Monday, May 29, 2023
Homeசெய்திகள்இந்தியாஜெய்ஹிந்த்.. ஜெய்ஹிந்த்.. பாரத தவப்புதல்வன் நேதாஜி மண்ணில் பிறந்த தினம் இன்று..!

ஜெய்ஹிந்த்.. ஜெய்ஹிந்த்.. பாரத தவப்புதல்வன் நேதாஜி மண்ணில் பிறந்த தினம் இன்று..!

இந்தியாவிற்கு அகிம்சை வழியில் காந்தியின் தலைமையில் லட்சக்கணக்கானோர் போராடிய போது, ஒருபுறம் இந்தியாவின் ஆயுதமேந்தி அதிரடி வழியில் சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் லட்சக்கணக்கானோர் போராடினார். இந்தியாவின் சுதந்திரத்தின் இரண்டு முகமாக காந்தியும், சுபாஷ் சந்திர போசும் இன்றளவும் போற்றப்படுகின்றனர்.

சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள்:

மாபெரும் வீரனான சுபாஷ் சந்திரபோசின் 126வது பிறந்த நாள் இன்று. ஒடிசா மாநிலம் கட்டாக்கில் 1987ம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தார்.இவரது முன்னோர்கள் 27 தலைமுறைகளாக, வங்க மன்னர்களின் ஆட்சியில் முக்கியப் பதவிகளில் இருந்தனர். போஸின் தாயார் பிரபாவதி தேவியும் செல்வச் செழிப்பான வம்சத்தைச் சேர்ந்தவர். பெற்றோர்களுக்கு 9வது குழந்தையாகப் பிறந்தவர்தான் சுபாஷ் சந்திரபோஸ். பாப்டிஸ்ட் மிஷன் பள்ளியில் ஆரம்பக் கல்வி படித்துவிட்டு, உயர் கல்வியை கொல்கத்தா ரேவன்ஷா கல்லூரியில் மேற்கொண்டார்.

1915ம் ஆண்டில் கொல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தார். அங்கு இருந்த ஆசிரியர் ஒருவர் இனவெறியுடன் நடந்துகொண்டதற்கு எதிராக குரல் கொடுத்தார். இதனால் சுபாஷ் சந்திர போஸும் அவரது நண்பர்களும் கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டு, 2 வருடம் வேறு கல்லூரிகளிலும் படிக்க இயலாதபடி தடை விதிக்கப்பட்டது. பின்னர், சி. ஆர். தாஸ் உதவியால் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் படித்தார்.

ஆங்கிலேய எதிர்ப்பு

ஆங்கிலேயர்களின் அடக்குமுறைகளுக்கு எதிரான மன நிலை கொண்ட சுபாஷ் சந்திரபோஸ் ஐ.சி.எஸ். பட்டம் பெற்றாலும் ஆங்கிலேயனிடம் வேலை பார்க்கக் கூடாது என்ற கொள்கையுடன் அந்தப் பதவியைத் துறந்தார். லண்டனிலிருந்து திரும்பிய போஸின் ஆற்றலை நன்கு உணர்ந்த சி. ஆர். தாஸ். தனது தேசியக் கல்லூரிக்கு போஸை தலைவராக நியமித்தார். அப்போது சுபாஷ் சந்திர போஸ் 25 வயதே நிரம்பிய இளைஞர். கல்லூரியில் மாணவர்கள் முன் பேசும்போது எல்லாம் சுதந்திர தாகத்தைத் தூண்டும் வகையில் பேசி மாணவர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தினார்.

1919ம் இந்தியாவையே உலுக்கிய ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு காரணமான ஜெனரல் டயரை உத்தம் சிங் சுட்டுக் கொன்றார். இதனை மகாத்மா காந்தி கண்டித்தபோது, ஆனால் சுபாஷ் சந்திர போஸ் உத்தம் சிங்கைப் பாராட்டி எழுதினார்.

அஞ்சிய பிரிட்டிஷார்

கொல்கத்தா மாநகராட்சி நிர்வாக அதிகாரியாகவும் சுபாஷ் சந்திரபோஸ் பணிபுரிந்தார். அப்போது இவருக்கு மக்கள் ஆதரவு பெருகுவதை கவனித்த பிரிட்டிஷ் அரசு இவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. ஆனால், சிறையில் இருந்தபடியே சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவருக்கு இருந்த மக்கள் செல்வாக்கை கண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் அஞ்சியது என்றே சொல்லலாம்.
சிறையில் இருந்து வெளியே வந்த சுபாஷ்சந்திரபோஸ் 1930ம் ஆண்டு ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு, இந்தியா சுதந்திரம் பெற அந்த நாடுகளின் ஆதரவைக் கோரினார்.

சுதந்திர போராட்டம்

உலகநாடுகள் பலவற்றிற்கும் பயணம் செய்து பல நாடுகளின் ஆதரவைப் பெற்ற சுபாஷ் சந்திரபோஸ் 1941ம் ஆண்டு ‘சுதந்திர இந்தியா மையம்’ என்ற அமைப்பை நிறுவினார். ‘ஆசாத் ஹிந்த்’என்ற வானொலி நிலையத்தை ஏற்படுத்தினார்.

சுதந்திர இந்தியாவுக்கான தனிக் கொடியையும் உருவாக்கினார். ‘ஜன கண மன’ பாடலை இந்திய தேசிய கீதமாக அறிவித்ததும் சுபாஷ் சந்திர போஸ்தான். இந்திய தேசிய ராணுவத்தை ஏற்படுத்தி, அதில் ஜான்சி ராணி பெயரில் பெண்கள் பிரிவையும் உண்டாக்கினார். அவரது தீரத்திற்கும், வீரத்திற்கும் அவர் நேதாஜி என்று அழைக்கப்பட்டார்.

1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி நேதாஜி விமான விபத்தில் இறந்தார் என்று ஒரு தகவல் உலா வருகிறது. ஆனால், இன்றளவும் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் மரணம் என்பது மர்மம் நிறைந்த ஒன்றாகவே உள்ளது. பார்போற்றும் தலைவனால் உருவாக்கப்பட்ட இந்திய ராணுவம் இன்றளவும் நாட்டின் பாதுகாப்பிற்கு அரணாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது