Thursday, June 1, 2023
Homeசெய்திகள்இந்தியாநாடாளுமன்ற தேர்தலுக்கு ஸ்கெட்ச்..! கைகொடுக்குமா மத்திய பட்ஜெட்?

நாடாளுமன்ற தேர்தலுக்கு ஸ்கெட்ச்..! கைகொடுக்குமா மத்திய பட்ஜெட்?

மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சி பொறுப்பு வகிக்கும் பிரதமர் மோடியின் ஆட்சி இந்த ஆட்சியின் கடைசி முழு பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தனர். அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் அடுத்தாண்டு இடைக்கால பட்ஜெட்டே தாக்கல் ஆகும்.

விலை குறைப்பு

வழக்கம்போல இன்றைய பட்ஜெட் மீது பலத்த எதிர்பார்ப்புகள் எழுந்தது. அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் இருப்பதால் வாக்காளர்களை கவர ஏராளமான அறிவிப்புகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பெரியளவில் மாற்றம் ஏதுமில்லை என்றே சொல்லலாம். நாட்டில் பல பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ள நிலையில், விலைவாசி குறைப்பு நடவடிக்கைக்காக ஏதேனும் சலுகைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

தொலைக்காட்சி, செல்போன்கள் ஆகியவற்றிற்கான இறக்குமதி வரியை குறைப்பதாக அறிவித்துள்ளதால் அவற்றின் விலை குறைய உள்ளது. அதேபோல, வாகனங்கள், மிதிவண்டிகளின் விலைகளும் இனி வரும் நாட்களில் குறைய உள்ளது. ஆனால், சாமானியனின் மிகப்பெரிய சொத்தாக கருதப்படும் தங்கம், வெள்ளி ஆகிய ஆபரணங்களுக்கான வரியை உயர்த்தியுள்ளனர். இதனால், ஏற்கனவே உச்சத்தில் உள்ள தங்கம் விலை இனி வரும் நாட்களில் மேலும் உச்சத்தை தொடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கண்ணீர் வரவைக்கும் தங்கம்

தொலைக்காட்சி, செல்போன்கள், வாகனங்கள், மின்சார வாகனங்களில் குறைக்கப்பட்ட விலைகளை தங்கம், வெள்ளி, பித்தளை, வைரத்தில் ஏற்றி ஈடு கட்டி விட்டதாகவே பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். தங்கம் விலை ஏறினால் பாதிக்கப்படபோவது நிச்சயம் சாமானியர்கள்தான் என்பது நாம் அனைவரும் அறிந்ததே ஆகும்.
மேலும், கடந்த 2014ம் ஆண்டு வருமான வரி விலக்கு உச்சவரம்பு 2.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. அதன்பின்பு அதைப்பற்றி எந்தவொரு அறிவிப்பும் வெளியிடாத மத்திய அரசு, அடுத்தாண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பழைய முறைப்படி பின்பற்றுபவர்களுக்கு 2.5 லட்சத்தில் இருந்து 3 லட்சமாகவும், புதிய முறைப்படி பின்பற்றுபவர்களுக்கு 7 லட்சமாகவும் உயர்த்தியுள்ளனர். தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பால் பலரும் பயனடைவார்கள்.

கை கொடுக்குமா?

சாமானியர்களை சென்றடையும் வரையிலான மிகப்பெரிய திட்டங்கள் ஏதும் மற்றபடி இடம்பெறவில்லை என்றே கூறலாம். அடுத்தாண்டு தேர்தலுக்காக வாக்காளர்களை கவரும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பட்ஜெட் பயனளிக்குமா? இல்லை கல்தா கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.