டெல்லி : ஆக்ஸ்போர்டு – ஆஸ்ட்ராசெனகா நிறுவனம் உருவாக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி மூன்றாம் கட்ட பரிசோதனையை வெற்றிகரமாக முடித்தால் ஜனவரி மாதம் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி நடைமுறைக்கு கொண்டுவரப்பட வாய்ப்புள்ளதாக சீரம் நிறுவனத்தின் சிஇஓ அடார் பூனவல்லா கூறியுள்ளார்.
கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல நாடுகளும் தீவிரமாக இறங்கியுள்ளன.இதில் ஒரு சில தடுப்பூசிகள் மட்டுமே நம்பிக்கை தர கூடியதாக மாறியுள்ளது. சீனா மற்றும் ரஷ்யாவில் கொரோனா தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டு வந்தாலும் அந்த தடுப்பு மருந்துகளும் இன்னமும் மூன்றாம் கட்ட மனித பரிசோதனையை முழுதாக முடிக்கவில்லை. இந்த தடுப்பூசி ரேஸில் அனைவராலும் எதிர்பார்க்கக்கூடியது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி தான். இந்த தடுப்பூசியை இந்தியாவில் தயாரிப்பதற்கு ஏற்கனவே புனேவில் இயங்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த நிலையில் தான் இந்த தடுப்பூசி மூன்றாம் கட்ட மனித பரிசோதனையை வெற்றிகரமாக பூர்த்தி செய்தால் இந்தியாவில் ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசி கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று சீரம் நிறுவனத்தின் சிஇஓ அடார் பூனவல்லா கூறியுள்ளார். இதுகுறித்து ஒரு பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது, சோதனைகள் வெற்றிபெற்று, ஒழுங்குமுறை அமைப்புகளின் ஒப்புதல்கள் சரியான நேரத்தில் கிடைத்தால் கொரோனா வைரஸ் தடுப்பூசியை 2021 ஜனவரிக்குள் எதிர்பார்க்கலாம். தடுப்பூசியின் பரிசோதனை முடிவுகள் அடுத்த மாதம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்கு தடுப்பூசி நோய்எதிர்ப்பு மற்றும் செயல்திறன் மிக்கதாக இருந்தால் மட்டுமே சாத்தியம் என்றும் கூறியுள்ளார்.
கோவிஷீல்டு தடுப்பூசி தொடர்பாக உடனடியாக அச்சம் கொள்ள தேவையில்லை, இந்தியாவிலும் பிற வெளிநாடுகளிலும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு இந்த மருந்தை செலுத்தி சோதனை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் நீண்டகால விளைவுகள் குறித்து தெரிந்துகொள்ள இரண்டிலிருந்து மூன்று ஆண்டுகள் வரை ஆகும் என அடார் பூனவல்லா தெரிவித்துள்ளார். தடுப்பூசி விலை நிர்ணயம் தொடர்பாக சீரம் நிறுவனம் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது, இது அனைவருக்கும் மலிவு விலையில் கிடைக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்,என்று அவர் கூறினார் சீரம் நிறுவனம் முதல்கட்டமாக 60 முதல் 70 மில்லியன் டோஸ்கள் தயாரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதற்கிடையே ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இந்தாண்டு இறுதிக்குள் இறுதிக்கட்ட பரிசோதனை முடிவுகள் வந்துவிடும் என்று நம்புவதாக கூறியுள்ளது. பிரிட்டிஷ் சட்டம் இயற்றுபவர்களிடம் தடுப்பூசி வேலை செய்ததா இல்லையா என்பது குறித்த விவரங்கள் இந்த ஆண்டு இறுதியில் வழங்கப்படும், அதன் பிறகு தடுப்பூசி குறித்த தரவுகளை கட்டுப்பாட்டாளர்கள் கவனமாக மதிப்பாய்வு செய்வார்கள். அதை தொடர்ந்து யாருக்கு முதலில் வழங்க வேண்டும் என்பது குறித்து அரசியல் முடிவுகள் எடுக்கப்படும் என்று ஆக்ஸ்போர்டு தடுப்பூசி சோதனையின் தலைமை ஆய்வாளர் ஆண்ட்ரூ பொல்லார்ட் கூறியுள்ளார்.
இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை கிறிஸ்துமஸ்க்கு முன்பே தடுப்பூசிகளை விநியோகம் செய்ய தயாராகி வருகிறது. இந்த தடுப்பூசி கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முக்கியமான திருப்பு முனையாக இருக்கும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள்.