக இந்தியர்களின் வாக்குகள் கிடைக்கும் என கருதப்பட்டது. அதே போல ஜனநாயக கட்சி வெற்றிபெற்று கமலா ஹாரிஸ் துணை அதிபராக விரைவில் பதவியேற்க உள்ளார்.
நீரா டாண்டன் :
மேலாண்மை மற்றும் பட்ஜெட் அலுவலக இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த நீரா டாண்டன் நியமிக்கப்பட இருக்கிறார். இவருடைய நியமனம் குறித்து தெரிந்ததுமே குடியரசு கட்சியினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். தவறான முடிவு என்றும் விமர்சனம் செய்தனர். இவர் ஏற்கனவே அமெரிக்க அரசாங்கத்தில் பில் கிளிண்டன் மற்றும் ஒபாமா நிர்வாகத்தில் பணியாற்றிய அனுபவம் மிக்கவர். இவருடைய பெற்றோர் நீண்ட காலங்களுக்கு முன்பே அமெரிக்கவில் குடியேறியவர்கள், 1996 யேல் சட்ட கல்லூரியில் பட்டம் பெற்ற இவர் ஹிலாரி கிளிண்டனின் பிரச்சார குழுவிலும் இடம் பெற்று இருந்தவர்.
செலின் கவுண்டர்:
மற்றொரு தமிழகத்தை பூர்விகமாக கொண்ட பெண் டாக்டர் செலின் கவுண்டர். இவருடைய பெயரும் ஏற்கனவே பிடனின் குழுவில் இடம் பெற்றுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு குழுவில் இவர் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் குறித்த அறிவிப்பு வெளியானதுமே செலின் கவுண்டரின் பெயரில் இருக்கும் கவுண்டர் என்பதற்கு சர்ச்சை எழுந்தது. ஆனால் அதன் பின்னால் அவரே இதுகுறித்து விளக்கம் கொடுத்த பின்னர் சர்ச்சை ஓய்ந்தது.
விவேக் மூர்த்தி:
கொரோனா தடுப்பு குழுவில் இடம்பெற்றுள்ள மற்றொரு அமெரிக்க வாழ் இந்தியர் விவேக் மூர்த்தி. அறுவை சிகிச்சை நிபுணரான இவர் கொரோனா தடுப்பு குழுவின் இணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கர்நாடகாவை பூர்விகமாக கொண்ட விவேக் மூர்த்தி ஒபாமாவின் நிர்வாகத்திலும் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.
கிரண் அர்ஜன்தாஸ் அஹுஜா :
அமெரிக்காவில் வழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலராக இருக்கும் கிரண் அர்ஜன்தாஸ், 2015 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை அமெரிக்க பணியாளர் முகாமைத்துவ அலுவலகத்தின் இயக்குநரின் தலைமை பணியாளராக இருந்தார். இப்போது இவர் பணியாளர் மேலாண்மை அலுவலகத்தின் தலைவராக நியமிக்கப்பட இருக்கிறார்.
புனீத் தல்வார்:
2014 முதல் 215 வரை அரசியல்-ராணுவ விவகாரங்களுக்கான முன்னாள் உதவி செயலாளராக பணியாற்றியவர். ஒபாமா நிர்வாகத்தில் முக்கிய மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஆலோசகராகவும் இருந்தவர். ஒபாமா ஆட்சி காலத்தில் அமெரிக்கா- ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்தில் முக்கிய பங்காற்றியவர் இந்த புனீத் தல்வார். தற்போது வெளியுறவுத்துறையில் கவனம் செலுத்துகிறார்.
அருண் வெங்கட்ராமன்:
இயந்திர கற்றல் கணினி நிபுணரும், கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியுமான அருண் வெங்கட்ராமன், வர்த்தகத் துறை மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் ஆகிய இரண்டு ஏஜென்சி மறுஆய்வு அணியிலும் இடம் பிடித்துள்ளார்.
பிரவீனா ராகவன்:
நியூயார்க் மாகாண வளர்ச்சிக்கான சிறு வணிக மற்றும் சமூக பொருளாதார மேம்பாட்டு பிரிவின் நிர்வாக துணைத் தலைவராக பிரவீனா ராகவன் உள்ளார். இவரும் ஜோ பிடனின் தேர்வில் உள்ளதாக கூறியுள்ளனர்.
ஷிட்டல் ஷா:
கல்வித் துறைக்கான அமெரிக்க ஆசிரியர் கூட்டமைப்பில் மேம்பாட்டு இயக்குநரகத்தின் மேலாளராக உள்ளார்.
ராமா ஜகாரியா:
எரிசக்தித் துறையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதியத்தில் (ஈ.டி.எஃப்) ஒழுங்குமுறை கொள்கை மற்றும் பகுப்பாய்வுக்கான மூத்த மேலாளராக உள்ளார்.
சுபாஸ்ரி ராமநாதன்:
உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையில் பணியாற்றிய வழக்கறிஞராக உள்ளார்.
சீமா நந்தா:
தேசியக் குழுவின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த இவர், தொழிலாளர் துறையில் பதவி பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.
தில்பிரீத் சித்து:
சமீபத்தில் இவர் அமெரிக்க வெளியுறவுத்துறையில் ஈராக்கின் பாஸ்ராவில் பொருளாதார அதிகாரியாக பணியாற்றினார், அங்கு அவர் அமெரிக்காவின் கொள்கை இலக்குகளை முன்னேற்றினார். தற்போது தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு வர இருக்கிறார்.
அனீஷ் பால் சோப்ரா:
2009 ஆம் ஆண்டு முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவால் அமெரிக்காவின் முதல் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் தான் இந்த அனீஷ் பால் சோப்ரா. இவர் இப்போது அமெரிக்க தபால் சேவையை ஆய்வு செய்வார்.