லடாக்: கிழக்கு லடாக்கில் இரு நாட்டு படைகளும் பின் வாங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் குளிர் காலத்துக்கு தன்னுடைய நிலைகளை தயார் படுத்தி வருகிறது .
கடந்த சில வாரங்களாக சீனா இந்திய எல்லை அருகே பாலங்கள், சாலைகள் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக குளிர்காலத்துக்கு தயார் ஆகும் வகையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பி.எல்.ஏ வீரர்களுக்கு தேவையான குளிர்கால தங்குமிடங்களை வழங்குதல் உள்ளிட்ட வேளைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
நீண்ட காலமாக எல்லையில் நிலவி வந்த பதட்டம் கடந்த வாரம் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு ஓரளவிற்கு சுமூக முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தியா சீனா ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான 8ம் கட்ட பேச்சுவார்த்தையின் போது மூன்று கட்டங்களாக படைகளை விலக்கிக்கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டது.
ஆனாலும் சீனாவின் கடந்தகால செயல்களால் இந்திய நிலை சீனாவின் வாக்குறுதியை முழுதாக நம்பவில்லை. எதற்கும் தயார் நிலையிலேயே வைக்கப்பட்டிருந்தன. சீனா பின் வாங்கினால் மட்டுமே இந்திய துருப்புகளும் பின் வாங்கும் எனும் முடிவில் இருந்தன.
இந்த நிலையில் தான் ஒருபக்கம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தாலும் மறுபக்கம் குளிர்காலத்துக்கு சீன ராணுவம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. ரோடோக், தோலிங், காங்சிவார், சைடில்லா மற்றும் பல பகுதிகளில் துருப்புக்களை தங்க வைப்பதற்கான தங்குமிடங்களை பி.எல்.ஏ ராணுவம் உருவாக்கி வருகிறது. பியூ, மாபோடாங் மற்றும் பிற இடங்களில் தற்காலிக குளிர்கால கூடாரங்களையும் அமைத்துள்ளன . சில இடங்களில் பணிகள் முடிந்துவிட்டன. மற்ற பகுதிகளில் இன்னமும் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.
கல்வான் பகுதிக்கு அருகிலும், ஸ்பாங்கூர் த்சோ பகுதியிலும் சீனா சாலை தொடர்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதவிர அந்த பகுதிகளில் நிறுத்தப்பட்டிருக்கும் துருப்புகளும் சுழற்சி முறையில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பகுதியில் இருந்த படைவீரர்கள் வெளியேற்றப்பட்டு புதிய வீரர்களை கண்காணிப்புக்கு கொண்டுவரப்படுகின்றனர். மருத்துவ குழுவும் தொடர்ச்சியாக அழைத்துவரப்பட்டு அல்லது சுழற்சி முறையில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.