லடாக்: ஐந்து மாதங்களுக்கு மேலாக இந்தியா சீனா உறவில் உரசல் இருந்தாலும், 7 சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும் இன்னமும் முழுமையான தீர்வு எட்டப்படவில்லை. கோடைகாலத்தில் தொடங்கிய பதட்டம் குளிர்காலம் வந்துவிட்டது இன்னமும் தொடர்கிறது . இப்போதுதான் அக்டோபர் மாதத்தின் மூன்றாவது வாரம் நடக்கிறது, ஆனால் அதற்குள்ளாகவே கிழக்கு லடாக்கில் வெப்பநிலை உறைபனிக்கு கீழே சென்றுவிட்டது. அங்குதான் தற்போது சுமார் 50 ஆயிரம் இந்திய படைவீரர்கள் சீன ராணுவத்தை எதிர்கொண்டு தயாராக நிற்கிறார்கள். வரும் நாட்களில் இங்கு வானிலை மிகவும் மோசமடையும். ஏப்ரல் வரை இந்த பகுதிகளில் இதே நிலைமை தான்.
வல்லுநர்கள் இப்போதே கிழக்கு லடாக் பகுதியை சியாச்சினுடன் ஒப்பிட தொடங்கியுள்ளனர். உலகின் மிக உயரமான போர்க்களம் தான் சியாச்சின். 1984-ல் இருந்து மட்டும் மிகவும் ஆபத்தான சியாச்சின் பகுதிகளில் பணியாற்றிய நூற்றுக்கணக்கான வீரர்கள் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் இங்குள்ள காலநிலை காரணமாக உயிரிழந்துள்ளனர்.
மிகவும் உயரமான இந்த பனிப்பாறைகளில் வெப்பநிலை மைனஸ் 60 டிகிரி செல்சியல்ஸ் வரை செல்லக்கூடும். பனிச்சரிவு, பனிப்புயல் மற்றும் உறைபனி காற்று ஆகியவற்றிலிருந்து வரும் ஆபத்தினால் ஒருவர் மூச்சுவிடுவதிலும் மற்றும் இதய துடிப்பிலும் நிலையான பாதிப்பை ஏற்படுத்தும். சுமார் 24 ஆயிரம் அடி உயரத்தில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பதும் அங்குள்ள வீரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். பெரும்பாலும் இந்த பகுதியில் இருக்கும் வீரர்களின் இறப்புக்கு குறைந்த வெப்பநிலையை காரணமாக உள்ளது. மனித உடல் சராசரியாக உற்பத்தி செய்யக்கூடியதை விட வேகமாக உடலின் வெப்பநிலையை இழக்கும் போது பெரிய பாதிப்பு ஏற்படுகிறது.
இதுதவிர கடுமையான உறைபனி காற்றினால் உடலின் திசுக்களுக்கு போதிய ஆக்சிஜன் கிடைக்காமல் hypoxia எனும் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. மேலும் இவ்வளவு உயரத்தில் ராணுவ தளவாடங்களை ஒழுங்கமைப்பதும் வீரர்களுக்கு மிகப்பெரிய சவால். இங்கிருக்கும் வீரர்களின் நிலையை உறுதிப்படுத்தவும், அத்யாவசிய பொருட்கள் சரியான நேரத்தில் சென்று சேர்வதற்காகவும் ஹெலிகாப்டர்கள் கூட தங்களின் உச்சவரம்பை மீறும் நிலை ஏற்படும். இவ்வளவு ஆபத்தான இந்த சியாச்சின் பகுதியில் அமைதியை நிலைநாட்ட இந்திய அரசாங்கம் ஒருநாளைக்கு 6 கோடி வரை செலவு செய்கிறது. அதிகபட்சமாக ஒரு வருடத்திற்கு 2,190 கோடி வரை செலவு செய்யப்படுகிறது.
கிழக்கு லடக்கிலும் கிட்டத்தட்ட அதே நிலை தான். கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூலை 15ம் தேதி சீன வீரர்களுடன் ஏற்பட்ட மோதலின் போது நம்முடைய சில வீரர்கள் மோதலுக்கு பிறகு அதிக உறைபனி குளிர் காரணமாக கூட இறந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. சியாச்சின் அளவுக்கு இங்கு குளிர் மிக கடுமையாக இல்லாவிட்டாலும் குளிர் காலங்களில் மைனஸ் 20 டிகிரி செல்சியல்ஸ் வரை செல்லும். குளிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்தியா வீரர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களும், குளிர் பகுதிகளில் அமைக்க கூடிய டெண்டர்களும் வாங்க வேண்டும்.
விரைவிலேயே குளிர்காலம் தொடங்க உள்ளதால் சாலைகள் பனியால் மூடப்படுவதற்கு முன்பே இந்திய ராணுவம் டாங்கிகள், வெடிமருந்துகள், வீரர்களுக்கு தேவையான துப்பாக்கிகளையும் எடுத்து செல்ல வேண்டியுள்ளது. சியாச்சின் போலவே உண்மையான எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதியிலும் துருப்புகளை நிறுத்துவதற்கான செலவு அதிகம் தான். இங்கு சுமார் 300 கிமீ தூரத்திற்கு 30,000 படைவீரர்களை நிறுத்துவதற்கு ஆண்டுக்கு 36,500 கோடி வரை செலவாகிறது.