Maternity Benefit Act: உலகில் பெண்களின் கல்வி வளர்ச்சிக்கும், அறிவு வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் தரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறி வருகிறது. இந்தியாவில் பெண்களின் வளர்ச்சிக்காக ஏராளமான சட்டங்களும், உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளது.
அவற்றில் ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சட்டம் மகப்பேறு நலச்சட்டம். குறிப்பாக, வேலைக்குச் செல்லும் பெண்கள் அனைவரும் மகப்பேறு நலச்சட்டம் குறித்து அறிந்து வைத்திருக்க வேண்டும்.
மகப்பேறு நலச்சட்டம்:
மகப்பேறு நல சட்டம் 1961-ன் படி பணிபுரியும் பெண்களுக்கு 12 வார காலம் மட்டுமே ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பு அளிக்கப்பட்டு வந்தது. இச்சட்டத்தை 2016ம் ஆண்டு திருத்திய மத்திய அரசு மகப்பேறு விடுப்பு காலத்தை 26 வாரங்களாக உயர்த்தியது. இச்சட்டமானது 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி மாநிலங்களவையிலும், 2017ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.
- மத்திய அரசின் கீழ் உள்ள நிறுவனங்களான தொழிற்சாலை, சுரங்க தொழில், அரசு நிறுவனங்கள் மற்றும் கடை போன்ற பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் அனைவருக்கும் இந்த சட்டம் பொருந்தும்.
- இந்த சட்டத்தின் கீழ் விடுப்புக்கு விண்ணப்பிக்கும் பெண்கள் 12 மாதங்களில் குறைந்தபட்சம் 80 நாட்கள் பணிபுரிந்திருந்தாலும், மகப்பேறு விடுப்புக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் ஆவார்கள்.
பலன்கள் என்னென்ன?
- இந்த சட்டத்தின் மிகப்பெரிய பலமே மகப்பேறு காலத்தில் கருவுற்ற பெண்களை பணியிலிருந்து நீக்க முடியாது என்பதே ஆகும். மகப்பேறு காலத்தில் வெளியேற்றப்பட்டாலும் மகப்பேறு கால நன்மைகள் மற்றும் மருத்துவ சலுகைகளை அப்பெண் கேட்க முடியும். அதே சமயம் ஒழுங்கீன நடவடிக்கை காரணமாக பணியில் இருந்து நீக்கப்பட்டால் மேற்கண்ட சலுகையை பெற முடியாது.
- மகப்பேறு நலச்சட்டத் திருத்தத்தின் மூலம் பணிபுரியும் பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
- மகப்பேறு நலச்சட்டத்தின்படி, குழந்தை பிறக்கும் நாளில் இருந்து 8 வாரங்களுக்கு முன்னரே சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுக்கவும், மீதம் உள்ள நாட்களை குழந்தை பிறந்த பின்னர் எடுக்கவும் இந்த சட்டம் வகை செய்துள்ளது. கருவுற்ற தாய்மார்கள் தங்களின் விருப்பப்படியே 26 வாரங்களை பிரித்து கொள்ளலாம்.
- மகப்பேறு நலச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் 26 வார விடுமுறையானது முதல் இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும்.
- 3வது அல்லது அதற்கு மேல் குழந்தைகள் பிறக்கும்போது கருவுற்ற தாய்மார்களுக்கு 12 வாரங்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்படும்.
பணிக்கு செல்லும் பெண்கள் அனைவரும் மகப்பேறு நலச்சட்டத்தை அறிந்து கொள்வதுடன் தங்களுடன் பணிபுரியும் பெண்களுக்கும் எடுத்துரைக்கவும்.