ஜம்மு காஷ்மீரின் நக்ரோட்டா பகுதியில் தீவிரதிகள் மீதான என்கவுண்டர் குறித்து பிரதமர் மோடி ட்வீட் செய்த அடுத்த நாள், தீவிரவாதிகளை பயன்படுத்தி இந்தியா மீது தாக்குதல் நடத்த முயற்சிப்பது தொடர்பாக பாகிஸ்தானுக்கு இந்திய எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் பாதுப்புக்காக தேவைப்பட்டால் பயங்கரவாதத்திற்கு எதிராக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் கூறியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஜம்மு காஷ்மீரின் நக்ரோட்டா பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையின் போது ஒரு லாரி மூலம் இந்தியாவிற்குள் நுழைந்து 26/11 தாக்குதல் போல மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்ட தீவிரவாதிகள் என்கவுண்டர் செய்யப்பட்டனர். இதுகுறித்து ட்வீட் செய்த பிரதமர் மோடி, பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் 4 தீவிரவாதிகளை எனக்கவுண்டர் செய்ததோடு அவர்களின் ஆயுதங்களையும் கைப்பற்றி இந்திய ராணுவம் அதிரடியாக செயல்பட்டுள்ளது. இதன் மூலம் மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது, என்று பிரதமர் மோடி தனது டிவிட்டில் குறிப்பிட்டு இருந்தார்.
நக்ரோட்டாவில் தீவிரவாதிகளிடம் இருந்து கைப்பற்றிய ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களை பார்க்கும் போது மிகப்பெரிய சதி திட்டத்திற்கு முயற்சி நடைபெற்றுள்ளது என்றும், காஷ்மீருக்கு சிறப்பு அங்கீகாரம் வழங்கும் 370வது சட்டப்பிரிவை நீக்கியத்தில் இருந்து அங்கு அமைதியை சீர்குலைக்க பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகள் குறித்தும் அரசு வட்டாரங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் தொடர் தீவிரவாத முயற்சிகள் குறித்து இந்தியா பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தான் தனது கட்டுப்பாட்டில் உள்ள எந்தவொரு பிரதேசத்தையும் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்திற்கு எந்த வகையிலும் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்கிற சர்வதேச கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையை இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியா, அதன் தேசிய பாதுகாப்பைப் உறுதிசெய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க உறுதியுடன் உள்ளதாக எச்சரித்துளளது. மேலும் இந்தியாவிற்கு எதிராக தொடரும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து இந்திய அரசாங்கம் தனது கவலையை வெளிப்படுத்தியது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் இந்தியாவில் நடைபெற்ற பல தீவிரவாத தாக்குதல்களில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு ஈடுபட்டு இருந்தது. குறிப்பாக 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாட்டையே உலுக்கிய புல்வாமா தாக்குதலிலும் இந்த அமைப்பு ஈடுபட்டிருந்தது. அந்த தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் பாலக்கோட்டில் இருந்த தீவிரவாதிகளின் பயிற்சி முகாம்கள் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தாக்குதல் மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.