புதுதில்லி : இந்தியா – சீனா எல்லையில் பதட்டத்தை தணிக்கும் விதமாக இரு நாடுகளுக்கும் இடையேயான 8ம் கட்ட பேச்சுவார்த்தை இந்த வாரம் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிழக்கு லடாக்கில் சீன ராணுவத்தினர் அத்துமீற முயன்றதையடுத்து இந்தியா- சீனா இடையே எல்லையில் பதட்டமான சூழல் நிலவுகிறது. கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக எல்லையில் நிலைமை மோசமடைந்துள்ளது. ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கில் இருநாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அதே போல சீன தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் அதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்த மோதலுக்கு பிறகு எல்லையில் நிலைமை மேலும் மோசமடைந்தது.
பின்னர் கடந்த மாதம் இறுதியில் மீண்டும் அத்துமீற முயன்ற சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தின் ஊடுருவல் முயற்சியை இந்தியாவின் சிறப்பு மலை பாதுகாப்பு படை முறியடித்தது. இந்தியா – சீனா இடையே நிலவும் பதட்டத்தை தணிக்க இரு நாடுகளுக்கும் இடையே பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஆனால் எதிலும் முடிவுகள் எட்டப்படவில்லை.
ஆரம்பத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் படி சீனா குறிப்பிட்ட சில பகுதிகளில் இருந்து படைகளை வாபஸ் வாங்க மறுப்பதால் பேச்சுவார்த்தையில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. கடந்த 12ம் தேதி நடைபெற்ற இந்திய மற்றும் சீன ராணுவ தளபதிகளுக்கு இடையேயான 7ம் கட்ட பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டது. அதில் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்த இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன. மேலும் இரு நாடுகளுக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகளை மோதல்களாக மாறும் சூழலை தவிர்க்கவும் முடிவு எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் தான் 8ம் கட்ட பேச்சுவார்த்தை இந்த வாரம் நடைபெற வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன. ஆனால் பேச்சுவார்த்தை நடைபெறும் தேதி முடிவாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை பொறுத்தளவில் உண்மையான எல்லை கட்டுப்பட்டு பகுதியில் ஏப்ரலுக்கு முந்தைய நிலை திரும்ப வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறது. ஆனால் சீனா அதை தொடர்ந்து மறுத்து வருகிறது. மேலும் பாங்காங் த்சோ நதியின் தென்கரையில் இந்தியா கைப்பற்றியுள்ள இடங்களை விட்டு வெளியேற வேண்டும் எனவும் சீனா கோரிக்கை வைத்து வருகிறது.
கடந்த மாதம் மாஸ்க்கோவில் நடைபெற்ற இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இடையிலான பேச்சுவார்த்தையிலும் சுமூக முடிவு எட்டப்படவில்லை. இந்த நிலையில் தான் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதும் குறிப்பிடத்தக்கது .
சீனாவை பொறுத்தவரை இந்தியாவை தவிர்த்து பல நாடுகளுடனும் மோதலில் ஈடுபட்டு வருகிறது. ஒரு பக்கம் இந்தியாவுடன் லடாக் எல்லையில் மோதலில் ஈடுபடும் அதே வேளையில் கிழக்கு சீன கடல் பகுதியில் ஜப்பானுடனும், தென் சீன கடல் பகுதியிலும் மலேசியா தைவான் உள்ளிட்ட நாடுகளுடனும் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. மேலும் வர்த்தக ரீதியாக அமெரிக்காவும் சீனாவும் சண்டையிட்டு வருகிறது. கொரோனா வைரஸ் குறித்து முன்கூட்டியே உலகை எச்சரிக்காதது, உய்கூர் முஸ்லிம்கள் மீதான மனித உரிமை மீறல், ஹாங்காங் புதிய சட்டம் என பல விவகாரங்களில் சீனாவை அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.