டெல்லி: இந்தியாவுக்கான புதிய பாராளுமன்றத்தை கட்டமைப்பதற்கான ஏலத்தை வென்று இருப்பதாக டாடா பிராஜக்ட்ஸ் லிமிட்டெட் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
புதிய பாராளுமன்றம் கட்ட லார்சன் மற்றும் டூப்ரோ நிறுவனம் ரூ. 865 கோடி ஏலத்தை சமர்ப்பித்தது. எனினும் டாடா நிறுவனம் ரூ. 861.90 கோடி ஏலம் கேட்டு வென்று இருக்கிறது. முன்னதாக இந்த பணிகளுக்கான செலவு ரூ. 940 கோடி வரை ஆகும் என அரசாங்க குடிமை அமைப்பு கணித்திருந்தது.
தற்போதைய திட்டப்படி புதிய பாராளுமன்றம் 2022 ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்பட வேண்டும். இந்த பணிகள் முழுவதும் 21 மாதங்கள் நடைபெற இருக்கின்றன. புதிய பாராளுமன்றம் இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தின் போது திறக்க திட்டமிடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதிய பாராளுமன்ற கட்டிடம் முக்கோண வடிவில் காட்சியளிக்கும் படி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. தற்போதைய பாராளுமன்ற கட்டிடம் பிரிடிஷ் காலக்கட்டத்தில் கட்டப்பட்டது.
இந்த கட்டிடம் பழுதுபார்த்து புதுப்பிக்கப்பட்ட பின் மற்ற தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் என தற்போதைய தகவல்களில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.